Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொட்டால் பூமலரும்

தொட்டால் பூமலரும்

Webdunia

webdunia photoWD
ஷக்தி, கெளரிமுன்ஜால், ராஜ்கிரண், நாசர், சுகன்யா, வடிவேலு, சந்தானம், மதன்பாப் நடிப்பில் ஆகாஷ் அசோக்குமார் ஒளிப்பதிவில் யுவன்சங்கர் ராஜா இசையில் பி. வாசு இயக்கியுள்ள படம். தயாரிப்பு சபையர் மீடியா அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்.

டுட்டோரியல் காலேஜ் புரொபசர் நாசரின் மகன் ஷக்தி. கோடீஸ்வரி சுகன்யாவின் மகள் கெளரிமுன்ஜால். கெளரியின் தாய்மாமன் மும்பை தாதா வரதராஜன் வாண்டையார்தான் ராஜ்கிரண். ஷக்தியின் சித்தப்பா வடிவேலு. ஷக்தி படிக்கும் கல்லூரிக்கு வரும் புதிய மாணவி கெளரி. சில சந்திப்புகள் காதலாக மலர்கிறது. இரு வீட்டிலும் எதிர்ப்பு ராஜ்கிரணின் அச்சுறுத்தல் இவற்றையெல்லாம் மீறி ஷக்தி எப்படி புத்திசாலித்தனமாகக் காய் நகர்த்தி காதலியைக் கைப்பிடிக்கிறார் என்பதுதான் முடிவு.

அந்தஸ்தில் வேறுபட்ட இருவர் காதலிப்பதும் சில் அஜால் குஜால் வேலைகள் செய்து இருவரும் ஒன்று சேர்வதும் தமிழ்ச் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும் கதையை உயிரோட்டமும் யதார்த்தமும் கலந்து சொல்லவேண்டும் என்று இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார். புத்திசாலித்தனமாக பல காட்சிகளை அமைத்து கதையில் கலகலப்பு கூட்டி நகர்த்தியிருப்பது பாராட்டத்தக்கது. கதாநாயகனான தன் மகனை பெரிய சாதனை செய்து அசகாய வேலைகள் செய்யும் மிகையான பாத்திரமாகப் படைக்காமல் புத்திசாலித்தனம் - சாதுரியம் இவற்றால் காரியங்களை சாதிக்கும் இளைஞனாகக் காட்டியிருப்பது ரசிக்கவைக்கும் யதார்த்தம். செண்டிமென்ட் காட்சிகள் வைப்பது பி.வாசுவிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இதிலும் அம்மா, அப்பா செண்டிமென்ட் காட்சிகள் உண்டு. ஜமாய்க்கிறார்.

காதலர்கள் இருவரும் சந்திக்க மறைமுகமாக தகவல் பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் சுளீர் சுவாரஸ்யம். இதை படம் முழுக்க ஆங்காங்கே தூவியிருப்பது நல்ல கலகலப்பு.

புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு `பொளந்து' கட்டியிருக்கிறார் ஷக்தி. நன்றாகப் பெண்டு நிமித்தியிருக்கிறார் வாசு. அநேக காட்சிகளில் ஷக்தியிடம் விஜய்யின் மேனரிசம் எட்டிப் பார்க்கிறது. இருப்பினும் துறுதுறுப்பில் மின்னுகிறார்.

நாயகி கெளரிமுன்ஜால் பளீர் நிறம். சுமாரான தோற்றம். மிகச் சுமாரான நடிப்பு. ஷக்தியின் இளமைக்கும் துறுதுறுப்புக்கும் இணையாக நாயகியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

வரதராஜ வாண்டையார் ராஜ்கிரண், தன் இடத்தை உணர்த்தியிருக்கிறார். வீரத்திலும் ஈரத்திலும் பளிச்சிடுகிறார். காதலியின் தாயாக வரும் சுகன்யா அழகான வில்லி. நாயகிக்கு அக்கா மாதிரி தெரிகிறார். நாசர் ஷக்தியின் அப்பாவாக வருகிறார்.

மும்பை தாதா என்று வாய் உதார் விட்டு வாங்கிக் கட்டிக் கொள்வதும் ராஜ்கிரணுக்குப் பயந்து வரிசையாக மாறு வேடங்கள் போட்டு அடிவாங்குவதும் என வடிவேலு செய்யும் காமெடி கலாட்டா சரியான கொத்து பரோட்டா.

யுவனின் இசையில் எல்லாப் பாடல்களிலும் இளமை வழிந்தோடுகிறது. வாலியின் வரிகளில் வாலிபம் எட்டிப் பார்க்கிறது. ஆறு பாடல்களும் இளமை இனிமை.

படத்தில் நாயகன் ஷக்தி, இசை யுவன்சங்கர் ராஜா, ஒளிப்பதிவு ஆகாஷ் அசோக்குமார், பாடிய விஜய் ஜேசுதாஸ் என பல வாரிசுகளின் கொடிகள் பறக்கின்றன.

தன் 'கரம் மசாலா' பாணியிலிருந்து விலகி நின்று இளமையான ஒரு படத்தைக் கொடுத்த வகையில் இயக்குனரைப் பாராட்டலாம்.

Share this Story:

Follow Webdunia tamil