Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்குக் கடற்கரைக்கு அச்சுறுத்தல் - ப. சிதம்பரம்

மேற்குக் கடற்கரைக்கு அச்சுறுத்தல் - ப. சிதம்பரம்
, புதன், 1 ஜூலை 2009 (15:54 IST)
ஹைதராபாத்: இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை நிறுவனங்கள் எச்சரித்துள்ளதாகவும், என்றாலும் உடனடியாக தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலை இல்லை என்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் இன்று மதியம் தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

உளவுத்துறை தகவல் வரப்பெற்றதை உடனடியாக மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் பகிர்ந்து கொண்டதாகவும், அண்மையில் வந்த தகவலின்படி, மேற்குக் கடற்கரைப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிய வந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக இன்று காலை சென்னை அசோக்நகரில் தேசிய பாதுகாப்புப் படையின் பிரிவை அவர் தொடங்கி வைத்தார்.

பெங்களூரு மற்றும் ஜோத்பூரில் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை ஏற்படுத்த ராணுவத்தின் சிறப்புப் படையினர் உதவுவார்கள் என்று அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்புப் படை மையங்களை அதிக இடங்களில் ஏற்படுத்துவதால், நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து விட்டதாக கருதக்கூடாது என்றார் அவர்.

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பரில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற போது, குர்கானில் இருந்து தேசிய பாதுகாப்புப் படையினர் மும்பையை வந்தடைய 12 மணி நேரமானதாக குறிப்பிட்ட சிதம்பரம், இந்த நேர விரயத்தை குறைக்கவும், நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் விரைவில் செல்லவும் ஏதுவாக அதிக மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

அடுத்த சில ஆண்டுகளில் ஹைதராபாத்தின் இப்ராஹிம்பட்டனத்தில் மேலும் ஒரு தேசிய பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எந்தவொரு நகரத்தையும் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய நகராக கருத முடியாது என்றும் அவர் கூறினார்.

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil