Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோர்க்காலேண்ட் நிர்வாக சபை உருவானது

கோர்க்காலேண்ட் நிர்வாக சபை உருவானது
, திங்கள், 18 ஜூலை 2011 (20:41 IST)
மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதியில் உள்ள மாவட்டங்களின் சுதந்திர செயல்பாட்டிற்குரிய அதிகாரங்களுடன் ஒரு சுயேச்சையான நிர்வாகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கோர்க்காலேண்ட் டெர்ரிடோரியல் அட்மினிஸ்ட்ரேஷன் என்றழைக்கப்படும் இந்த நிர்வாக அமைப்பு மேற்கு வங்க மாநிலத்திற்கு உட்பட்ட ஒரு நிர்வாக அமைப்பாகவும், அதே நேரத்தில் அப்பகுதியின் மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கான அதிகாரமும் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தனி கோர்க்கலேண்ட் என்கிற மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்றுவந்த போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பீமல் குரங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

மேற்கு வங்க உள்துறைச் செயலர் ஜி.டி.கெளதமா, உள்துறைச் செயலர் கே.கே.பதக், கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா பொதுச் செயலர் ரோஷன் கிரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மேற்கு வங்கத்தின் வடபகுதியின் முழுமையான முன்னேற்றத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கோர்க்காலேண்ட் நிர்வாகத்திற்கு மேற்கு வங்க அரசும், மத்திய அரசும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்த ஒரு வரலாற்றுத் தருணம் என்று கூறினார்.

“மேற்கு வங்க அரசும், இந்திய அரசும் உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு உங்களுக்கு உறுதுணையாக நிற்போம். ஏனெனில் உங்கள் முன் வந்த பணி அளப்பரியது. உங்கள் பாதையில் பல தடைகள் உள்ளது, ஆனால் அவைகள் அனைத்தும் பேச்சுவார்த்தை, உறுதிப்பாடு, விட்டுக்கொடுத்தல் ஆகிவற்றின் மூலம் தீர்க்கக்கூடியவையே” என்று கூறினார்.

உள்துறை அமைச்சர் இவ்வாறு கூறக் காரணம், இவ்வமைப்பின் கீழ் டெராய், தூவார்ஸ் ஆகிய பகுதிகளும் சேர்க்கப்பட்டதால் அதனை எதிர்த்து அந்தப் பகுதியில் இன்று முழு அடைப்பு நடத்தப்படுகிறது. அம்ரா பெங்காலி, ஜன ஜாக்ரான், ஜாஜா சேத்தனா, ஆதிவாசி விகாஸ் பரிசத் என்கிற பழங்குடியின அமைப்பின் ஆதரவுடன் இந்த முழு அடைப்பை நடத்தி வருகின்றன.

கோர்க்காலேண்ட் நிர்வாக சபைக்கு இந்திய அரசமைப்பிற்கு உட்பட்டு அதிகபட்ச சுயாட்சி அளிக்கப்பட்டுள்ளது என்று வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

டார்ஜிலிங், குர்சியாங், கலிம்போங்க் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு, அவைகளுடன் கூர்க்காக்கள் நிரம்பியுள்ள தூவார்ஸ், டெராய் ஆகிய பகுதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இவ்வமைப்பை பலரும் எதிர்க்கின்றனர் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய மம்தா பானர்ஜி, டார்ஜிலிங் பிரச்சனை தீர்க்கப்படுவதை சில சக்திகள் விரும்பவில்லை என்றும், அவர்களுக்கு இந்த மக்களுக்கு எதிராக வங்காளிகள் சண்டையிட வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று கூறினார்.

“முன்னெற்றத்திற்குத் தேவையான அனைத்து அதிகாரங்களும் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளத” என்று கூறிய அமைச்சர் சிதம்பரம், “வேளாண்மை, உணவு, தொழில், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, நீர்வளம், நிலம், நில வருவாய், நகராட்சிகள், பஞ்சாயத்துகள், ஊரக மேம்பாடு, பொது நலம், சுற்றுலா என்று அனைத்துத் துறைகளின் அதிகாரமும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil