Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு முழுமையாகத் தடை: மத்திய அரசு அறிவிப்பு

அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு முழுமையாகத் தடை: மத்திய அரசு அறிவிப்பு
, சனி, 1 நவம்பர் 2014 (13:41 IST)
அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது என்றும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள காலியிடத்தை நிரப்பவும் தடை விதிக்கப்படுகிறது என்றும் மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
 
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
நடப்பு நிதியாண்டில் (2014-2015) நிதிப் பற்றாக்குறையை, தற்போதுள்ள 4.5 சதவீதத்தில் இருந்து 4.1 சதவீதமாகக் குறைக்கும் நோக்கில், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதன்படி, அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள காலியிடத்தை நிரப்பவும் தடை விதிக்கப்படுகிறது. எனினும், மிக அத்தியாவசியமான சூழ்நிலைகளில் மட்டும் காலியிடத்தை நிரப்ப அனுமதி அளிக்கப்படும்.
 
மத்திய அரசு அதிகாரிகள், 5 நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இதேபோல், அரசு அதிகாரிகள் தங்களது வெளிநாட்டுப் பயணங்களின்போது, விமானங்களில் முதல் வகுப்பில் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது.
 
குறைந்த கட்டணத்திலான பிற வகுப்புகளில்தான் அவர்கள் பயணம் செய்ய வேண்டும். உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ அதிகாரிகள் பயணம் செய்யும்போது, உடன் வருகின்ற ஒருவருக்கு இலவசப் பயணச்சீட்டு வழங்குவதும் ரத்து செய்யப்படுகிறது.
 
அரசுத் துறைகள் சார்பில் மிகவும் அத்தியாவசியமான கருத்தரங்குகள், மாநாடுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். முடிந்தவரையில், கருத்தரங்குகள், மாநாடுகளுக்குப் பதிலாக காணொலி நிகழ்ச்சியாக, சிக்கனமாக நடத்த வேண்டும். வர்த்தக ஊக்குவிப்புக் கண்காட்சிகள் தவிர, வெளிநாடுகளில் இதர வகைக் கண்காட்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
 
ராணுவம், துணை ராணுவப் படைகள், பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான புதிய வாகனங்கள் வாங்க மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மற்ற துறைகளுக்குப் புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.
 
திட்டம் சாராத செலவினங்கள் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது. எனினும், வட்டி செலுத்துதல், கடனைத் திருப்பிச் செலுத்துதல், பாதுகாப்புச் செலவினங்கள், ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு இந்தக் குறைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
 
அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளுக்கும் சிக்கன நடவடிக்கைகள் பொருந்தும். ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர புதிதாக எவ்விதச் சலுகைகளும் தன்னாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படமாட்டாது.
 
அரசின் செயல்பாட்டுத் திறனுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல், நிதி நிர்வாகத்தில் ஒழுங்குமுறையைப் பேணுவதை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தச் சிக்கன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
வரும் 2015-2016-ஆம் நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதமாகக் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அந்தக் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil