Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உத்தரப் பிரதேசத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட 11 பயிற்சி நீதிபதிகள்

உத்தரப் பிரதேசத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட 11 பயிற்சி நீதிபதிகள்
, திங்கள், 22 செப்டம்பர் 2014 (12:59 IST)
விருந்து நிகழ்ச்சியில் பயிற்சி பெண் நீதிபதியிடம் தவறாக நடந்து கொண்ட 11 பயிற்சி நீதிபதிகளை உத்தரப் பிரதேச அரசு அதிரடியாக நீக்கியது.
 
உத்தர பிரதேச மாநிலத்தில் 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாநில நீதித்துறைப் போட்டித் தேர்வுகள் மூலம் 40 மாவட்டங்களுக்கு நியமிக்கப்படவேண்டிய சிவில் நீதிபதி, ஜூனியர் சிவில் நீதிபதி மற்றும் மாஜிஸ்திரேட்டு பதவிகளுக்காக 22 பெண்கள் உள்பட 74 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
இவர்கள் அனைவருக்கும் லக்னோ நகரில் உள்ள மாநில நீதித்துறை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தொடங்கி 4 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி கடந்த 8 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
 
இந்நிலையில் பயிற்சி முடிவடைவதற்கு முதல்நாள் லக்னோ நகரில் உள்ள ஒரு உணவகத்தில் பயிற்சி நீதிபதிகள் அனைவருக்கும் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அப்போது பயிற்சி நீதிபதிகளில் 40 பேர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த பயிற்சி பெண் நீதிபதி ஒருவரிடம் தகாத முறையிலும், நெறிமுறைகளை மீறி அநாகரீகமாகவும் நடந்து கொண்டனர்.
 
தனக்கு பயிற்சி நீதிபதிகள் அளித்த தொல்லை குறித்து அந்த பயிற்சி பெண் நீதிபதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட அளவிலான நீதிபதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
 
இந்த குழு தனது அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.
 
அப்போது விருந்து நிகழ்ச்சி நடந்த உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து பெண் பயிற்சி நீதிபதியிடம் 20 பயிற்சி நீதிபதிகள் தவறான முறையில் நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணை அடிப்படையில் 20 பயிற்சி நீதிபதிகளை தற்காலிக நீக்கம் செய்யும்படி அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சாந்த் சூட் மற்றும் 9 மூத்த நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு பரிந்துரை செய்தது.
 
எனினும் உயர் நீதிமன்றத்தின் முழுமையான அமர்வின் நிர்வாக குழு இந்த பரிந்துரையை மாநில முதலமைச்சருக்கு அனுப்பியபோது சம்பவத்தில் நேரடித் தொடர்பு கொண்டிருந்த 11 பேரை பதவி நீக்கம் செய்யும்படியும் கேட்டுக் கொண்டது.
 
மேலும் அந்த பரிந்துரையில், இந்த பயிற்சி நீதிபதிகள் 11 பேரும் நீதிபதி ஆவதற்கே தகுதி அற்றவர்கள் என்றும் தெரிவித்திருந்தது.
 
இந்த பரிந்துரையை மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து மாநில நியமன இலாகா, பயிற்சி நீதிபதிகள் 11 பேரையும் நீக்கம் செய்ததற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில நீதித்துறை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர்கள் 3 பேரை உயர் நீதிமன்றம் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டு இருந்தது.
 
மேலும் இந்த நிறுவனத்துக்கு புதிதாக இயக்குனர் ஒருவரையும் நியமித்தும் உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil