Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புனேவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டார் ராஜ்நாத் சிங்

புனேவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டார் ராஜ்நாத் சிங்
, வியாழன், 31 ஜூலை 2014 (15:08 IST)
புனே அருகே கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட  பகுதியில் மீட்பு பணிகளைப் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  பார்வையிட்டார் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

புனே அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தவர்களுள் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன மேலும் 150 க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

புனேவில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலின் கிராமத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 44 வீடுகள் புதையுண்டன. இந்த துயர சம்பவத்தில் 200 பேர் சிக்கியிருப்பதாக தெரியவந்தது. 30 பேரின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அங்கு கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் புனே மாவட்டம் மாலின் கிராம மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது மலையின் ஒரு பகுதி சரிந்து அடிவாரத்தில் உள்ள வீடுகள் மீது விழுந்தது. மணலுடன் பெரிய பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. வேரோடு மரங்களும் சாய்ந்து விழுந்ததால் பல வீடுகள் புதையுண்டன.

இந்த துயர சம்பவத்தால் ஏராளமானோர் தங்களது வீட்டுக்குள்ளேயே பலியாகினர். மேலும் பலர் அலறியடித்து கொண்டு வெளியேறினார்கள். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் 300 பேர் வரவழைக்கப்பட்டனர். மேலும் துணை ராணுவத்தினரும் மீட்பு பணிக்காக விரைந்தார்கள். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் சிலர் உயிருடன் இருக்கக்கூடும் என்பதால், மீட்பு பணியை மிகவும் கவனத்துடன் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுடன் 70 ஆம்புலன்சு வேன்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று  ஆய்வு செய்தார். அங்கு நடை பெற்ற வரும் மீட்பு பணிகளைப் பார்வையிட்டார்.

அப்போது பேசிய அவர், “நிலச்சரிவிற்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு பின்பே தெரிய வரும். மேலும் மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளையும், நிவாரணத்திற்கு தேவையான உதவிகளையும் மத்திய அரசு கண்டிப்பாக செய்யும்“. என்றும் தெரிவித்தார் பின்னர் மாலின் கிராமத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil