Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என்ற நிலை ஏன்: உச்ச நீதிமன்றம் வினா

ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என்ற நிலை ஏன்: உச்ச நீதிமன்றம் வினா
, புதன், 20 ஏப்ரல் 2011 (16:36 IST)
“இந்த நாட்டின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்று செய்திகள் கூறுகின்றன, அதே நேரத்தில் உணவின்றி மக்கள் சாகிறார்கள் என்று செய்தியும் வருகிறது. இந்த நாடு ஏழை இந்தியா என்றும் பணக்கார இந்தியா என்றும் இரண்டாகிக் கிடப்பதை அனுமதிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றமகூறியுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கான பொது விநியோகத் திட்டத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகள் குறித்து மக்கள் குடிமை உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்) தொடர்ந்த பொது நல மனுவை விசாரித்துவரும் இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் கொண்டு நீதிமன்ற அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் நிலையில், 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இன்னமும் 36 விழுக்காடு என்று வைத்திருப்பது ஏன் என்று வினா எழுப்பிய நீதிபதிகள், எந்த அடிப்படையில் வறுமைக் கோடு நிர்ணயிக்கப்படுகிறது என்றும் அரசைக் கேட்டுள்ளது.

“இரண்டு இந்தியாக்கள் உள்ளன, அதனை ஏற்க முடியாது. சத்துணவு கிட்டாத நிலைக்குக் காரணமான இந்த முரண்பாட்டை என்னவென்று கூறுவது. நீங்கள் இந்நாட்டை வல்லரசு என்று கூறுகிறீர்கள், மறுபக்கம் உணவின்றி மக்கள் செத்து மடிகிறார்கள். சத்துணவுப் பற்றாக்குறையை முழுமையாக நீக்க வேண்டும்” என்று அரசு வழக்குரைஞர் மோகன் பராசரணைப் பார்த்து நீதிபதிகள் கூறினர்.

“நமது நாட்டின் உணவுக் கிடங்களில் போதுமான அளவிற்கு உணவுப் பொருட்கள் உள்ளன என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதே நேரத்தில் உணவின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனரே, இது என்ன வினோதம்?என்று கேட்ட நீதிபதிகள், சத்தற்ற உணவு நிலையை குறைக்க, பொது விநியோகத் திட்டத்தை அரசு பலப்படுத்தி வருவதாகவும், அதனால் சத்துணவின்மை குறைந்து வருவதாகவும் மோகன் பராசரன் கூறியதற்கு, “குறைந்து வருகிறது என்றார் என்ன பொருள்? அது முழுமையாக இல்லாத நிலை ஏற்படவேண்டும்” என்று கூறினர்.

நமது நாட்டின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிவதாக வந்த நாளிதழ் செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “இது மகிழ்ச்சியளிக்கூடிய செய்திதான். ஆனால் அதன் பலன் மக்களுக்கு சென்று சேரவில்லை என்றால் என்ன பயன்?என்று கேட்டனர்.

என்ன அடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அளவிடப்படுகிறார்கள் என்று கேட்ட நீதிபதிகள், இந்த நாட்டில் 36 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளார்கள் என்று 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கை வைத்துக்கொண்டு 2011இல் பேசுகிறீர்கள் என்று கூறிவிட்டு, காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளே தங்கள் மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் அளவு 36 விழுக்காட்டிற்கு மேல் என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டினர்.

நகர்புறத்தில் நாள் ஒன்றிற்கு ரூ.20க்கும் அதிகமான சம்பாதிப்பவர்கள், கிராம்ப்புறங்களில் ரூ.11க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழும் மக்கள் என்று திட்ட ஆணையம் கூறுவதை ஏற்க முடியுமா என்று வினா எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் கூறும் வருவாய் கிராமத்தில் வாழக் கூட போதுமானதல்ல என்று கூறியுள்ளனர்.

“வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை அளவிட என்ன அடிப்படை கையாளப்படுகிறது என்பதை திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் விளக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil