Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாட்டிறைச்சி அரசியல் கும்பலின் கொட்டத்தை அடக்க வேண்டும்: வைகோ உறுமல்

மாட்டிறைச்சி அரசியல் கும்பலின் கொட்டத்தை அடக்க வேண்டும்: வைகோ உறுமல்
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (22:21 IST)
மாட்டிறைச்சியை வைத்து அரசியல் செய்யும் கும்பலின் கொட்டத்தை அடக்கியே ஆகவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஆவேசம் காட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு கடந்த ஓர் ஆண்டில், இந்துத்துவா மதவெறிக் கூட்டத்தின் வன்முறைகள் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இந்து மத வெறிக் கும்பல் செயல்பட்டு வருகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு துணை போதுகிறது. இந்த செயல் மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது.
 
பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றப் பின்பு, இந்தியாவில் பசு வதையை தடை செய்ய தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்துத்துவா சக்திகள் சில   
மக்களின் உணவுப் பழக்கத்தில் தலையிட்டு, மதத்தின் பெயரால் திட்டமிட்டு வன்முறைக்கு தூபமிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்தான், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம், கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா என்ற கிராமத்தில் முகமது இக்லாக் என்பவர் பசு மாட்டிறைச்சி சமைத்து குடும்பத்துடன் உண்டதாக கூறி, 200 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் வீடு புகுந்து தாக்கி முகமது இக்லாக்கை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர்.
 
ஜம்மு காஷ்மீர் மாநில லான்கேட் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. சேக் அப்துல் ராஷீத், சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் மாட்டிறைச்சி உணவு விருந்து அளித்ததாக கூறி, ஜம்மு காஷ்மீர் மாநில சட்ட மன்றத்தில் பாஜகவினரால் தாக்கப்பட்டார்.
 
இந்துத்துவா மதவெறிக் கூட்டத்தின் கோர தாண்டவத்தால், நாட்டின் மதச் சார்பின்மை தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது. இந்துத்துவா மதவெறிக் கருத்துகளை எதிர்க்கின்ற எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் படுகொலை செய்யப்படும் நிலைமை தொடர்ந்து நடைபெறுகின்றன.
 

மராட்டிய மாநிலம் புனே நகரில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர், இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகப் போராடிய முற்போக்கு எழுத்தாளர் கோவிந்த் பன்சாரே, கன்னட மொழி அறிஞர் பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
 
இந்துத்துவா கும்பலின் கொலை வெறிக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நரேந்திர மோடி அரசு, இந்தியப் பண்பாட்டு பன்முகத்தன்மையை பாதுகாக்கவில்லை என்று கூறி, பிரபல எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் உறவினருமான நயன்தாரா சேகல் கண்டனம் தெரிவித்து, தனக்கு அளிக்கப்பட்ட  சாகித்ய அகாதமி விருதை திருப்பி கொடுத்துவிட்டார்.
 
மேலும், பேராசிரியர் கல்புர்கி கொலையைக் கண்டித்து இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் தமது சாகித்ய அகாதமி விருதை திருப்பி அளித்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து எழுத்தாளர்களும், அறிவு ஜீவிகளும் மதவெறியர்களால் கொல்லப்படுவதைக் கண்டித்து கவிஞரும், லலித் கலா அகாதமியின் முன்னாள் தலைவருமான அசோக் வாஜ்பேயி தமது சாகித்ய அகாதமி விருதை திருப்பிக் கொடுத்துள்ளார்.
 
இந்த சம்பவங்கள் எல்லாம், இந்தியாவில் மதவெறியாளர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்தி உள்ளது. இந்துத்துவா மதவெறிக் கும்பல்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒருசேர கைகோர்த்து எழ வேண்டும்.
 
இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், அதற்குத் துணைபோகும் நரேந்திர மோடி அரசையும் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil