Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம்

கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம்
, சனி, 30 மார்ச் 2013 (12:35 IST)
இந்திய சினிமாவில் மட்டும் காணப்படுகிற ஓர் அம்சம், கதைக்கு சம்பந்தமில்லாமல் வரும் காமெடி ட்ராக். லாஜிக்கிற்காக மெனக்கெடாமல் கிச்சு கிச்சு மூட்டுவதற்காக வைக்கப்படும் பகுதி. சமீபமாக இந்த காமெடி ட்ராக்கையே கொஞ்சம் விரிவாக்கி முழுநீளப் படமாக எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதில்,

பார்க்க சகிக்காத ஒன்பதுல குரு போன்றவை ஒருவகை.

கலகலப்பு மாதிரி சகித்துக் கொண்டு பார்க்கலாம் என்பவை இரண்டாவது வகை.

பார்க்கிற மாதிரி இருக்கிற பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி மூன்றாவது.
FILE

பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா இரண்டாவது வகை.

வருடந்தோறும் நியூஇயருக்கு, இனி குடிக்க மாட்டோம் என்று சபதம் செய்து, விடிவதற்குள் ஆஃப் வேண்டாம் ஒரு ஃபுல் சொல்லு என்று ட்ராக் மாறும் நண்பர் கூட்டம் விமல், சிவ கார்த்திகேயன், சூரி மற்றும் இன்னொருவர் (இன்னொருவர் நான் மகான் அல்ல படத்தில் ஜெய்பிரகாஷை கொலை செய்யும் ஸ்டுடண்ட் கேரக்டரில் நடித்தவர்). குடியும், பெற்றோர்களிடம் திட்டுமாக காலண்டர் கிழிக்கும் விமல், சிவ கார்த்திகேயனின் லட்சியம் அரசியலில் பெரிய ஆளாக வேண்டும். இதற்காக எக்ஸ் எம்எல்ஏ யின் அல்லக்கை வேலையை கச்சிதமாக செய்கிறார்கள். இந்நிலையில் இருவருக்கும் காதல் குறுக்கிடுகிறது. ஊடலுக்கு பின் காதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

பெற்றோரகளால் காதலுக்கு எதிர்ப்பு வரும் என்று பார்த்தால் அப்படியில்லை. அரசியல் பிரச்சனையால் ஏதோ ஆகப்போகிறது என்றால் அதுவுமில்லை. வெட்டியாக திரியும் புள்ளைக்காக அப்பா உயிர்த் தியாகம் செய்யும் தமிழ் சினிமாவின் இன்ஸ்டன்ட் டிகாஷனுடன் அரைகுறையாக முடிகிறது படம்.

பாப்பா போட்ட தாப்பா படம் பார்த்திருக்கிறா?

அது என்ன கதை...?

கதை மேட்டரில்லை, மேட்டர்தான் கதையே.

- இது ஹீரோ, ஹீரோயினுக்கிடையே நடக்கும் உரையாடல்.

மூணு பீரு கொண்டு வாப்பா...

பீரு இல்லை...

பாட்டிலுக்கு பத்து ரூபாய் சேர்த்து தர்றேன்.

ஓகே சார், கொண்டு வர்றேன்.

- இது டாஸ்மாக்கில் நடக்கும் உரையாடல்.

இந்த இரண்டு ட்ராக்கில்தான் மொத்த படமும் பயணிக்கிறது. டாஸ்மாக் வசனம் வரும் போது தியேட்டர் அதிர்வதைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது. எங்கே போகிறது நமது ரசனை? திட்டவட்டமாக கதை என்று எதுவுமில்லை என்பதால் கேரக்டர்களின் கேனத்தனமான செயல்கள்தான் இயக்குனரின் டார்கெட். விமலின் காதலியாக வரும் பிந்து மாதவி விமலை பறந்து பறந்து அடிக்கிறார். அவரது குடும்பப் பெண்களுக்கே கணவனை அடிப்பது பரம்பரை வியாதியாம். வடிவேலு, கோவை சரளா பலமுறை அரைத்த மாவு. இதில் ரசிக்க வைப்பவர் பொண்டாட்டி பிள்ளைக்கு செலவு செய்ததை டயரியில் எழுதி வைத்து வட்டியோடு திருப்பி கேட்கும் டெல்லி கணேஷ். குடித்துவிட்டு குத்தாட்டம் எல்லாம் போடுகிறார்.

webdunia
FILE
தூங்கி எழுந்த 'சுறுசுறுப்புடன்' அதே வழக்கமான விமல். பறந்து பறந்து அடிக்கிறாடா என பம்மும் அவரது கேரக்டருக்கு அந்த நடிப்பு பொருத்தமாகவும் இருக்கிறது. சிவ கார்த்திகேயன் ஒருகாட்சியில் ரஜினி போலவே பேசுகிறார். அப்ளாஸ் அள்ளுகிறது. கறுப்பாக இருக்கிறார், களையாக சிரிக்கிறார், ஹீரோயினிடம் நன்றாக வழியவும் செய்கிறார (அடுத்த ரஜினி?) விமல், பிந்து மாதவி ஜோடியைவிட சிவ கார்த்திகேயன், ரெஜினா ஜோடியின் காதல் எபிசோட் பரவாயில்லை. மாமனார் பணத்தில் உட்கார்ந்து சாப்பிடும் சூரியின் கேரக்டர் மிகை கற்பனை என்றாலும் இடையிடையே அவர்விடும் கமெண்ட்கள் சிரிக்கிற ரகம்.

கிளைமாக்ஸை மனதில் வைத்து சிவ கார்த்திகேயனின் பெற்றோர்களின் கேரக்டரை மட்டும் ஓரளவு சின்சியராக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். (பசங்க படத்திலும் குடும்பத் தலைவர்களின் கேரக்டர்கள் சிறப்பாக அமைந்திருக்கும். குறிப்பாக குளத்தங்கரையில் நடக்கும் உரையாடல். பாண்டிராஜின் ஏரியா இதுதான் என தோன்றுகிறது).

பாடல்கள் எதுவும் பெரிதாக உறுத்தாதது ஆறுதல். இடைவேளைக்குப் பிறகு வரும் ஹைபிட்ச் டூயட்டில் சிவ கார்த்திகேயனின் நடன அசைவுகள் பாடலுக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை.

இன்றைய வெகுஜன ரசனையை மனதில் வைத்து சரியாக அடித்திருக்கிறார் பாண்டிராஜ் ஜனங்களும் வஞ்சனையில்லாமல் சிரிக்கிறார்கள்.

படத்தில் சிரிப்பு இருக்கிறது, சென்டிமெண்ட் இருக்கிறது... பசங்க படத்தில் நம்பிக்கை தந்த பாண்டிராஜ்... பாண்டிராஜ் என்கிற இயக்குனரைதான் காணவில்லை. மலிவான ரசனை அவரையும் விழுங்கியது நமது துரதிர்ஷ்டம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil