Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிங்பிஷர் கடன் விவகாரத்தில் விஜய் மல்லையா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வங்கிகள் முடிவு

கிங்பிஷர் கடன் விவகாரத்தில் விஜய் மல்லையா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வங்கிகள் முடிவு
, வெள்ளி, 25 ஜூலை 2014 (19:01 IST)
கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதற்கு வங்கிகள் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.
 
தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங்பிஷர் விமான நிறுவனம் வங்கிகளுக்கு பெருமளவிலான தொகையை கடனாக வைத்துள்ளது. இந்நிறுவன விமானங்கள் அனைத்தும் இப்போது தரையிறக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை திரும்ப செலுத்துவதற்கு முடியும் என்றாலும் வேண்டுமென்றே மல்லையா செலுத்தவில்லை என்று வங்கிகள் கருதுகின்றன. இத்தகைய ``வில்புல் டிபால்டர்’’ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி சட்டம் வகை செய்கிறது.
 
இதனால் கிங்பிஷர் நிறுவனத்தை வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாத நிறுவன பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை சில வங்கிகள் தொடங்கியுள்ளன என்று நிதி சேவைத்துறைச் செயலர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார்.
 
வங்கிகள் இவ்விதம் கிங்பிஷர் நிறுவனத்தை அறிவித்தால், அந்நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அத்துடன் இந்நிறுவனர் மற்றும் நிறுவன இயக்குநர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த பொதுத்துறை வங்கியிலும் புதிய தொழில் தொடங்க கடன் பெற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய நபர்கள் பங்குச்சந்தையிலும் நிதி திரட்ட முடியாது.
 
கடன் பெற்ற நிறுவனம் கடனை திரும்ப செலுத்தாமல் அதை வேறு தொழில்களுக்கு திருப்பிவிட்டது நிரூபிக்கப்பட்டால், வேண்டுமென்றே கடனை செலுத்தாத நிறுவனமாகக் கருதப்படும் என்று சாந்து குறிப்பிட்டார். கிங்பிஷர் நிறுவனத்துக்கு 17 வங்கிகள் கடன் அளித்துள்ளன. ரூ.4,022 கோடியை இந்நிறுவனம் செலுத்த வேண்டும். கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா முதல் முறையாக விஜய் மல்லையா மற்றும் கிங்பிஷர் நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களை ``வில்புல் டிபால்டராக’’ அறிவித்துள்ளது.
 
கடன் தொகையை வசூலிப்பதற்கான வழிவகைகளை எஸ்பிஐ மேற்கொண்டுள்ளது. கிங்பிஷர் நிறுவனத்திடமிருந்து கடன் தொகையை வசூலிக்கும் விதமாக கடந்த பிப்ரவரியில் வங்கிகள் தங்களிடம் ஈடாக வைத்துள்ள நிறுவன சொத்துகளை கையகப்படுத்தி அவற்றை விற்கும் நடவடிக்கையை எடுத்துள்ளன. இக்குழும நிறுவன பங்குகளை விற்கும் நடவடிக்கையையும் எடுத்துள்ளன.
 
அவற்றில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட், மங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ், மல்லையாவுக்குச் சொந்தமான கோவாவில் உள்ள பங்களா, மும்பையில் உள்ள கிங்பிஷர் இல்லம், மேலும் கிங்பிஷர் பிராண்டையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடன் பெற்ற போது கிங்பிஷர் பிராண்ட் மதிப்பு ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல் என கூறப்பட்டுள்ளது.
 
கிங்பிஷர் இல்லத்தை வங்கிகள் கையகப்படுத்தலாம் என கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கிங்பிஷர் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் கடந்த வாரம் இந்த மனுவை கிங்பிஷர் திரும்பப் பெற்றது. அத்துடன் வங்கிகள் கிங்பிஷர் இல்லத்தை கையகப்படுத்தவும் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil