Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிதின் கட்கரி வீட்டில் உளவு பார்க்கும் கருவி: விசாரணை நடத்த எதிர்க் கட்சிகள் வலியுறுத்தல்

நிதின் கட்கரி வீட்டில் உளவு பார்க்கும் கருவி: விசாரணை நடத்த எதிர்க் கட்சிகள் வலியுறுத்தல்
, திங்கள், 28 ஜூலை 2014 (08:10 IST)
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் டெல்லி இல்லத்தில் சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அதிகாரப்பூர்வ இல்லம் டெல்லி, தீன் மூர்த்தி லேன் பகுதியில் அமைந்துள்ளது.

அந்த வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தக் கூடியதைப் போன்ற உயர் தரத்திலான சக்தி வாய்ந்த இந்தக் கருவி அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்தத் தகவலால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், "ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்ட நிகழ்வானது தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சர்கள் இடையே நம்பிக்கை இல்லாததைக் காட்டுகிறதது“ என்று கூறியுள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது:-

“மத்திய அரசில் மூத்த அமைச்சராகப் பதவி வகிக்கும் நிதின் கட்கரி, பாஜகவின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். அவரது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது என்ற செய்தி சரியானது என்றால், இது மிகவும் கவலைக்கு உரிய விஷயமாகும். இது அமைச்சரவை சகாக்களிடையே பரஸ்பர நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது.

இந்த விவகாரத்தில் தாங்கள் தூய்மையானவர்கள் என்பதை பாஜக, மத்திய அரசு ஆகியவை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. ஒருவேளை ஒட்டுக்கேட்பு நடந்திருந்தால் அது குறித்த தகவல்களை நாட்டு மக்கள் முன்பு வைக்க வேண்டும்.

யாருடைய தூண்டுதலால் ஒட்டுக் கேட்பு நடத்தப்பட்டது? இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு என்ன காரணம்? இவை பற்றி பாஜக, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும்“ என்று ரண்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி, ‘‘இது குறித்த தகவல்கள் எப்படி அம்பலத்துக்கு வந்தன? இது குறித்து விசாரணை நடத்தி அனைத்து உண்மைகளையும் பாராளுமன்றத்தில் வைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் டி.ராஜா, “இது ஒரு முக்கியமான பிரச்சினை. எப்படி கட்காரியின் தனி அறைக்குள் ஒருவர் உரிய அனுமதியின்றி நுழைய முடிந்தது?“ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, தனது இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறுத்துள்ளார்.

அவர் இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட பதிவில், "பத்திரிகையில் வெளியான செய்தி ஊகத்தில் அடிப்படையிலானது“ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil