Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மது போதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்குச் சமம்: நீதிபதி கண்டனம்

மது போதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்குச் சமம்: நீதிபதி கண்டனம்
, புதன், 1 ஏப்ரல் 2015 (10:44 IST)
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம் என்று டெல்லியில் வழக்கு ஒன்றிற்கு தீர்ப்பு கூறிய நீதிபதி கூறியுள்ளார்.


 

 
டெல்லியில் பவன் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெரிசலான சாலையில் அளவுக்கு அதிகமான குடிபோதையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். இதனால், அவரை போக்குவரத்து காவல்துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கில் பவன் குமாருக்கு மாஜிஸ்திரேட்டு 20 நாட்கள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை எதிர்த்து பவன்குமார் டெல்லி கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வீரேந்தர் பட், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன், அவர்களுக்கு அதிகமான தண்டனை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார். 
 
இது குறித்து நீதிபதி வழங்கிய தீர்ப்பின் விவரம் வருமாறு:- 
 
அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு முக்கியமான நேரத்தில் நெரிசலான சாலையில் சென்றுள்ளார். இது அவரது குற்றத்தின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது. காவல்துறையினர் அவரை பிடிக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக மிகப்பெரிய சோக சம்பவம் நடந்திருக்கும்.
 
இது கடுமையானது என்றாலும் வேறு வழி இன்றிதான் அவருக்கு 20 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு சரியானதுதான். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டு போன்றவர் என்று கூறுவது பொருத்தமானது என்பதை நான் ஏற்கிறேன்.
 
குடிபோதை ஓட்டுநர் தானும் சாவதுடன், சாலையில் செல்லும் மற்றவர்களையும் சாகடிக்கிறார். இது போன்றவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும்.
 
இது போன்ற குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பதன் மூலமே சாலை பாதுகாப்புக்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் மதிப்புமிக்க மனித உயிர்களை காப்பாற்ற முடியும். 
 
மதுவை அதிகமாகக் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும்போது அவரது பார்வைதிறன் குறையும், சாலையில் நெருக்கடியை சந்திக்கும்போது உடனுக்குடன் முடிவு எடுக்கும் திறன் குறையும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அதிகரித்து வரும் அபாயத்தை தடுப்பதற்கான வழிகளில் ஒன்று. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil