Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடல் ஆராய்ச்சி செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

கடல் ஆராய்ச்சி செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
, ஞாயிறு, 29 மார்ச் 2015 (11:28 IST)
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-டி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்களையும் தயாரித்து வருகிறது. தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது.
 
அதன்படி ஏற்கனவே 3 செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. 2013-ம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஏ செயற்கைகோள், பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட் மூலமும், கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பி செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி.24 ராக்கெட் மூலமும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-26 ராக்கெட் மூலமும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டன.
 
இதைத்தொடர்ந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-டி என்ற செயற்கைகோளை பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்கான, இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் எனப்படும் ‘‘கவுண்ட்டவுன்’’ முடிந்து, நேற்று மாலை 5.19 மணிக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-டி என்ற செயற்கைகோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து தீப்பிழம்பை கக்கியபடி விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.
 
3 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2ஆம் நிலையில் திரவ எரிபொருளும், நிரப்பப்பட்டு இருந்தது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்டின் எடை 320 டன் ஆகும். செயற்கைகோள் 1,432 கிலோ எடையை கொண்டது.
 
திட்டமிட்ட அந்த உயரத்தை அடைந்ததும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-டி செயற்கைகோள் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. இந்த 19 நிமிடம் 41 வினாடி பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் பொருத்தபட்டு இருந்த என்ஜின்கள் வெற்றிகரமாக இயங்கி செயற்கை கோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. பூமியில் இருந்து அதிகபட்சமாக 20 ஆயிரத்து 45 கிலோ மீட்டர் தொலைவிலும், குறைந்தபட்சமாக 282.5 கிலோமீட்டர் தொலைவிலும் செயற்கைகோள் பூமியை சுற்றி வருகிறது.
 
ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ஏ.எஸ்.கிரண்குமார் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.
 
ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களின் மாடியில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடிநின்றனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
 
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் உதவியுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில் நிபுணராக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து உள்ளது. இது ஒரு சாதனை நிகழ்வாகும்.
 
இஸ்ரோ ஏவிய 29 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்களில், 28 ராக்கெட்கள் வெற்றிகரமாக விண்ணில் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil