Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியாம்!

சாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியாம்!
, வெள்ளி, 28 நவம்பர் 2014 (18:48 IST)
சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு ரூ.26 கோடிக்கு மேலாக செலவு செய்யப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரியானா மாநில சர்ச்சை சாமியார் ராம்பால் (வயது 63) 2006 ஆம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார். அதில் ஜாமீனில் வந்த நிலையில், அவர் மீது பஞ்சாப், அரியானா நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கலானது. அதில் அவர் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்டு பிறப்பித்து, 21 ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என அரியானா காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. 
 
இதையடுத்து ஆசிரமத்தை சுற்றி வளைத்து சாமியாரை கைது செய்வதற்கு காவல்படை அங்கு விரைந்தது. காவல்துறையினர் மீது ஆசிரமத்திற்குள் இருந்து சாமியார் ஆதரவாளர்கள், அவரது ஆர்.எஸ்.எஸ்.எஸ். படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், பெட்ரோல் குண்டுகளை வீசினர். சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. இதற்கிடையே ஆசிரமத்தில் அடைபட்டிருந்த நிலையில், 5 பெண்கள், ஒரு குழந்தை என 6 பேர் உயிரிழந்திருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு வழியாக, சாமியார் ராம்பாலை துணை ராணுவத்தின் துணையுடன் காவல்துறையினர் கடந்த 19 ஆம் தேதி கைது செய்தனர்.
 
இதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி காவலுக்கு அனுப்பட்ட சாமியார் ராம்பால் பலத்த பாதுகாப்புடன் இன்று பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கனவே சாமியாரை கைது செய்ய நடத்தப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி ஹிசார் ஆசிரமத்தில் சாமியாரை கைது செய்ய நடத்தப்பட்ட ஆப்ரேஷன் தொடர்பான விரிவான அறிக்கையை அரியானா டி.ஜி.பி. எஸ்.என். வசிஷ்த் தாக்கல் செய்துள்ளார்.  
 
மத்திய மற்றும் மாநில அரசுகள் சாமியாரை கைது செய்ய ரூ.26 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுகள் அளித்த தகவலின்படி, அரியானா மாநில அரசு ரூ.15.43 கோடி, பஞ்சாப் மாநில அரசு ரூ.4.34 கோடி, சண்டிகார் நிர்வாகம் ரூ.3.29 கோடி, மத்திய அரசு ரூ. 3.55 கோடி என மொத்தம் 26.61 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு ஆன செலவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம், காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 
 
சாமியார் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட 909 பேர் குறித்து விசாரிக்கவும், கைது செய்யப்பட்டவர்கள், காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களா இல்லை, முன்னாள் படைவீரரா என்பது குறித்து தெரிந்துக் கொள்ளவும் காவல்துறையிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil