Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'பகவத் கீதை' தேசிய புனித நூலா பகவத் கீதை? - நாடாளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் மீது எதிர்க்கட்சிகள் சரமாரி தாக்கு

'பகவத் கீதை' தேசிய புனித நூலா பகவத் கீதை? - நாடாளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் மீது எதிர்க்கட்சிகள் சரமாரி தாக்கு
, புதன், 10 டிசம்பர் 2014 (17:53 IST)
'பகவத் கீதை' தேசியப் புனித நூலாக அறிவிக்கப்படும் என்று சுஷ்மா சுவராஜ் பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இவ்விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
 
இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை மாற்றியமைக்க பாஜக மேற்கொள்ளும் வஞ்சக முயற்சியே பகவத் கீதையை தேசிய புனித நூலாக்கும் திட்டம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின.
 
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இவ்விவகாரத்தை எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, "சுஷ்மா சுவராஜின் கருத்துக்கு இந்த அவை கண்டனம் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் பல்வேறு மத நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியே புனித நூல் உள்ளது. இந்நிலையில் கீதையை மட்டும் தேசிய புனித நூலாக எப்படி அறிவிக்க முடியும்.
 
இதை சுஷ்மாவின் தனிப்பட்ட கருத்தாக பார்க்க முடியவில்லை. இதன் பின்னணியில் பாஜக முக்கிய தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ். பெரும் புள்ளிகளும் இருக்கின்றனர். இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை சிதைக்கும் வகையில் பாஜக வஞ்சனை செய்கிறது. இந்த அவை சுஷ்மா கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
 
அதேபோல் பள்ளிகளில் சமஸ்கிருத்தை திணிக்க பாஜக முனைப்பு காட்டுவது ஏன்? சமஸ்கிருதம் போல் தமிழ் மொழியும் பழமையான மொழியே. அப்படியிருக்க சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் சிறப்பு அந்தஸ்து" என்றார்.
 
அப்போது குறுக்கிட்டுப் பேசிய பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி, "கீதை மதம் சார்ந்த புத்தகம் அல்ல அது தனிப்பட்ட நபர்களின் செயல்பாடுகளை எடுத்துக் கூறும் நூல். கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி பேசினால்கூட எதிர்க்கட்சியினர் மதச்சார்பற்ற கொள்கைக்கு பாதகம் வந்துவிட்டது என்கின்றனர். இந்த தேசமே பகவத் கீதையால் பெருமை கொண்டுள்ளது" என கூறினார்.
 
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் டி.ராஜா கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், "இந்தியாவின் தேசிய புனித நூல் அரசியல் சாசனம் மட்டுமே" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil