Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜகவினர் மதச்சார்பின்மைக்கு முடிவு கட்ட விரும்புகின்றனர் - மம்தா பானர்ஜி

பாஜகவினர் மதச்சார்பின்மைக்கு முடிவு கட்ட விரும்புகின்றனர் - மம்தா பானர்ஜி
, ஞாயிறு, 23 நவம்பர் 2014 (09:18 IST)
மதச்சார்பின்மைக்கும், தனது கட்சிக்கும் முடிவு கட்ட பாஜகவினர் விரும்புகின்றனர் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாற்றியுள்ளார்.
 
சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. குணால் கோஷ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இதே வழக்கில் அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான சிருஞ்சய் போஸ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. 
 
அந்தக் கூட்டத்தில் மம்தாபானர்ஜி பேசியதாவது:-
 
நேருவின் 125 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் மாநாட்டில் நான் கலந்து கொண்டேன்.
 
அதனால்தான் அவர்கள் (மத்திய அரசு), நமது கட்சி எம்.பி. சிருஞ்சய் போஸ் நிதி மோசடி வழக்கில் கைது செய்து பழிவாங்குகின்றனர். பாஜக உண்மையில் என்னைத்தான் குறிவைத்துள்ளது.
 
எனக்கு பாஜகவிடம் நன்னடத்தைச் சான்றிதழ் தேவையில்லை. எனது நன்னடத்தை குறித்து மேற்கு வங்க மக்களுக்குத் தெரியும். பாஜகவினர் தேர்தல்களில் கோடிக்கணக்கான ரூபாய்களை எவ்வாறு செலவிட்டனர் என்று யாரும் அவர்களைக் கேட்காதது ஏன்?
 
பாஜகவினர் மீது பல்வேறு கலவர வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், அவர்கள் எங்களை எவ்வாறு குற்றம்சாட்ட முடியும்? பாஜகவினர் மதச்சார்பின்மைக்கு முடிவு கட்ட விரும்புகின்றனர்.
 
அவர்கள் மாநிலக் கட்சிகளை அழிக்கவும் விரும்புகின்றனர். முடிந்தால் என்னைச் சிறைக்கு அனுப்பட்டும். எவ்வளவு பெரிய சிறை இருக்கிறது என்று நானும் பார்க்கிறேன்.
 
அவர்களால் முடிந்தால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தட்டும். நாங்கள் அதற்கு வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்போம். நாம், ஆட்சி அதிகாரத்துக்கு அடிமைகள் அல்ல. நாம் மக்களுக்கு மட்டுமே பணியாற்றுகிறோம். நமக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்.
 
அனைத்து விதமான அதிருப்திக் குரல்களையும் ஒடுக்க அவர்கள் விரும்புகின்றனர். சோனியா காந்தி கூட வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால், பாஜகவினர் என்னைக் கண்டு பயப்படுகின்றனர். அதனால்தான் சதித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
 
நம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாம் பதிலடி கொடுப்போம். அனைத்துச் சவால்களையும் ஏற்றுக் கொள்கிறோம். அரசியல் பழிவாங்கலுக்கு எதிரான நமது போராட்டம் தொடங்கிவிட்டது. அவர்கள் நம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு நாம் அரசியல் ரீதியாக பதிலடி கொடுப்போம். இவ்வாறு  மம்தா பானர்ஜி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil