Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு மசோதா குஜராத் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு மசோதா குஜராத் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
, செவ்வாய், 31 மார்ச் 2015 (19:09 IST)
சர்ச்சைக்குரிய பிரிவுகளை உள்ளடக்கிய பயங்கரவாத தடுப்பு மசோதா குஜராத் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


 
 
2003ஆம் ஆண்டின் குஜராத் குற்றத் தடுப்பு மசோதா சர்ச்சைக்குரிய வகையில் திருத்தம் செய்யப்பட்டு குஜராத் பயங்கரவாத மற்றும் குற்றத் தடுப்பு மசோதாவாக இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இதில் உள்ள பிரிவு 16 பிரச்சனைக்குரியதாக கூறப்படுகிறது. அதாவது காவல்துறை விசாரணை அதிகாரிகளிடம் அளிக்கும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் பிரிவாகும்.
 
ஆனால், இந்த மசோதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ் கட்சி, தேசிய குற்றவியல் சட்டங்களுக்கு முரணாக இந்த சட்டம் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியது.
 
இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களில் சில:-
 
1. காவல்துறை பொறுப்பு படிமுறையில் கண்காணிப்பு அதிகாரி மட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் வாக்குமூலங்கள் அளித்தால் அது நீதிமன்றத்தில் நேரடியாக செல்லுபடியாகுமாறு இந்த மசோதா அமைக்கப்பட்டுள்ளது.
 
2. மேலும், இந்த மசோதவின் படி விசாரணை கால அவகாசம் 90 நாட்களிலிருந்து 180 நாட்களாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
 
3. இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடையாது. இதனை இந்த மசோதாவின் 20 (4) என்ற பிரிவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
4. எலக்ட்ரானிக் உரையாடல் மற்றும் தொலைபேசிப் பேச்சு உள்ளிட்டவைகளை இடைமறித்து ஒட்டுக் கேட்டு திரட்டப்படும் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படும்.
 
5.மேலும், இந்தச் சட்டத்தை 'நல்லெண்ணத்துடன்' கடைபிடித்து நடவடிக்கை எடுக்கும் மாநில அரசு அல்லது அதன் அதிகாரிகள், ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை சாத்தியமில்லை என்ற வகையில் அரசுத் தரப்புக்கும் அரசு எந்திரத்துக்கும் இந்த மசோதா பாதுகாப்பு வழங்கியுள்ளது.
 
இந்த புதிய மசோதாவை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் உறுப்பினர் சக்திசின் கோஹில், "இந்தச் சட்டம் தேசிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரானது, மாநில அரசு இது போன்ற ஒரு சட்டத்தை ஏற்படுத்த அதிகாரம் இல்லை.
 
போலீஸ் உயரதிகாரியிடம் அளிக்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் என்பது இந்திய சாட்சியங்கள் சட்டத்துக்கு நேர் எதிரானது. இதில் உள்ள சர்ச்சைக்குரிய பிரிவுகளினால் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த மசோதாவை திருப்பி அனுப்பினார்.
 
திருப்பி அனுப்பப்பட்ட பிறகு 2009ஆம் ஆண்டுதான் பயங்கரவாதம் என்ற வார்த்தை இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக இந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது" என்று கோஹில் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil