Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவே ஒரு வருடமாகும்! - அதிர்ச்சி தகவல்

500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவே ஒரு வருடமாகும்! - அதிர்ச்சி தகவல்
, வியாழன், 1 டிசம்பர் 2016 (10:56 IST)
ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேவையான 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கே இன்னும் ஒரு வருட காலம் ஆகும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியுள்ளார்.


 

அவர் அளித்துள்ள விபரம் வருமாறு:

இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதற்கு என்று பாரதிய ரிசர்வ் பாங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் மைசூரிலும், மேற்குவங்க மாநிலத்தில் சல்போனியிலும் உள்ள இரண்டு அச்சகங்களை நிர்வகிக்கிறது.

இந்த இரண்டு அச்சகங்களும் ஒரு நாளைக்கு இரண்டு ஷிப்ட் அடிப்படையில் வருடத்திற்கு ரூபாய் தாள்களாக எண்ணிக்கையில் 1600 கோடி அளவிற்கு அச்சடிக்கும் திறமை வாய்ந்தவை.

மேலும், ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் இரண்டு அச்சகங்கள் நாசிக் (மகாராஷ்டிரா) மற்றும் தேவாஸ் (மத்தியப்பிரதேசம்) ஆகிய இடங்களில் உள்ளன. நிதியமைச்சகத்தின் சமீபத்திய வருடாந்திர அறிக்கையின்படி இந்த இரண்டு அச்சகங்களும் மொத்த ரூபாய் தாள்களின் தேவையில் 40 சதவீதம் வரை அச்சடிக்க தகுதி வாய்ந்தவை.

ஆக நான்கு அச்சகங்களும் இணைந்து மொத்தமாக தற்போதுள்ள நடைமுறைப்படி இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிந்தால் ரூபாய் தாள்களாக எண்ணிக்கையில் வருடத்திற்கு 2,666 கோடி அளவிற்கு அச்சடிக்கும் திறன் படைத்தவை.

புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுக்கள்:

மத்திய அரசாங்கம் வழங்கும் புள்ளி விவரப்படி 2016 நவம்பர் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ரூபாய் தாள்களின் மதிப்பு 17,54,000 கோடி ரூபாய். இதில் 45 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள். இதன் மதிப்பு ரூ.7,89,000 கோடி. இது எண்ணிக்கையில் 1578 கோடி தாள்கள். 39 சதவீதம் 1000 ரூபாய் நோட்டுக்கள். இதன் மதிப்பு ரூ. 6,84,000 கோடி.

இது எண்ணிக்கையில் 684 கோடி தாள்கள். 1000 ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாக 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 342 கோடி தாள்கள் அச்சடித்தாலே போதுமானது. மத்திய அரசாங்கம் புதிய 2000 ரூபாய் தாள்கள் அச்சடிக்கும் பணியை செப்டம்பர் மாதமே துவங்கிவிட்டதாக கூறுகிறது. அதன்படி ஏறக்குறைய இரண்டு மாத காலத்தில் அப்பணி நிறைவடைந்திருக்கும்.

500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க எவ்வளவு காலமாகும்?:

நான்கு அச்சகங்களின் திறன் வருடத்திற்கு 2666 கோடி தாள்கள். மூன்று ஷிப்டுகளில் பணிபுரிந்தால் இதன் திறன் 4000 கோடி தாள்களாக உயரும். இதில் 20 சதவீத திறன் 10 ரூபாயிலிருந்து 100 ரூபாய் நோட்டுக்கள் வரை அச்சடிக்க பயன்படுத்தப்படும்.

மீதமுள்ள 80 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதற்காக பயன்படுத்துவதாக எடுத்துக் கொண்டால், இதனை அச்சடிப்பதற்கான திறன் வருடத்திற்கு 3200 கோடி தாள்களாகும்.

புழக்கத்திலிருந்து செல்லாததாக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை 1578 கோடி தாள்கள். சுமார் 20 சதவீதம் வரை கறுப்புப் பணமாக இருக்கும் என்றும், அந்தப் பணம் வங்கிகளுக்கு வராது என்றும் கூறப்படுகிறது.

அதை அப்படியே ஏற்றுக் கொண்டால் அந்த அளவிற்கு புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை குறைத்துக் கொள்ளலாம். இதன்படி செல்லாததாக்கப்பட்ட 500 ரூபாய் தாள்களான 1578 கோடி தாள்களில் 20 சதவீதத்தை கழித்தால் மீதமுள்ள 80 சதவீதமான 1262 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும்.

ஆனால், 1000 ரூபாய் நோட்டுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டதால் குறைந்தபட்சம் அதில் 25 சதவீதமாவது புதிய 500ரூபாய் நோட்டுக்களாக புழக்கத்தில் வந்தால்தான் நிலைமை சகஜமாகும் என்றும் ஒரு கணிப்பு உள்ளது.

அவ்வாறெனில் செல்லாததாக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பில் 25 சதவீதம் கூடுதலாக 500 ரூபாய் தாள்கள், அதாவது கூடுதலாக 342 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். இதன்படி மொத்தத் தேவையாக 1262 கோடி + 342 கோடி = 1604 கோடி எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட வேண்டும்.

50 நாட்களில் தட்டுப்பாடு தீராது:

3200 கோடி தாள்கள் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க ஒரு வருட காலமாகும். அப்படியானால் தற்போதைய தேவையான 1604 கோடி தாள்கள் அச்சடிக்க 6 மாத காலமாகும். நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே இப்பணி துவங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும்.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சொல்வது போல் 50 நாட்களில் ரூபாய் தட்டுப்பாடு தீருவதற்கான வாய்ப்பில்லை. எனவே, மத்திய அரசு முதலில் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். மேலும் ரூபாய் தட்டுப்பாட்டைத் தீர்க்க விரைந்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தகவல் உதவி: தீக்கதிர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பானியின் மாஸ்டர் ப்ளான்: ஜியோ பயனர்களே உஷார்!!