மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதுகளும் இளம் எழுத்தாளருக்கான (யுவ புரஸ்கார்) பரிசுகளும் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அப்துல் கலாம் எழுதிய "இன்டோமிடபில் ஸ்பிரிட்" என்ற நூலின் அசாமிய மொழிபெயர்ப்புக்கு சாகித்மிய அகாடமி விருது கிடைத்துள்ளது.
மொழி பெயர்ப்புக்கான விருதுகளில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட 22 நூல்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழில் இந்திரன் மொழிபெயர்த்த "பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம்' என்ற நூலுக்கு விருது கிடைத்துள்ளது. ஒரிய மொழிக் கவிஞரான மனோரமா பிஸ்வால் மஹாபாத்ரா எழுதிய "பெர்ஹாப்ஸ் பேர்ட்ஸ் மைட் ஹேவ் ஸ்லெப்ட்' என்ற கவிதைத் தொகுப்பு நூலின் மொழிபெயர்ப்பு இது.
பரிசு பெறும் ஒவ்வொரு நூலுக்கும் ரூ.50,000, செப்புப் பட்டயம் வழங்கப்படும். வரும் ஆகஸ்டு மாதம் விருதுகள் அளிக்கும் விழா நடைபெறும்.
யுவ புரஸ்கார்: இளம் எழுத்தாளருக்கான யுவ புரஸ்கார் விருது தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 16 மொழிகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் எம். தவசி எழுதிய "சேவல்கட்டு' என்ற நாவல் விருது பெறுகிறது.
பரிசு பெறும் ஒவ்வொரு நூலுக்கும் ரூ.50,000, செப்புப் பட்டயம் ஆகியவை வரும் ஆகஸ்டு மாதம் நடைபெறும விழாவில் வழங்கப்படும்.
சாகித்ய அகாதெமியின் நிர்வாகக் குழுக் கூட்டம் அதன் தலைவர் சுனில் கங்கோபாத்யாய தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேற்கண்ட விருதுகள் அறிவிக்கப்பட்டன.