Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருகிறது ‘சக்திமான்’ சட்டம் - குதிரை கால் ஒடிக்கப்பட்டதால் நடவடிக்கை

வருகிறது ‘சக்திமான்’ சட்டம்  - குதிரை கால் ஒடிக்கப்பட்டதால் நடவடிக்கை
, வெள்ளி, 18 மார்ச் 2016 (17:29 IST)
உத்தரகாண்ட் மாநில காவல்துறையின் ’சக்திமான்’ குதிரையின் கால் உடைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து சக்திமான் பெயரில் சட்டம் கொண்டுவர சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 

 
உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக எம்எல்ஏ முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் தலைநகர் டேராடூனில் பாஜகவினர் சமீபத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையின் குதிரைப்படை பிரிவு வந்தது.
 
அப்போது, கணேஷ் ஜோஷி வெறித்தனமாக உருட்டுக்கட்டையை எடுத்து, காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் அமர்ந்திருந்த குதிரையின் கால்களை ஓங்கி அடித்தார். இதனால், இந்த குதிரை கீழே சரிந்து விழுந்தது. இந்த தாக்குதலால் அந்த குதிரையின் கால்களில் முறிவு ஏற்பட்டு, ரத்தம் வடியத் தொடங்கியது.
 
இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த கேமராவில் வீடியோவாக பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும், விலங்குவதை வதை தடுப்பு சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ், கணேஷ் ஜோஷி மீது டேராடூன் காவல்தறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
இந்த விவகாரம் அந்த மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் கோஷங்கள் எழுப்பியதால், சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 
 
அடிபட்ட அந்த குதிரைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், குதிரையின் உயிரை காப்பாற்றுவதற்காக, அதன் காலை வெட்டி எடுத்து, அதற்கு மாற்று கால் பொருத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மிகவும் சக்திவாய்ந்த வெள்ளை குதிரை வகையை சார்ந்த சக்திமான் குதிரை உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது மக்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்குவகித்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றுவதில் சிறப்பான பணியை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், விலங்குகள் உரிமை ஆர்வலர் கவுரி மவுலேகி பேசுகையில், ”குதிரையின் வாழ்க்கை தரமானது முற்றிலும் போய்விட்டது. இதே சக்திமான் குடியரசு தினவிழா பேரணியில் கலந்துக் கொள்ள முடியாது.
 
குதிரைக்கு இதுபோன்ற காயத்தை ஏற்படுத்திவிட்டு குற்றவாளி வெறும் ரூ. 50 அபராதமாக கட்டிவிட்டு சென்றுவிடுவார். விலங்குகளை கொடுமை செய்பவர்களுக்கு அதிகப்பட்சமாக அபராதம் விதிக்கும் வகையில் சக்திமான் மசோதா அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் கொண்டுவர வேண்டும்” என்று வற்புறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil