Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானின் மருமகள் என்ற பாஜகவின் விமர்சனத்துக்கு சானியா பதில்

பாகிஸ்தானின் மருமகள் என்ற பாஜகவின் விமர்சனத்துக்கு சானியா பதில்
, வியாழன், 24 ஜூலை 2014 (15:59 IST)
தெலங்கானா மாநில தூதராக நியமிக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பாகிஸ்தானின் மருமகள் என தெலங்கானா பாஜக தலைவர் தெரிவித்த கருத்துக்கு சானியா மிர்ஸா பதிலளித்துள்ளார்.
 
தெலங்கானா மாநில தூதராக சானியா மிர்ஸாவை நியமித்து அதற்கான நியமன ஆணையையும், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையையும் முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலங்கானா பாஜக தலைவர் கே.லக்ஷ்மண், சானியா மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்து ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்தார். பாகிஸ்தான் கிரிகெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு சானியா பாகிஸ்தான் நாட்டின் மருமகள் ஆகிவிட்டார்.
 
சானியா எப்போதுமே தனித் தெலங்கானா போராட்டத்தில் பங்கேற்றதில்லை, அதற்காக குரல் கொடுத்ததும் இல்லை. இந்நிலையில், கிரேட்டர் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை குறி வைத்து முதல்வர் சானியாவை தெலங்கானா விளம்பர தூதராக நியமித்துள்ளார் என குற்றம்சாற்றினார்.
 
இந்நிலையில், தெலங்கானா விளம்பர தூதராக தான் நியமிக்கப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை வருத்தமளிப்பதாக சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார். ஓர் அற்ப விஷயத்தில் நேரத்தை செலவிடுகிறார்கள் என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது:- "நான் மும்பையில் பிறந்தது உண்மைதான். நான் பிறக்கும் நேரத்தில் என் தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. அதனால் அவருக்கு சிறப்பு வசதிகள் பொருந்திய மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது அவசியமாக இருந்தது. அதன் காரணமாகத்தான் அவரை மும்பை மருத்துவமனையில் அனுமதித்தனர். நான் மும்பையில் பிறக்க நேர்ந்தது.
 
எனது தாத்தா முகமது ஜாபர் மிர்ஸா 1948-இல் தனது பணியை நிஜாம் ரயில்வே துறையில் துவக்கினார். ஹைதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் தான் இறந்தார். எனது கொள்ளுத் தாத்தா அகமது மிர்ஸாவும் ஹைதராபாத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்து மறைந்தார். எனது எள்ளுத் தாத்தா ஆசிஸ் மிர்ஸா ஹைதராபாத் நிஜாம் ஆட்சியில் உள்துறை செயலராக இருந்தார்.
 
எனவே, எனது குடும்பம் ஆண்டாண்டு காலமாக ஹைதராபாத்தில்தான் வாழ்ந்து வருகிறது. நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் இல்லை என கூறும் ஒவ்வொருவருக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு சானியா கூறியுள்ளார்.
 
நான் ஒரு இந்தியப் பெண். பாகிஸ்தானைச் சேர்ந்த சோயப் மாலிக்கை திருமணம் செய்திருந்தாலும் இந்தியராகவே இருக்கிறேன். இந்தியராக மறைவேன். காலம் பொன்னானது. அத்தகைய மதிப்பு மிக்க காலத்தை, மாநிலத்தின் மிக அவசர தேவைகளை பூர்த்தி செய்வதில் செலவிட வேண்டுமே தவிர அற்ப விஷயங்களை பெரிதாக்குவதில் அல்ல.

Share this Story:

Follow Webdunia tamil