Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேட்டை - விமர்சனம்

சேட்டை - விமர்சனம்
, புதன், 10 ஏப்ரல் 2013 (10:43 IST)
எம்ஜிஆர் காலந்தொட்டு இருக்கிற கதை. வைரம் இடம் மாறிப் போவதால் ஏற்படும் குழப்பங்கள். இந்த அரதப்பழசான கதை இரண்டு வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து கல்ட் மூவி என கலெக்ஷனும், விமர்சனமும் பெற காரணமாக அமைந்தது, படம் நெடுக வரும் கொண்டாட்டமான வசனங்களும், மெல்லிய நகைச்சுவையும். தமிழில் இந்த இரண்டும் படுவீக். ஸோ, ரிசல்ட்...?
FILE

தமிழின் முதல் முழுமையான 'மோஷன்' பிக்சர் எடுக்க வேண்டும் என்ற யுடிவி தனஞ்செயனின் விருப்பம் மட்டுமே சேட்டையில் நிறைவேறியிருக்கிறது.

தோழிக்காக பார்சல் ஒன்றை உரியவரிடம் ஒப்படைக்க ஆர்யாவிடம் தருகிறார் ஏர்ஹோஸ்டஸ்ஸான ஹன்சிகா மோத்வானி. பார்சலில் இருப்பது கடத்தல் வைரங்கள் என்பது ஹன்சிகாவுக்கு தெரியாது. ஆர்யா தனது ரூம்மேட் நக்கி சந்தானத்திடம் அந்த பார்சலை தருகிறார். சந்தானம் ரோட்டோர இலியானா சிக்கனை தின்று வயிறு கெட்டுப் போய் டாய்லெட்டே கதி என்று கிடக்கிறார். இந்நிலையில் வைரம் இருக்கும் பார்சலை இன்னொரு ரூம்மேட்டான பிரேம்ஜியிடம் தந்து உரியவரிடம் ஒப்படைக்க சொல்கிறார். கூடவே தனது பின்பக்கப் பிரச்சனை என்ன என்பதை அறிய தனது 'பிரச்சனையில்' கொஞ்சத்தை பார்சலாக்கி லேபில் டெஸ்ட்டுக்கு தருகிறார். பார்சல் மாறி, எல்லாமே நாறிப் போகிறது.

webdunia
FILE
வழக்கமான சுறுசுறுப்புடன் திரையில் வந்தாலே அது சிறந்த நடிப்பு என ஆர்யா நினைத்திருப்பது படம் நெடுக தெரிகிறது. ரொமான்ஸ் ஏரியாவில் இது வொர்க் அவுட்டானாலும் மற்ற நேரங்களில் ஆர்யா ரொம்ப போர்யா. ஹன்சிகாவும், அஞ்சலியும் தொட்டுக் கொள்ள ஊறுகாய். ஹன்சிகா என்ற சூப்பர் அழகியைவிட்டு அஞ்சலி என்ற சுமார் டேஸ்டுக்கு ஆர்யா வருவது... ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

மோஷன் என்ற மோசமான ட்ராக்கால் சந்தானத்தின் காமெடியில் கொஞ்சமா சாக்கடை ஸ்மெல். பிரேம்ஜி வழக்கம் போல. காமெடி செய்ய முயன்றிருக்கிறார். நாசரின் வித்தியாசமான கெட்டப்பைப் பார்த்து, அடித்து தூள் கிளப்புவார் என்று பார்த்தால்... ஹும். கேப்டன் சரியாக இருந்தால்தான் நாசராலேயே நடிக்க முடியும் போல.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் ஆறுதல் தரும் அம்சம். தமனின் பின்னணி இசை சுமார். அகலாதே பாடல் எப்போதாவது தமன் தெரியாமல் இசையமைக்கும் அற்புதம். (அதை படத்திலிருந்து தூக்கிவிட்டார்களாம்).

திரைக்கதை வசனத்தில் இயக்குனர் கண்ணன், விஜய் மகேந்திரன், தனஞ்செயன் என மூன்று பேர் நெம்புகோல் போட்டும் எதுவும் சாதிக்கவில்லை என்பது சேட்டையின் ஆகப்பெரிய சோகம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil