Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் ஏராளமாக உள்ளன: ராமதாஸ்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் ஏராளமாக உள்ளன: ராமதாஸ்
, ஞாயிறு, 26 ஜூலை 2015 (00:42 IST)
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் ஏராளமாக உள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பாக அவ்வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) அதிகாரி வி. தியாகராஜன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் வெளியிட்ட புதிய தகவல்கள் இவ்வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் இப்பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள புதிய நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.
 
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டது. பல்வேறு நிலைகளில் அவர்களின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்ட நிலையிலும், கடந்த 25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்திருப்பதால் அவர்களின் விடுதலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக தடைபட்டிருக்கிறது.
 
இந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோர் தண்டிக்கப்பட்டது குறித்து இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் உள்ளிட்டோர் பின்னாளில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 
அதைவிட முக்கியமாக இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் தியாகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் ஏற்கனவே தெரிவித்த தகவல்களை மீண்டும் ஒருமுறை விரிவாக தெரிவித்ததுடன், அந்த உண்மையை உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ‘‘ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலத்தை நான் தான் பதிவு செய்தேன். ‘‘இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கிவந்து சிவராசனிடம் கொடுத்தேன். ஆனால் அவை எதற்காக வாங்கப்பட்டன என்பது எனக்குத் தெரியாது’’ என்று பேரறிவாளன் அளித்த வாக்குமூலம் உண்மையா... பொய்யா? என்பது எனக்குத் தெரியவில்லை.
 
ஆனால், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் இருந்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் அவரது வாக்குமூலத்தின் ஒரு பகுதியை நீக்கிவிட்டு பதிவு செய்தேன். ஒருகட்டத்தில் சிவராசனின் வயர்லெஸ் உரையாடல் பதிவில் தங்களின் சதித்திட்டம் ஒரு இந்தியப் பெண்மணி தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது தான் அறிவு அளித்த வாக்குமூலம் உண்மை என எனக்குத் தெரிந்தது.ஆனால், அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
 
வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்திருந்தால் பேரறிவாளன் இன்று வெளியில் நடமாடிக் கொண்டிருந்திருப்பார். பேரறிவாளன் அப்பழுக்கற்றவர்; ஒழுக்க சீலர்; அவர் மீது எந்தத் தவறும் கிடையாது. அப்போது நான் செய்த தவறை திருத்தும் நோக்குடன் நடந்த உண்மைகள் அனைத்தையும் உறுதிமொழிப் பத்திரமாக தயாரித்து மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்கறிஞரிடம் அளித்திருக்கிறேன். அதை அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்பது தான் தியாகராஜன் தெரிவித்த புதிய தகவல் ஆகும். இதன் மூலம் இவ்வழக்கில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் பொய்யானவை என நான் தொடர்ந்து கூறிவந்தது உண்மை என்று உறுதியாகிவிட்டது.
 
அதுமட்டுமின்றி, ‘‘ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் ஏராளமாக உள்ளன. நீதிபதி ஜெயின் ஆணையம் குறிப்பிட்ட அம்சங்கள் பற்றி முறையாக விசாரணை நடத்தப் படவில்லை. இந்த வழக்கு விடுதலைப்புலிகள் குறித்த கோணத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்டது.
 
உண்மையில் இஸ்ரேல் நாட்டின் மொசாத் உள்ளிட்ட பல்வேறு நாட்டு உளவு அமைப்புகளின் தொடர்பு குறித்த கோணத்திலும் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ராஜிவ் கொலையில் உள்நாட்டு சதியும் இருக்கலாம்’’ என்றும் தியாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார். அவர் வெளியிட்ட தகவல்களின் மூலம் இந்த வழக்கின் அடிப்படையே தகர்க்கப்பட்டிருக்கிறது. தியாகராஜன் வெளியிட்டுள்ள புதிய தகவல்களின் அடிப்படையிலும் இவ்வழக்கை விசாரிக்க வேண்டியது அவசர, அவசியமானது ஆகும்.
 
ஆனால், மத்திய அரசோ இவ்வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. நிரபராதிகளுக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கு கூடுதல் தண்டனை வழங்க மத்திய அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.
 
ராஜிவ் கொலை வழக்கில் தியாகராஜன் புதிய தகவல்களை வெளியிட்டுள்ள நிலையில், அவர் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தை உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பேரறிவாளனும், மற்றவர்களும் விடுதலை செய்யப் பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் உடனே மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil