Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர்களாகவே வாழ்வோம்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (17:23 IST)
காதலிக்கும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள். காதலிக்கும் என்றால் காதலியையோ அல்லது காதலரையோ மட்டுமல்ல...

நமது பெற்றோரை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, உற்றார் உறவினர்களை, மனைவியை, பிள்ளைகளை, இந்த சமுதாயத்தை என நம்முடன் இருப்பவர்களை காதலிக்கும் காதலர்கள் அனைவருக்கும் இந்த வாழ்த்து சேரும்.

காதல் என்பது... நாம் பார்த்து பழகிய ஒரு நபர் நமக்கு ஏற்றவர், அவரது குணம், நடவடிக்கை, பழக்க வழக்கங்கள் நமக்கு பிடித்து அவர் இல்லாத வாழ்க்கை வெறுமை என்பதை உணர்ந்து அவரை நேசிக்கும் அந்த நொடியில் இருந்துதான் ஆரம்பமாகிறது.

காதல் பிறந்தாகிவிட்டது. அப்புறம் என்ன நமக்கு நாமே பேசி, அவரைப் பற்றியே சதா சிந்தித்து, நண்பர்களிடம் அவரைப் பற்றி மட்டுமேப் பேசி, அவரது சிந்தனையில் இருந்து விலகியிருந்த நாட்களை வாழாத நாட்களில் சேர்ப்பது வரையிலான படும் அவஸ்தை இருக்கிறதே... அவ்வளவு அருமையானதாகும்.

நமக்கிருக்கும் இதே சிந்தனை அந்தப் பக்கத்தில் இருந்தாலும் சரி... இல்லாததுபோல் நடித்தாலும் சரி.... நமது காதல் பாடல் இனிமையாக காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் எந்த அலைவரிசை மாற்றினாலும்.

பின்னர் ஒருநாள் நமக்கே அசாதாரண துணிச்சல் வந்து நமது விருப்பத்தை தெரிவித்து அங்கு சில நாட்களில் தவிப்பில் விட்டு பின்னர் சம்மதத்தை சொல்லி நம்மைத் தொலைத்த நாள் இருக்கிறதே அப்பப்பா அந்த நாள்தான் நமது மறுஜென்மத்தின் பிறந்த நாளாகவே கருதப்படும்.

அன்றில் இருந்து ஆரம்பமாகிறது நமது காதல் லீலைகள். ஒருவருக்கொருவர் பிடித்தவற்றைப் பேசித் தீர்க்க போதாத நாளில் ஊர் சுற்றுவதும், நண்பர்களுடன் அறிமுக அரட்டையும் முடிந்து ஒரு வழியாக நமது அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு வர ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம்.

பின்னர்தான் ஆரம்பிக்கிறது பிரச்சினை, பணி நிமித்தமாக நேரம் தவறுதல், குடும்ப பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் என வெடிக்கிறது எரிமலை.

இந்த எரிமலை குழம்புகளில் சிக்கி சாம்பலான எத்தனையோ காதல் ஜோடிகளும் உண்டு.

இத்தனையும் தாண்டி நின்று போராடி காதல் வாழ்க்கையில் வெற்றி பெற்று திருமண பந்தத்திற்குள் நுழைந்தால் அங்கும் புயல், சூறாவளி என்று சீற்றங்களை சந்திக்க வேண்டி வரும்.

காதலிக்கும்போது நாம் ரசித்து ரசித்து ஓய்ந்தவை எல்லாம் தற்போது சகித்துக் கொள்ளக் கூட முடியாதவைகளாக உருமாறும். இவையெல்லாம் எல்லோர் வாழ்விலும் நடப்பவையே...

இதைத் தவிர்க்க... நாம் காதலிக்கும் நபரை நமக்கேற்றவராக மாற்றும் எண்ணத்தை கைவிட்டு, அவரை அவராகவே நாம் காதலிக்கும் வகையில் நாம்தான் மாற வேண்டும்.

அவரது சொந்தங்களையும், பந்தங்களையும் தன்னுடையதாக நினைக்க வேண்டும் என்பதெல்லாம் கூட வேண்டாம், நம்முடையதாக நினைத்தாலே போதும்.

காதலிக்கும்போதே நமது இயல்பான குணங்களை வெளிப்படுத்தி, இயல்பான முறையில் பழகுதல் நல்லது.

எந்தச் செயலை செய்யும் முன்பும் பரஸ்பரம் மனம்விட்டுப் பேசிக் கொள்வதும், மற்றவர் அவரது கருத்தை வெளிப்படையாக வெளியிடுவதும் நமது காதலின் நீண்ட ஆயுளுக்கு நல்லது.

எந்த ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதனை தாங்களாகவே சரி செய்து கொள்ளும் பக்குவம் வேண்டும். 3வது நபரின் தலையீடு எப்போதும் சரிபடாது.

அவர் நமக்கானவர்... அவர் செய்யும் எந்த தவறையும் திருத்திக் கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு, அதனை மன்னிக்கும் கடமை நமக்கும் நிச்சயம் உண்டு என்று நினைத்துப் பாருங்களேன். பிரச்சினையே இல்லை.

நண்பர்களுக்குள் மன்னிக்கவும், நன்றி கூறவும் வாய்ப்பில்லை என்பதுபோல் காதலர்களும் அவர் செய்தது தவறு என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நாம் செய்தது தவறு என்று ஒற்றுமை உணர்வை ஓங்க விடுங்கள். போதும் நீங்கள் தான் அடுத்த வரலாறு படைக்கும் காதலர்களாக இருப்பீர்கள்.

எப்போதும் நாம் காதலித்துக் கொண்டேதான் இருக்கிறோம். அதுபோல் காதலர்களாகவே வாழ்ந்து காட்டுவோம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?