Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஞ்சிவரம் - விமர்சனம்

காஞ்சிவரம் - விமர்சனம்
, சனி, 28 மார்ச் 2009 (17:24 IST)
பிரியதர்ஷன் வணிக ரீதியான சமாதானங்களுக்கு இடம் கொடுக்காமல் இயக்கியிருக்கும் முதல் படம் காஞ்சிவரம். மலையாளியான அவர் தமிழகத்தின் பாரம்பரிய காஞ்சி பட்டு நெசவாளர்களின் துயரத்தை சொல்ல முயன்றிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்.

கதை நிகழும் காலகட்டம் சுதந்திரத்துக்கு முந்தையது. அந்த காலகட்டத்தில் பட்டு நெசவாளர்கள் தங்களது உழைப்புக்கான நியாயமான கூலி கிடைக்காமல் கடைநிலை வாழ்க்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரான வேங்கடத்துக்கு, தனது திருமணத்தின்போது மனைவிக்கு பட்டுப்புடவை உடுத்த வேண்டும் என்று ஆசை. ஆனால், அந்த ஆசை நிறைவேறாம‌ல் போக தனது மகளின் திருமணத்துக்கு பட்டுப்புடவை அளிப்பேன் என்று கூறுகிறார். வேங்கடத்தின் இந்த எளிய ஆசை நிறைவேறியதா என்பதே கதை.

webdunia photoWD


வேங்கடமாக பிரகாஷ்ரா‌ஜ் நடித்துள்ளார். மகளுக்கு பட்டுப்புடவை அளிப்பதற்காக வாயில் பட்டு நூலை பதுக்கிவந்து வீட்டில் யாருக்கும் தெ‌ரியாமல் புடவை நெய்யும் பாசமுள்ள அப்பா. கம்யூனிஸ்டுகளால் ஈர்க்கப்பட்டு இடதுசா‌ரியாக அவர் மாறுவதும், தொழிலாளிகளுக்காக போராடுவதும் தொழிற்சங்கங்களின் ஆரம்பகாலத்தை பிரதிபலிக்கிறது.

வேங்கடம் வாயில் நூல் பதுக்கி எடுத்து வருவது தெ‌ரிய வந்ததும் அவரை திருடன் என்று கூறி அடித்து உதைக்கின்றனர். அவரது இடதுசா‌ரி நண்பர் அதனை தடுக்காததுடன் அவரது மகளின் திருமணத்தையும் தடுத்து நிறுத்துகிறார். இடதுசா‌ரிகளின் ஆரம்ப காலத்தைப் பற்றிய நேர்மையான பதிவாக இதனை கொள்ள முடியாது.

இடதுசா‌ரி நண்பர்கள் வேங்கடத்தின் மீது வெறுப்பை காட்டுவதும், அவரது மகளின் திருமணம் நின்று போவதும், மகள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதும், பரோலில் வரும் பிரகாஷ்ரா‌ஜ் தன் கையாலே மகளுக்கு விஷம் கொடுப்பதும்... மைய கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்கள் கழிவிரக்கம் கொள்ளும்படி தேவைக்கு அதிகமாக திணிக்கப்படுகிறது.

பிரகாஷ்ரா‌ஜ் எல்லா காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். அப்படி அவர் நடித்திருப்பது அனைவருக்கும் தெ‌ரிவதுதான் அந்த கதாபாத்திரத்தின் குறையாகவும் இருக்கிறது. பிரகாஷ்ரா‌ஜ், அவரது மனைவியாக வரும் ஸ்ரேயா ரெட்டி, மகளாக வரும் ஷம்மு மூன்று பேரையும்விட துணை கதாபாத்திங்கள் இயற்கையாகவும், இயல்பாகவும் கதைக்கு பொருந்திப் போகிறார்கள்.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறார் கலை இயக்குனர் சாபு சி‌ரில். திருவின் ஒளிப்பதிவு அதற்கு துணை செய்கிறது. வெள்ளாவியிலிருந்து அப்போதுதான் வந்தது போன்ற பளீர் காஸ்ட்யூம்கள் நெருடல்.

எம்.ஜப்.ஸ்ரீகுமா‌ரின் இசையில் காட்சிகள் மேலும் துலங்குகின்றன. பாடல்களில் இனிமை. கதையோட்டத்தில் துயரங்களை துணிமூட்டையாக அடுக்காமலிருந்திருந்தால் காஞ்சிப் பட்டு மேலும் பளபளத்திருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil