இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் 15 நகரங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. அதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் நடத்திய தாக்குதலில் இதுவரை 3 பெண்கள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. சீனாவிடமிருந்து பாகிஸ்தான் வாங்கி லாகூரில் வைத்திருந்த வான்வழி தாக்குதல் முறியடிப்பு அமைப்பை இந்திய ராணுவம் அழித்தது.
இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பீரங்கிகளை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் பகுதியில் ஏவப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய வான்வெளி ஏவுகணை தடுப்பு அமைப்புகள் செயலிழக்க செய்துள்ளன.
இந்திய பாதுகாப்புத் துறை தகவலின்படி, ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர், லூதியானா, சண்டிகார், ஆதம்பூர் உள்ளிட்ட 15 நகரங்களை தாக்கும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K