Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடல் - விமர்சனம்

கடல் - விமர்சனம்
, வியாழன், 7 பிப்ரவரி 2013 (17:33 IST)
இறையியல் படிக்க வரும் இரு மாணவர்கள் அரவிந்த்சாமியும், அர்ஜுனும். ஒரு நிகழ்வு அரவிந்த்சாமி மீது தீராத பகையை அர்ஜுனுக்குள் ஏற்படுத்துகிறது. உன்னை பழிவாங்குவதுதான் என்னுடைய வேலை என்று வன்மத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறார்.

FILE
ஏசுவின் பிரதிநிதியாக அரவிந்த்சாமியின் கதாபாத்திரமும், சாத்தானின் சகல துஷ்டத்தனங்களுடன் அர்ஜுன் கதாபாத்திரமும் படைக்கப்பட்டிருக்கிறது. தாந்தேயின் கவிதையில் வரும் அன்பே உருவான பியாட்‌ரிஸ் கதாபாத்திரமும் உண்டு.

கடவுள் - சாத்தான் எதிர்மறை கதைக்களத்தில் ஜெயமோகன் பெ‌ரிய பலசாலி. அவ‌ரின் பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் மிகச்சிறந்த பகுதி ஏசுவைப் பற்றி வரும் இடம் என்று தயங்காமல் சொல்லலாம். ஆக, இந்தக் கதையில் பெ‌ரிய பாதகமில்லை. அதை எக்ஸ்க்யூட் செய்தவிதம்தான் குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்புகிறது.

பராம‌ரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் கோயிலுக்கு பாதி‌ரியாக வரும் அரவிந்த்சாமி அந்த மக்களிடம் அதீத பொறுமை காட்டுகிறார். அங்கு அனாதையாக தி‌ரியும் பாலியல் தொழிலாளியின் மகனை அடாவடியிலிருந்து திருத்தி நல்வழிப்படுத்துகிறார். இந்த‌‌‌காட்சிகளின் வழியாக அரவிந்த்சாமியின் கடவுளின் பிரதிநிதி பிம்பம் ஏகதேசம் கட்டமைக்கப்படுகிறது. மாறாக அர்ஜுனின் கதாபாத்திரம் ஆரம்ப காட்சிகளோடு ச‌ரி. பிறகு தமிழ் சினிமாவின் சாதாரண வில்லனாகிவிடுகிறது.

webdunia
FILE
கௌதமின் சின்ன வயசு கேரக்ட‌ரில் வரும் அந்த பொடியனின் நடிப்பு குழந்தைகளை இயல்பாக நடிக்க வைப்பதில் மணிரத்னம் ஒரு மாஸ்டர் என்பதற்கு சான்று. தாய் பாலியல் தொழிலாளி என்பதற்காக ஒரு சிறுவனை ஊரார் இப்படியா வெறுப்பார்கள்? அடாவடியாக வளரும் சிறுவனுக்கும் அரவிந்த்சாமிக்குமான காட்சிகள் - குறிப்பாக டேப் ‌ரிக்கார்ட‌ரில் அரவிந்த்சாமியை எரப்பாளி என்றெல்லாம் திட்டிவிட்டு அவ‌ரின் பொறுமைக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் எனக்கு என் அம்மா வேணும் என்று அடிமன ஆசையை வெளிப்படுத்தும் இடம். இந்த டேப் ‌ரிக்கார்டர் கௌதம் வளர்ந்து தான் காதலிக்கும் பெண்ணை - துளசி - அரவிந்த்சாமியிடம் அறிமுகப்படுத்தும் போது மீண்டும் வருகிறது. எனக்கு அம்மா வேணும் என்ற கௌதமின் சிறு வயது கதறலை கேட்டு துளசி அப்படியே கண்ணீருடன் கௌதமை கட்டிக் கொள்ளும் இடம் கடலின் ஆன்மா வெளிப்படும் முக்கியமான பகுதி.

உன்னை பழிவாங்குவதுதான் என்னுடைய வேலை என்று கிளம்பும் அர்ஜுன் பிறகு கதையில் வருவதேயில்லை. அரவிந்த்சாமியுடனான அவ‌ரின் சந்திப்பு எதிர்பாராதவிதமாகவே நடக்கிறது. இது படத்துக்கு ஒரு பின்னடைவு. கிடைத்த சந்தர்ப்பத்தில் அரவிந்த்சாமியை வெற்றிகரமாக ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறார் அர்ஜுன்.

கௌதம் துறுதுறுவென இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். அர்ஜுனுடன் அவர் சேர்ந்து கொலைகளாக செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. செயற்கையான இந்தக் காட்சியால் அவர் துளசியின் தூய அன்பால் மன்னிக்கப்பட்டு திருந்தும் - கிளாஸான காட்சியும் பெ‌ரிய பாதிப்பின்றி கடந்துவிடுகிறது. இந்தப் படத்துக்காக துளசி 15 கிலோ இளைத்தாராம். போதாது இன்னும் பதினைந்து இளைக்க வேண்டும். அவ‌ரின் இன்னசென்ட் முகம் பியாட்‌ரிஸ் கேரக்டருக்கு பொருந்திப் போகிறது.

webdunia
FILE
கிளைமாக்ஸில் அரவிந்த்சாமி லிவரை இழுத்தால் படகில் தலைகீழாக தொங்கும் அர்ஜுன் கடலில் மூழ்கி இறந்துவிடுவார். அப்போதும் தனது குணத்தை கைவிடாமல், நான் செத்தால் செத்தும் நான் ஜெயித்துவிடுவேன், நீ வாழ்ந்தாலும் தோற்றுவிடுவாய் என்று கூறும் இடம்தான் இந்தப் படத்தின் மையம். ஆனால் அதற்கான தடயம் படத்தில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காட்சியின் தேவையை விட அந்த‌காட்சியின் சூழலை இயற்கையாக காண்பிக்கிறேன் என்று மணிரத்னம் செய்திருக்கும் கவனச்சிதறல் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றவிடாமல் செய்கிறது. புதிதாக ஊருக்கு வரும் அரவிந்த்சாமியிடம் மீன் விற்பவள் அடுக்கடுக்காகப் பேசிக் கொண்டே போகிறாள். அந்த இரைச்சலும், சத்தமும் எதற்கு? கோயிலுக்கு வராத ஊர்க்காரர்களை தேடி டேப் ‌ரிக்கார்டருடன் மீன் சந்தைக்கே வருகிறார் அரவிந்த்சாமி. ஒவ்வொருவரும் தங்களின் மனதில் உள்ளதை டேப் ‌ரிக்கார்டர் முன்பாகச் சொல்வது எப்படிப்பட்ட காட்சி. ஆனால் சுற்றிலும் உள்ளவர்களின் சளசளப்பும், இரைச்சலும் அந்தக் காட்சியையே காலி செய்துவிடுகிறது.

webdunia
FILE
(மணிரத்னத்தின் மௌனராகம், ரோஜபோன்ற வெற்றி பெற்ற படங்களில் மனதை தொட்ட காட்சிகள் அனைத்தும் இப்படிப்பட்ட சலசலப்பில்லாத வகையில் இருப்பதை‌‌‌காணலாம். இந்தப் படத்தில் கௌதமை துளசி அணைத்து ஆறுதல்படுத்தும் இடம், அவனை துளசி இனிமே தப்பு செய்யாம இரு என்று மன்னிக்கும் இடம் போன்றவையும் கவனச்சிதறல் ஏற்படுத்தாத வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்). டைட்டில் போடுவதற்கு முன்னால் அரவிந்த்சாமி, அர்ஜுன் வரும் காட்சிகள்தான் இந்தப் படத்தின் கச்சிதமான பகுதி. சொற்ப நேரத்தில் இருவரையும் அறிமுகப்படுத்த வேண்டும், இருவ‌ரின் குணங்களையும் காட்ட வேண்டும், இருவருக்குமான பிரச்சனையை சொல்ல வேண்டும்... இதனால் அலைபாயாமல் தேவைக்கு‌ரியவை மட்டுமே இதில் காட்டப்பட்டிருக்கும்.

கன்னியாகும‌ரி பகுதியின் கடற்புற வட்டார வழக்கு நேரடியாக கேட்டாலே பு‌ரியாது. இதில் ஒரு ஊரே கூடி நின்று பேசுவதுபோன்ற காட்சியில் பல வசனங்களை யூகிக்கதான் செய்ய வேண்டியிருக்கிறது. அதேநேரம் மணிரத்னத்தின் ட்ரேட் மார்க் முக்கால் வார்த்தை வசனங்கள் இல்லாதது ஆறுதல். யதார்த்தவகை கதையில் ஃபேன்டஸியான பாடல் காட்சிகளும், அதன் இசையும் - நன்றாக இருந்தும் அந்நியமான உணர்வையே தருவது இன்னொரு குறை.

webdunia
FILE
மீனவர்களுக்கு கடலுக்கு அடுத்து பிரதானமானது கோயில். இதில் வரும் மீனவ கிராமத்தில் கோயிலே பாழடைந்து கிடக்கிறது. இப்படியொரு மீனவ கிராமம் இருக்கிறதா? பிரசவம் பார்க்க கௌதம் போன்ற இளைஞனை ஊர்மக்கள் அனுமதிப்பார்களா? இதெல்லாம் ஜெயமோகனுக்கான கேள்விகள்.

ஒளிப்பதிவு, இசை, மேக்கிங், நடிப்பு எல்லாமே ஏ கிளாஸ். மிஸ்ஸாவது நல்ல திரைக்கதையும், கதை தர வேண்டிய ஃபீலிங்கும்.

மூளையால் 'திங்க்' பண்ணி எடுக்காமல் இதயத்தால் 'ஃபீல்' பண்ணி எடுக்கும் போது பழைய மணிரத்னத்தை மறுபடியும் பார்க்கலாம் என்பதற்கான தடயம் இந்தப் படத்திலும் இருக்கவே செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil