Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: காஷ்மீரில் கைதான பயங்கரவாதி தகவல்

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: காஷ்மீரில் கைதான பயங்கரவாதி தகவல்
ஜம்மு , ஞாயிறு, 12 ஜூலை 2009 (16:05 IST)
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைப் போல் மேலும் பல தாக்குதல்களை இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக காஷ்மீரில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-ஈ-தயீபா பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் லிபா பள்ளத்தாக்கில் உள்ள ஷாம்சபாரி காடு வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவிய 4 லஷ்கர்-ஈ-தயீபா பயங்கரவாதிகளை ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை நடத்தி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களில் ஷபாகத் (வயது 22) என்ற பயங்கரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. ஷபாகத் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், இந்தியாவில் நடத்த வேண்டிய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் 120 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

நாங்களும் அங்கு பயிற்சி பெற்று இந்தியாவில் பல்வேறு நாசவேலை செய்யும் திட்டத்துடன் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றோம். ஜம்மு பிராந்தியம் தோடா மாவட்டத்தில் உள்ள பகலிகார் அணையை தகர்ப்பது எங்கள் முதல் பணியாகும். இதற்காக 15 பயங்கரவாதிகளுக்கு தனி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த அணையை தகர்த்து பயங்கர சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது லஷ்கர்-ஈ-தயீபாவின் முக்கிய திட்டமாகும்.
பாகிஸ்தானில் உள்ள சியல்கோட்டில் இருந்து ஜம்மு பகுதிக்கு சுரங்கப்பாதை அமைத்து பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த சுரங்கப்பாதை தோண்டப்பட்டதும் மற்ற பயங்கரவாதிகளும் இந்தியாவில் ஊடுருவார்கள் எனக் கூறியுள்ளான்.

இதற்கிடையே மேற்கு கடற்கரை மாநிலமான குஜராத், மராட்டியம், கோவாவிலும் லஷ்கர்-ஈ- தயீபா பயங்கரவாதிகள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த மாநிலங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil