Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பாகிஸ்தான் ராணுவம் 19 முறை தாக்குதல் - அருண் ஜேட்லி

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பாகிஸ்தான் ராணுவம் 19 முறை தாக்குதல் - அருண் ஜேட்லி
, புதன், 23 ஜூலை 2014 (14:36 IST)
நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் 19 முறை தாக்குதல் நடத்தியதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
 
‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துணிவற்றது, பலவீனமானது’ என்று பிரதமர் பதவிக்கு வரும் முன் மோடி கூறிவந்தார். இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கேட்டதற்கு பதில் அளித்து பேசும்போது பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறியதாவது: பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துவருகிறது. இந்தியா தலை குனிய இடம் தர மாட்டோம். ஜூலை 16 ஆம் தேதி வரையில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 54 முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. மே 26 முதல் ஜூலை 17 வரையில் 19 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
 
சண்டை நிறுத்த ஒப்பந்த மீறல் சம்பவங்கள் பற்றி பாகிஸ்தானின் உயர் அதிகாரிகள் நிலையில் எழுப்பி பேசுகிறோம். இதற்காக தனி தொலைத் தொடர்பு வசதி, கொடி அமர்வுக் கூட்ட வசதி ஆகியவை உள்ளன.
 
மே 27 ஆம் தேதி டெல்லி வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி சண்டை நிறுத்த உத்தரவை மீறாமல் இருக்கும்படி வற்புறுத்தினார். எல்லையில் அமைதி நிலவுவது அவசியம் என்பதையும் நவாஸ் ஷெரீப்பிடம் பிரதமர் வலியுறுத்தினார்.
 
எல்லைக்கு அப்பாலிருந்து ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் நிகழ்வது தொழில்நுட்பத்தின் உதவியாலும் போதிய படைகளை நிறுத்தியிருப்பதன் மூலமும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
இரு தரப்பு உறவு மேம்பட இரு நாடுகளின் வெளியுறவு செயலர்கள் நிலையில் சந்தித்துப் பேசுவது எனவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil