Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹசன் அலி கான், தபூரியா பிணைய விடுதலை மனு நிராகரிப்பு

ஹசன் அலி கான், தபூரியா பிணைய விடுதலை மனு நிராகரிப்பு
, வெள்ளி, 1 ஜூலை 2011 (18:13 IST)
கருப்புப் பண முதலை ஹசன் அலி கானும், அவருடைய கூட்டாளி காசிநாத் தபூரியாவும் அயல் நாட்டு வங்கிகளின் இரகசிய கணக்குகளில் 93 மில்லியன் டாலர்கள் போட்டு வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று பொருளாதார அமலாக்கத் துறை கூறிய வாதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை நீதிமன்றம் அவர்களின் பிணைய விடுதலை மனுக்களை நிராகரித்தது.

மும்பை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுவப்னா ஜோஷி முன்பு ஹசன் அலி கான், தபூரியா பிணை மனு விசாரணை இன்று நடந்தது. அமலாக்கப் பிரிவின் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர் உஜ்வால் நிகாம், ஆயுத வியாபாரத்தின் மூலம் இவர்கள் இருவரும் 300 மில்லியன் டாலர் தரகுப் பணம் பெற்றுள்ளனர் என்றும், அதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சர்வதேச அளவில் பெரும் ஆயுத வணிகராக இருந்த அத்னன் கசோகியின் முகவர்களாக இவர்கள் இருவரும் செயல்பட்டுள்ளார்கள் என்றும், எனவே இவர்கள் இருவரும் நாட்டிற்கு எதிராக போர் தொடுத்த குற்றத்தை இழைத்துள்ளார்கள் என்பது நிரூபனமாகிறது என்றும் வழக்குரைஞர் நிகாம் வாதிட்டார்.

இவர்கள் இருவரும் ஹைதராபாத், பாட்னா, மும்பை, பூனே, லண்டன் ஆகிய நகரங்களில் இருந்து கடவுச் சீட்டிற்கு விண்ணப்பம் செய்து பெற்றுள்ளனர் என்றும், இது சட்டப்படி மோசடி நடவடிக்கையாகும் என்றும் வாதிட்டார்.
சுவிஸ் வங்கியில் தான் வைத்துள்ள கணக்கில் இருந்து 7 இலட்சம் டாலரை லண்டனில் உள்ள எஸ்.கே.பைனான்சியல் என்ற நிறுவனத்தின் கணக்கிற்கு ஹசன் அலி கான் மாற்றியுள்ளார் என்றும் நிகாம் கூறினார்.

தனது வாதத்திற்கு ஆதாரமான பல ஆவணங்களை நீதிமன்றத்தில் நிகாம் தாக்கல் செய்தார். ஹசன் அலி கான், தபூரியா ஆகியோர் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்கள் பகாரியா, கிரிஷ் குல்கர்னி ஆகியோர், இவர்கள் இருவரும் செய்த குற்றங்களாக அமலாக்கப் பிரிவு தொடுத்துள்ள வழக்குகள் அனைத்தும் இந்தியப் பணத்தை சட்டத்திற்குப் புறம்பாக அயல் நாடுகளுக்கு கொண்டு செல்வதை தடுக்கும் சட்டம் நிறைவேறுவதற்கு முன்னர் நடந்ததாகவும் என்று கூறினர்.

இவர்களுக்கு எதிரான குற்றங்கள் உண்மைதான் என்று நிருபனமானாலும், இச்சட்டத்தின் கீழ் அவர்களை தண்டிக்க முடியாது என்று வாதிட்டனர். எனவே இருவருக்கும் பிணைய விடுதலை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இருவருக்கும் பிணைய விடுதலை அளித்தால் வழக்குத் தொடர்பான புலனாய்வுக்கு தடையை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதால் பிணைய மனுவை நிராகரிப்பதாக தீர்ப்பளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil