Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஏழு கேள்விகள்: பிரதமர் மோடி பதில் சொல்வாரா?

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஏழு கேள்விகள்: பிரதமர் மோடி பதில் சொல்வாரா?
, சனி, 25 ஜூலை 2015 (17:15 IST)
பீகாருக்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் 7 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
 

 
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி அவர்களே உங்களுக்கு நான் 7 கேள்விகளை முன்வைக்கிறேன். அவற்றில் 2 பீகார் மாநிலம் சம்பந்தப்பட்டது, 5 கேள்விகள் பொதுவானவை. இந்திய தேசம் உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
 
14 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி பீகாருக்கு வருகை தருகிறார். அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். நிறைய வாக்குறுதிகள் எங்களுக்காக காத்திருப்பது தெரியும். ஆனால், ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என நிதிஷ் குமார் பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார்.
 
பிரதமர் மோடி இன்று பீகார் தலைநகர் பாட்னாவுக்கு வருகிறார். பிறகு முஸாபர்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.
 
இந்நிலையில் பிரதமருக்கு நிதிஷ் குமார் முன்வைத்துள்ள 7 கேள்விகள்:
 
  • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றீர்கள். மக்கள் 14 மாதங்களாக அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அது எப்போது நிறைவேற்றப்படும்?
  •  
  • 14 நிதி ஆணைய அறிக்கையும், பிற்படுத்தப்பட்ட மண்டலத்துக்கான நிதி ஒதுக்கீடு திரும்பப்பெறப்பட்டதும் பீகார் மாநிலம் 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. இது தான் நீங்கள் கூறிய கூட்டாட்சி தத்துவமா?
  •  
  • கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை தரப்படும் என்றீர்களே? அதைப் பற்றி ஏதாவது தகவல் இருக்கிறதா?
  •  
  • விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுத்தீர்கள். பின்னர் முதல் பல்டியாக குறைந்தபட்ச ஆதார விலையில் கை வைத்தீர்கள். அதன் பிறகு விவசாயிகள் துயரை அதிகரிக்க நிலச் சட்டத்தை முன்னெடுத்துள்ளீர். இதுதான் விவசாயிகள் நலன் பேணும் விதமா?
  •  
  • 2022-க்குள் அனைவருக்கும் குடிநீர், மின்சார வசதியுடன் வீட்டு வசதி செய்துதரப்படும் எனக் கூறினீர்கள். ஆனால், இதுவரை இத்திட்டத்துக்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படாமல் இது எப்படி சாத்தியமாகும்?
  •  
  • ஜன்தன் திட்டத்தை துவக்கி வைத்தீர்கள். இன்று நிறைய பேருக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. ஆனால் அதனால் மட்டும் ஏழைகளுக்கு என்ன பயன் கிடைக்கும்? இன்று ஜன்தன் திட்டம் மூலம் தொடங்கப்பட்ட 70% வங்கிக் கணக்குகள் செயல்படாமல் இருக்கின்றன.
  •  
  • பாஜக அரசால் சில கார்ப்பரேட் முதலாளிகள் பயனடைந்துள்ளது உண்மையே.ஆனால், சாமானியனுக்கு 'நல்ல நாள்' வருவது எப்போது?
 
பீகார் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், மோடிக்கு 7 கேள்விகளை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முன்வைத்து பரபரப்பை கூட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil