Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி தலைமையிலான நேருவின் 125ஆவது பிறந்தநாள் கமிட்டி: சோனியா குடும்பம் புறக்கணிப்பு

மோடி தலைமையிலான நேருவின் 125ஆவது பிறந்தநாள் கமிட்டி: சோனியா குடும்பம் புறக்கணிப்பு
, ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (11:35 IST)
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தின விழா குழு நேற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட 5 நபர்கள் அடங்கிய குழுவுக்கு டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று உருவாக்கப்பட்ட புதிய குழுவில், மேற்படி நபர்களுக்கோ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கோ இடம் அளிக்கப்படவில்லை.
 
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
வரும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி ஜவஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தினமாகும். இதைக் கொண்டாடும் வகையில், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த குழு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
புதிய குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைவராக இருப்பார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கலாசாரத் துறை அமைச்சர் ஸ்ரீபாத் யேசோ நாயக் ஆகியோர் இந்தக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களாக அங்கம் வகிப்பர்.
 
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்தியப் பிரதேச கவர்னர் ராம் நரேஷ் யாதவ், சிக்கிம் முன்னாள் கவர்னர் பி.பி. சிங், வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் எம்.கே. ரஸ்கோத்ரா, மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் ஜெனரல் சுபாஷ் காஷ்யப், மூத்த பத்திரிகையாளர்கள் ரஜத் சர்மா, ஸ்வபன் தாஸ்குப்தா, எம்.ஜே.அக்பர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்பு அக்குழுவின் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உறுப்பினர்கள் சோனியா காந்தி, பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல் உள்பட யாருக்குமே புதிதாக அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனினும் ஆறுதல் பரிசு போல், நேரு மற்றும் இந்திரா காந்தியின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங், சுமன் தூபே மற்றும் மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலர் நரேஷ் சந்திரா ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil