Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோனியா காந்தி பிரதமராவதைத் தடுத்தவர் ராகுல் - நட்வர் சிங்: காங்கிரஸ் மறுப்பு

சோனியா காந்தி பிரதமராவதைத் தடுத்தவர் ராகுல் - நட்வர் சிங்: காங்கிரஸ் மறுப்பு
, வியாழன், 31 ஜூலை 2014 (11:08 IST)
சோனியா காந்தி பிரதமராவதைத் தடுத்ததே ராகுல் காந்திதான் என்று வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் கூறியதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளத.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நட்வர் சிங் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

“கடந்த 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் சோனியா பிரதமர் பதவியேற்பதை அவரது மகன் ராகுல் காந்தி எதிர்த்தார்.

சோனியா பிரதமரானால், தனது தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி போன்று கொல்லப்படுவார் என்று ராகுல் காந்தி கூறினார். ஆகையால் மகன் என்ற முறையில், சோனியா பிரதமர் பதவியேற்பதை அனுமதிக்க முடியாது என்று ராகுல் தெரிவித்தார். தனது கருத்தில் அவர் பிடிவாதமாக இருந்தார். இதனால்தான் பிரதமர் பதவியை சோனியா காந்தி ஏற்கவில்லை.

இதுதொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் மன்மோகன் சிங், சோனியா காந்தியின் குடும்ப நண்பர் சுமன் துபே, பிரியங்கா ஆகியோருடன் நான் கலந்து கொண்டிருந்தேன்.

இந்த ஆலோசனையில், சோனியா காந்தி பிரதமராவதை ராகுல் விரும்பவில்லை என்ற தகவலை பிரியங்கா தெரிவித்தார். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை பிரதமராக்க சோனியா காந்தி விரும்பினார்.

ஆனால் உடல்நலனை காரணம் காட்டி, பிரதமர் பதவியை ஏற்க அவர் மறுத்து விட்டார். அதையடுத்தே மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார்.

நான் எழுதியுள்ள "ஒன் லைஃப் இஸ் நாட் எனஃப் என்ற சுயசரிதை நூலில் இந்த தகவல்கள் இடம்பெறுவதை தடுத்து நிறுத்தும் எண்ணத்துடன் சோனியா காந்தியும், அவரது மகள் பிரியங்காவும் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி என்னை சந்தித்துப் பேசினர். அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நான் எவ்வாறு பலிகடா ஆக்கப்பட்டேன் என்பது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன்.

ஆனால் அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று சோனியா காந்தி கூறினார். மேலும், அதற்காக சோனியா காந்தி என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.

எனினும்,சோனியா குறித்த தகவலை எனது புத்தகத்தில் வெளியிடப் போவதாகவும் அவர்களிடம் கூறி விட்டேன்“ இவ்வாறு நட்வர் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் நட்வர் சிங்கின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், "தொலைக்காட்சியில் நட்வர்சிங் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் உள்நோக்கம் வாய்ந்தவை ஆகும்.

தனது புத்தகத்துக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நட்வர்சிங் இதுபோல் கூறியுள்ளார்“ என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil