Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக ஆட்சிமன்றக் குழுவிலிருந்து வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி நீக்கம்

பாஜக ஆட்சிமன்றக் குழுவிலிருந்து வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி நீக்கம்
, புதன், 27 ஆகஸ்ட் 2014 (08:56 IST)
அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாஜகவின்  உயரதிகாரம் படைத்த ஆட்சிமன்றக் குழுவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

பாஜக ஆட்சிமன்றக் குழுவில் மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, மத்திய முன்னாள் அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக, ஆட்சிமன்றக் குழுவில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், பாஜக பொதுச் செயலாளர் ஜே.பி. நட்டா ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாஜக தலைவர் அமித் ஷா, இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஆட்சிமன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ள வாஜ்பாய், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாஜகவில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாஜகவில் நிர்வாகிகள் மாற்றம் உள்பட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பாக ஆட்சிமன்றக் குழு திகழ்கிறது. 12 பேர் கொண்ட இந்தக் குழுவில், அக்கட்சியின் தலைவர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை மாற்றம் செய்தார்.

கட்சித் தலைவர் அமித் ஷா தலைமையிலான ஆட்சிமன்றக் குழுவில், பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, அனந்த்குமார், தாவர்சந்த் கெலாட், சிவராஜ் சிங் சௌஹான், ஜே.பி. நட்டா, ராம்லால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பாஜகவில், 5 பேரைக் கொண்ட வழிகாட்டுதல் குழு என்ற புதிய அமைப்பை கட்சித் தலைவர் அமித் ஷா ஏற்படுத்தியுள்ளார். ஆட்சிமன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ள வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடன், நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

பல்வேறு தேர்தல்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை முடிவு செய்யும், அக்கட்சியின் மத்தியத் தேர்தல் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிமன்றக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ள சிவராஜ் சிங் சௌஹான், ஜே.பி. நட்டா ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், மத்திய பழங்குடியின நல விவகாரத் துறை அமைச்சர் ஜுவல் ஓரம் , பாஜக மகளிர் அணித் தலைவர் விஜயா ரஹத்கர் ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார், பாஜக மகளிர் அணி முன்னாள் தலைவர் சரோஜ் பாண்டே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, 15 பேரைக் கொண்ட பாஜகவின் மத்தியத் தேர்தல் குழுவில் அமித் ஷா, நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, அனந்த்குமார், தாவர்சந்த் கெலாட், சிவராஜ் சிங் சௌஹான், ஜே.பி. நட்டா, ராம்லால், ஜுவல் ஓரம், ஷா நவாஸ் ஹுசேன், விஜயா ரஹத்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்து வருகிறார். எனினும், அத்வானியும், ஜோஷியும் அரசியலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பாஜகவின் ஆட்சிமன்றக் குழுவில் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டபோது, சிவராஜ் சிங் சௌஹானையும் அக்குழுவில் சேர்ப்பதற்கு அத்வானி முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.

அதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சிப் பதவிகள் அனைத்தையும் அத்வானி ராஜிநாமா செய்தார். ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்களின் சமரசத்தை ஏற்று, பின்னர் தனது ராஜிநாமாவை அவர் வாபஸ் பெற்றார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்தபோது, அத்வானிக்கும், ஜோஷிக்கும் மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வயதைக் காரணம் காட்டி, எந்தப் பதவியும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மக்களவைத் தலைவராக அத்வானி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் பதவியும் அவருக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil