ஜப்பான் அரசின் விசாரணை அறிக்கையில் விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத் தலைவரும், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் இறக்க வில்லை, உயிருடன்தான் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழப்பு தொடர்பான ஜப்பானிய அரசின் அதி காரப்பூர்வ அறிக்கையானது பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்பட்டு உள்ளது.
1945–ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி தைவான் நாட்டில் தைபே விமானதளம் அருகே நடைபெற்ற விபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் சிக்கி உயிரிழந்தார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து அந்த விசாரணை அறிக்கையில், ‘சுபாஷ் சந்திர போஸ் இருந்த விமானம் புறப்பட்டபோது விழுந்து விபத்தில் சிக்கியது. அதில் அவர் காயமடைந்தார். அன்று மாலை 3 மணியளவில் தைபே ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
7 மணியளவில் அவர் உயிரிழந்தார். ஆகஸ்ட் 22ஆம் தேதி அவருடைய உடல் தைபேயில் தகனம் செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.