Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாதிக் பாஷா தற்கொலை வழக்கை 3 நாட்களில் ம.பு.க.விடம் ஒப்படைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

சாதிக் பாஷா தற்கொலை வழக்கை 3 நாட்களில் ம.பு.க.விடம் ஒப்படைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
, திங்கள், 4 ஏப்ரல் 2011 (17:42 IST)
FILE
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீ்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவின் நண்பர் சாதிக் பாஷா தற்கொலை செய்துகொண்டு இறந்த வழக்கை மத்திய புலனாய்வுக் கழகத்திடம் ஒப்படைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு 3 நாட்களில் பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், சாதிக் பாஷா தற்கொலை வழக்கை ம.பு.க.விடம் ஒப்படைக்க தமிழக அரசு முன்வந்துள்ளது என்றும், அந்த வழக்கை விசாரிக்க மத்திய புலனாய்வுக் கழகமும் சம்மதித்துள்ளது என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தங்கள் உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள், “இந்த வழக்கின் விவரங்கள், சூழல்கள் அடிப்படையில் விசாரணையை ம.பு.க.விற்கு ஒப்படைப்பது தொடர்பான உத்தரவை தமிழக அரசு 3 நாட்களில் பிறப்பிக்க வேண்டும், அதன் பிறகு புலனாய்வை ம.பு.க. தொடங்கலாம்” என்று கூறியுள்ளனர்.

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ம.பு.க.வால் விசாரிக்கப்பட்ட சாதிக் பாஷா கடந்த மாதம் 16ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் விவரிக்க முடியாத சூழலில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துக் கொண்டு இறந்துவிட்டது மருத்துவ ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. 2ஜி ஊழல் விசாரணையால் ஏற்பட்ட மன உளைச்சலே அவரது முடிவிற்குக் காரணம் என்று அவரது மனைவி கூறியிருந்தார்.

ஆ.இராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாஷா, கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் எனும் வீட்டு மனை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இருந்தார். இந்நிறுவனம் இராசாவின் பினாமி நிறுவனம் என்று ஐயப்படுவதாக அங்கு சோதனையிட்ட அமலாக்க இயக்ககம் தெரிவித்திருந்தது.

சாதிக் பாஷாவின் மரணம் தொடர்பான வழக்கை ம.பு.க. விசாரிக்க வேண்டும் என்று தன்னார்வ நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil