Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேச்சுவார்த்தை ஒரு கண்துடைப்பு: போராட்டக் குழு

பேச்சுவார்த்தை ஒரு கண்துடைப்பு: போராட்டக் குழு
, வெள்ளி, 18 நவம்பர் 2011 (20:57 IST)
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான மக்களின் அச்சங்களைப் போக்கக் கூடிய எந்த ஆதாரத்தையும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினர் தங்களுக்கு அளிக்கவில்லையென்றும், இந்தப் பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்புதான் என்றும் கூடங்குளம் மக்கள் போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்.

கூடங்குளம் அணு மின் உலையை சோதித்த மத்திய நிபுணர் குழுவினர் இன்று தமிழக அரசு அமைத்த குழுவினருடன் திருநெல்வேலியில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக் குழுவின் உறுப்பினரும், தமிழக அரசு அமைத்து குழுவில் இடம்பெற்றிருந்தவருமான புஷ்பராயன் இவ்வாறு கூறியுள்ளார்.

“கூடங்குளம் அணு உலை தொடர்பாக மக்கள் கொண்டுள்ள அச்சத்தைப் போக்கும் எண்ணம் நிபுணர் குழுவிற்கு இல்லை. நாங்கள் எழுப்பிய ஐயங்களுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. அணு உலையின் பாதுகாப்புத் தொடர்பாக நாங்கள் கேட்டிருந்த எந்த ஆவணத்தையும் அவர்கள் தரவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்பு என்று தெரிகிறது” என்று புஷ்பராயன் கூறியுள்ளார்.

தாங்கள் எழுப்பிய வினாக்கள் அனைத்திற்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும், தாங்கள் கேட்ட ஆவணங்கள் எதையும் தரவில்லை என்றும், தங்களுடைய பதிலாக 38 பக்க அறிக்கையை மட்டுமே மத்திய அரசின் நிபுணர் குழு அளித்துள்ளது என்றும் கூறிய புஷ்பராயன், இன்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசின் நிபுணர் குழுத் தலைவர் ஏ.இ.முத்துநாயகம், அணு உலையின் பாதுகாப்பு, கதிர்வீச்சு, புற்றுநோய் அச்சுறுத்தல், விபத்து சாத்தியக் கூறுகள், பயன்படுத்தப்பட்ட எரிபொருள், அணு சக்தி தொடர்பாக உலகின் போக்கு ஆகிய 6 முக்கிய விடயங்கள் தொடர்பாக விளக்க தாங்கள் தயாராக இருந்ததாகவும், ஆனால், தாங்கள் அளித்த அறிக்கையை மட்டும் பெற்றுக்கொண்டு போராட்டக் குழுவினர் வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

“நீங்கள் ஆற்றும் விரிவுரையைக் கேட்க நாங்கள் வரவில்லை. உங்களுடைய பேச்சு திருப்தியளிக்கவில்லை என்று கூறிய போராட்டக் குழு நண்பர்கள், நாங்கள் அளித்த அறிக்கையை பெற்றுக்கொண்டு வெளியேறிவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்கிற தங்களின் போராட்டம் தொடரும் என்று கூறிய புஷ்பராயன், இதற்கு மேலும் பேச்சுவார்த்தியில் பயனில்லை என்றும், கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூடிவிடுமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil