Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
, வியாழன், 27 மார்ச் 2014 (11:26 IST)
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 ஆண்டுகளில் 8 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. 
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் டெல்லியில் 49 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை புதன்கிழமை கூட்டாக வெளியிட்டனர்.
 
10 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆட்சி பொறுப்புக்கு வந்த 100 நாட்களில் விரிவான செயல்திட்டம் அறிவிக்கப்படும். பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்த 3 ஆண்டுகளில் தேவையான பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பணவீக்கம், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும். அந்நிய நேரடி முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் நேரடி வரி கோட்பாடு ஆகியற்றை அமல்படுத்த மசோதா கொண்டு வரப்படும்
 
தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படுத்தப்படும். நாட்டில் உள்ள 80 கோடி மக்களின் வாழக்கைத் தரத்தை மேம்படுத்தி அவர்களை நடுத்தர வர்க்கத்தினராக உயர்த்த திட்டங்கள் வகுக்கப்படும். குறைந்த வருமானம் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொருளாதார பாதுகாப்பு அளிப்பதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் சமூக பொருளாதார உரிமைகள் வழங்கப்படும். அதன்படி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், வசிப்பிடம் பெறுவது, கண்ணியத்துடன் வாழ்வது ஆகியவை உரிமைகளாக்க உறுதி செய்யப்படும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 3 சதவீதம் சுகாதாரத்துக்காக செலவிடப்படும்.
 
நாட்டின் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 10 சதவீதமாக அதிகரிக்கப்படும். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி டாலர்கள் முதலீடு செய்யப்படும். அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருப்பது உறுதி செய்யப்படும். பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதில் ரகசிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு சட்டத்தின் கீழ் சம உரிமையுடன் வாழ்வதற்கு அந்நாட்டு அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். 13ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கவும் வலியுறுத்தப்படும். போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கால நிர்ணயம் செய்து விசாரணை நடத்த பிற நாடுகளுடன் சேர்ந்து இலங்கையை நிர்பந்திப்போம் என்பது உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளக இடம்பெற்றுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil