Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனவர்கள் கொல்லப்படுவது வரலாறாகட்டும்: எஸ்.எம். கிருஷ்ணா

மீனவர்கள் கொல்லப்படுவது வரலாறாகட்டும்: எஸ்.எம். கிருஷ்ணா
, செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (15:30 IST)
FILE
எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவது இதற்கு மேலும் நடக்கக் கூடாது என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிக்காத வகையில் முடிவுகளை எடுக்குமாறும் சிறிலங்க அரசை அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.

அயலுறவு அமைச்சகச் செயலர் நிருபமா ராவ் கொழும்பு சென்று திரும்பியுள்ள நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதியை டெல்லியில் இன்று காலை சந்தித்துப் பேசிய பேசிய அமைச்சர் கிருஷ்ணா, அயலுறவுச் செயலர் நிருபமாவின் கொழும்பு பயணம் குறித்து கருணாநிதியிடம் விளக்கியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது நிருபமா ராவும் உடனிருந்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.

“மீனவர்களுக்கு எதிராக படை வலிமையை பயன்படுதுவது என்பது இதற்கு மேலும் நடைபெறக் கூடாது, அப்படி நடந்தால் அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பாதிப்பதாக இருக்கும் என்பதை உணர்ந்து சிறிலங்க அரசின் நடவடிக்கைகளை அமைய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“மீனவர்களுக்கு எதிராக படை வலிமையை பயன்படுத்துவது என்பதும், அவர்களை சுடுவது என்பதும் எந்த சூழலிலும் ஏற்கத்தக்கதல்ல என்பது நிச்சயம். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் வரலாறாகட்டும், அது நிகழ்காலமாகவோ அல்லது எதிர்காலமாகவோ ஆகக் கூடாது. மீனவர்களின் உரிமையை காப்பாற்றுவதில் உறுதியாகவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

“இப்படிப்பட்ட நிகழ்வுகள் (மீனவர்கள் சுட்ப்படுவது) பாகிஸ்தானுடனோ அல்லது மற்ற நாடுகளுடனோ ஏற்படாத நிலையில், சிறிலங்கா மட்டும் இப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது ஏன் என்பதை சிறிலங்க அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.என்று கூறிய கிருஷ்ணா, “சிறிலங்காவுடன் இந்தியா இணக்கமான உறவு கொண்டுள்ளது. இந்த கண்ணோட்டத்தோடு பிரச்சனையை சிறிலங்க அணுக வேண்டும். அது எடுக்கும் எந்த முடிவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பாதித்துவிடக்கூடாது” என்று கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது கவலைக்குறியது என்பதை சிறிலங்க அதிபர் ராஜபக்சவிற்கு அயலுறவுச் செயலர் நிருபமா எடுத்துக் கூறியதாகவும், அதனை ராஜபக்ச ஏற்றுக்கொண்டதாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்த புலனாய்வு அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளத்துள்ளதாகவும் கிருஷ்ணா கூறியுள்ளார்.

இரு நாடுகளும் இணைந்த நேற்று (கொழும்புவில்) விடுத்த கூட்டறிக்கை இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்றும், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி மீன் பிடித்தலை தொடரலாம் என்றும் கூறிய கிருஷ்ணா, “எல்லைத் தாண்டுவது என்பது மீனவர்களுக்கு இயல்பானது. எங்கே மீன் வளம் உள்ளதோ அதை நோக்கி அவர்கள் செல்வார்கள். எனவே, அவர்களை முழுமையாக பாதுகாக்குமாறு கடலோர காவற்படைக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil