Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தமே இல்லையாம்: மத்திய அரசு சொல்கிறது

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தமே இல்லையாம்: மத்திய அரசு சொல்கிறது
, வியாழன், 3 ஜூலை 2014 (16:02 IST)
கச்சத்தீவில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மையப்படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவர் அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
 
கச்சத்தீவை மீட்டு, அங்கு தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகள் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உள்பட தமிழக அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ‘இந்தியா - இலங்கை இடையிலான 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை’ என்று தெரிவித்துள்ளது.
 
இதற்கிடையே, கோவையைச் சேர்ந்த சமூக சேவகர் சஞ்சய் காந்தி என்பவர் மத்திய வெளியுறவு அமைச்சகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பதிலைப் பெற்றுள்ளார். இலங்கைக்கான இந்திய வெளியுறவு அமைச்சக துணைச் செயலாளர் மாயங்க் ஜோஷி கையெழுத்திட்டு அளித்துள்ள அந்த பதிலில், ‘தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா - இலங்கை இடையில் கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. அதேநேரம் இரு நாடுகளுக்கு இடையிலான கடல்நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப்பந்தம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த பதில் வெளியுறவுத்துறை மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்தத் தகவல் மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு மீட்பு இயக்கத்தினருக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதுகுறித்து சமூக சேவகர் சஞ்சய் காந்தி கூறும்போது, ‘‘கச்சத்தீவு ஒப்பந்தத்தின் நகல் வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறையிடம் கேட்டேன். அவர்கள் அப்படி ஒரு விண்ணப்பமே இல்லை என்று பதில் அளித்துள்ளனர். எனவே, இல்லாத ஒப்பந்தத்தை இருப்பதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் வேலை நடக்கிறது. கடல்நீர் எல்லை தொடர்பான வரையறையிலும், இரு நாடுகளிடையே எந்தவிதமான அரசு முத்திரையோ, நாடாளுமன்ற அனுமதியோ, அரசு அதிகாரிகளின் கையெழுத்தோ இல்லை. எனவே, வெறும் வெற்றுத்தாளை ஒப்பந்தம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை’’ என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil