Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுதந்திர போராட்ட வீரருக்கு பாஜக துண்டு போட்டு சர்ச்சையில் சிக்கிய கிரண் பேடி

சுதந்திர போராட்ட வீரருக்கு பாஜக துண்டு போட்டு சர்ச்சையில் சிக்கிய கிரண் பேடி
, புதன், 21 ஜனவரி 2015 (18:38 IST)
சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் சிலைக்கு பாஜக சின்னம் பொறித்த துண்டு அணிவித்து கிரண் பேடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி ஒரு சமூக ஆர்வலராகவும் வலம் வந்தார். லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி அன்னா ஹசாரா இருந்த உண்ணாவிரதத்திலும், கிரண் பேடி கலந்து கொண்டார்.
 
இந்நிலையில், சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த கிரண் பேடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணா நகர் வேட்பாளராக கிரண் பேடியை அறிவித்த பாஜக, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்தது.
 
இதையடுத்து, இன்று கிரண் பேடி வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன்பாக, ஊர்வலமாக சென்ற கிரண் பேடி, தான் போட்டியிடும் கிருஷ்ணா நகர் தொகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் சிலைக்கு மாலை அணிவித்தார். அதோடு தான் அணிந்திருந்த பாஜக சின்னம் பொறித்த துண்டையும் லாலா லஜபதி ராயின் சிலைக்கு அணிவித்தார்.
 
கிரண் பேடியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அக்கட்சியின் டெல்லி முதல்வர் வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''சுதந்திர போராட்ட வீரர்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள். அவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களை பாஜகவிற்கோ, காங்கிரசுக்கோ அல்லது மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றோ பிரிப்பது சரியில்லை.
 
ஆனால், கிரண் பேடி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மதச்சாயம் பூச முயற்சிக்கிறார். இது சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் செயலாகும். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிட்டாலும், அவமதிக்காமல் இருக்கலாம்'' என்றார்.
 
இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசியவாத அமைப்பு எனவும், இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு மிக முக்கியமானது என கிரண் பேடி பேசியதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
கிரண் பேடியின் அரசியல் குறித்து அண்ணா ஹசாரேவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, கிரண் பேடியை குறித்தும், அவரது அழுக்கு படிந்த அரசியல் பற்றியும் பேச விரும்பவில்லை எனக் கூறியிருக்கிறார்.
 
ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த காலத்தில் சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டை பெற்ற கிரண் பேடி, தற்போது பல்வேறு சர்ச்சைக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil