Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவ்யானி கோப்ரகடே மீது திடீர் நடவடிக்கை

தேவ்யானி கோப்ரகடே மீது திடீர் நடவடிக்கை
, சனி, 20 டிசம்பர் 2014 (16:34 IST)
அமெரிக்காவில் கைது நடவடிக்கைக்கு ஆளான தேவ்யானி கோப்ரகடே, அமைச்சகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த ஆண்டு நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராகப் பணியாற்றிய தேவ்யானி அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் சங்கீதாவுக்கு மிகக் குறைவான சம்பளம் வழங்கினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த நிலையில், இது தொடர்பாக விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆடை களைந்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, பல்வேறு எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
 
இதனையடுத்து பின்னர் அவர் ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பினார். அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் கூட்டு வளர்ச்சிப் பிரிவின் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் தேவ்யானி அண்மையில் தனது தந்தை மீதான ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவும், தனது குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பது குறித்தும் ஆங்கில செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.
 
இதனையடுத்து அனுமதி பெறாமல் ஊடகத்திற்கு பேட்டியளித்தது மற்றும் தனது கணவர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும், அமெரிக்க குடியுரிமை பெறப்பட்டதையும் மறைத்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது நிர்வாக ரீதியிலான விசாரணையும் நடந்து வருகிறது.
 
இந்நிலையில் வெளியுறவுத்துறையின் கீழ் இயங்கும் கூட்டு வளர்ச்சிப் பிரிவின் இயக்குநர் பொறுப்பில் இருந்து தேவ்யானி நீக்கப்பட்டுள்ளார்.
 
கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள அவர் மீது, மேலும் துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்  வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil