Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவு வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது சந்திரயான்!

Webdunia
சனி, 8 நவம்பர் 2008 (23:16 IST)
இந்திய விண்வெளி வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க, விஞ்ஞானிகள் பெருமை கொள்ளத்தக்க நாள் இது எனலாம். ஆம். கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்ட உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட சந்திரயான் - ஒன்று செயற்கைக்கோள் இந்திய நேரப்படி இன்று மாலை 5.04 மணியளவில் நிலவின் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

அதாவது எந்த இலக்கை நோக்கி ஏவப்பட்டதோ அந்த இறுதி இலக்கினை சந்திரயான் செயற்கைக்கோள் இன்று எட்டி சாதனை படைத்துள்ளது.

பல வல்லரசு நாடுகளே கூட, சந்திரனின் வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் போது தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் இரவு பகல் பாராது உழைத்து தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியை முடித்து, சந்திரனின் சுழற்சிப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தி இருப்பது மிகப்பெரிய உலக சாதனையாகும்.

சந்திரயான் - ஒன்று செயற்கைக்கோளை கண்காணிப்பதற்காக பெங்களூரு அருகே பைலாலுவில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தில் இன்று காலையில் இருந்தே பெரும் பரபரப்பு காணப்பட்டது.

விஞ்ஞானிகள் மாலை நேரம் நெருங்க, நெருங்க பதைபதைக்கும் மனதுடன் காணப்பட்டனர். ஆனால், 5.04 மணிக்கு நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான் சென்றடைந்து, நிலைநிறுத்தப்பட்டவுடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இனி சந்திரயான் செயற்கைக்கோல் நிலவைப் பற்றிய தனது ஆராய்ச்சியைத் தொடங்கும். சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உருவாக்கி, அதனை சக்தியாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இனி எரிபொருள் பற்றிய கவலை தேவையில்லை.

தவிர, சந்திரனின் வட்டப்பாதையில் நெருங்கும்போது, ஏதாவது பாதிப்பு ஏற்படுமானால், ஒட்டுமொத்த முயற்சியும் பாதிக்கப்பட்டு விடும் என்பதால், கடந்த 16 நாட்களாக விஞ்ஞானிகளிடம் இருந்த பதைபதைப்பு, இன்று வெற்றிக் களிப்பாக மாறியது.

இந்த வெற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று அதன் தலைவர் டாக்டர் மாதவன் நாயர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

தற்போது சந்திரனில் இருந்து 504 கி.மீ. தொலைவில் சந்திரயான்-ஒன்று செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுவரை புவியின் வட்டப்பாதையில் இருந்த சந்திரயான், புவியீர்ப்பு விசைக்கு எதிரான ஈர்ப்புத் தன்மை கொண்ட நிலவின் வட்டப்பாதையில் செலுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்ரி என்று மாதவன் நாயர் குறிப்பிட்டார்.

10 மணி நேரத்திள் ஒரு முழு சுற்றினை சந்திரயான் நிறைவு செய்யும் என்றார்.

இன்றைய தினம் மிகவும் பரபரப்பான தினமாக அமைந்ததாகவும், ஆனால் அதனை வெற்றிகரமாக எட்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது 504 கி.மீட்டரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோளானது, நிலவின் வட்டப்பாதையில் மெதுவாக நிலவில் இருந்து 100 கி.மீட்டராக படிப்படியாகக் குறைக்கப்படும் என்றார் மாதவன் நாயர்.

உலக நாடுகளுக்கு மத்தியில் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா சளைத்ததல்ல என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கும் மாதவன் நாயர் உள்ளிட்ட சந்திரயான் செயற்கைக்கோள் திட்டத்தில் செயலாற்றியுள்ள அனைத்து விஞ்ஞானிகளையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments