[" ஹரிலால் காந்தி: எ லைஃப ்" - எனும் நூல் காந்தியின் மூத்த மைந்தன் ஹரிலால் காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலாகும். குஜராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் த்ரைதீப் ஷ்ருத் என்பவர், இவர் அரசியல் விஞ்ஞானி மற்றும் கலாச்சார வரலாற்றியலாளர் ஆவார், நாராயண தேசாய் எழுதிய காந்தி வாழ்க்கை வரலாற்று நூல் 4 தொகுதிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இவர் சபர்மதி ஆசிரமத்திலும் தொண்டாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.]
காந்தியின் மூத்த மைந்தன் ஹரிலால் இளம் வயதிலிருந்தே தனது தந்தையின் வாழ்க்கைத் தத்துவம் மற்றும் மதிப்பீடுகளில் அதிருப்தி கொண்டிருந்தார். காந்தி தனது மதிப்பீடுகளுக்காக ஹரிலாலையும் சகோதரர்களையும் நவீன கல்வியை கற்க விடாமல் விலக்கி வைத்தார் என நம்பினார். இப்படிச் செய்வதன் மூலம் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிய தவறைச் செய்தார் என்றும் ஹரிலால் நம்பினார்.
அதனால் ஹரிலால் தனது இளமையிலிருந்தே காந்தியை பழிவாங்கத் தொடங்கித் தன் விருப்பப்படியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துச் சென்றார்.
ஹரிலால் மேற்கொண்ட பாதை அவரை சீரழித்தது, அவரைக் குறைப்படுத்தியது. காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, ஹரிலால், காந்தியுடன் சேர்ந்து பல அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறைக்கும் சென்றுள்ளார். இதெல்லாவற்றையும் மீறித் தந்தையைப் புறக்கணிப்பதில் மூர்க்கமாக அவரது இச்சை செயல்பட்டது. தனது தோல்விகள் அனைத்திற்கும் காரணம் தந்தைதான் என்னும் காரணம் அவர் வாழ்க்கை முழுவதும் துரத்தியது. அவரும் தந்தையை எதிர்த்து ஓடினார் தோல்வியின் வெவ்வேறு சாத்திய மூலைகளுக்கு.
ஹரிலால் காந்தியின் உறுதிப்பாட்டை நம்ப இயலவில்லை. ஒருவர் தன் குழந்தைகளை விட மற்ற குழந்தைகளை எப்படி நேசிக்க முடியும்? காந்திக்கு முஸ்லிம்கள் மேல் இருந்த நேசத்தை நாதுராம் கோட்சே எப்படிப் புரிந்து கொள்ள முடியவில்லையோ, அதுபோல ஒரு வகையில் நாம் ஹரிலாலையும் கோட்சேயையும் ஒப்பிடாமல் இருக்க முடியாது.
தந்தைக்கும் மகனுக்கும் இரு அடிப்படைகளின் மோதல்தான் தொடர்ந்து நிகழ்ந்திருக்க வேண்டும்.
ஹரிலால் மதுவிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். காந்தியோ ராம நாமத்துக்கு. ஹரிலால் சபலங்களுக்கு உட்பட்டார். தந்தையோ பிரம்மச்சரியத்தை வென்றார். மோட்சம் கூட சாத்தியமாகியிருக்கலாம்.
நாம் கவனமாகப் பார்த்தால் இருவருக்கும் நிறைய ஒப்புமைகள் இருக்கும்.
ஹரிலாலின் கலகத்தன்மை காந்தியின் வைராக்கியத்தை உரமேற்றியிருக்கலாம். தம்மால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது என்ற உணர்விலிருந்து இது எழுந்திருக்கக் கூடும்.
ஹரிலால் இத்தனை முரண்களுக்கு இடையிலும் தந்தை மீதும், தாயின் மீதும், அளப்பரிய பிரியத்தைக் காண்பித்துள்ளார்.
காந்தியின் வாழ்க்கையில் ஹரிலால் என்பவன் எதற்குள்ளும் அடங்க மறுக்கும் தன் சுமை துறந்த ஒரு விடுதலைத் தேவன்.
அந்த வகையில் ஹரிலால் மேற்கொண்ட சுய அழிவு பரிவுடன் பரிசீலிக்கப்பட வேண்டியது.
ஹரிலால் குறித்த இப்புத்தகத்தை படிக்கும்போது காந்தி, ஹரிலால் என்ற இரு ஆளுமைகளுமே நம் மதிப்பில் உயர்வார்கள்.
காந்தி இந்தியாவை தனது ஆசிரமமாகவே பார்த்துள்ளார். இந்தியாவைத் தனது கருப்பையாகவே அவர் உருவகம் செய்திருக்கக் கூடும்.
தந்தையின் பெரு நிழலின் கருப்பை விழுங்கித் தீமையும் துரதிர்ஷ்டமுமான பாதையில் சென்ற ஹரிலாலுக்கு வேறு தேர்வு இருந்திருக்க முடியாது. ஏனெனில் நன்மையின் பெரு வெளிச்சமாய்த் தந்தை இருக்கும்போது சாகச உணர்வுள்ள ஒரு ஹரிலாலின் இருத்தல் வேட்கை இப்பாதையிலேயே அவரைச் செலுத்தியிருக்கும்.
webdunia photo
WD
இப்புத்தகத்தை படிக்கையில் காந்தி நூற்ற தர்ம ராட்டையின் நூலில் கஸ்தூரிபாயின் குருதியும், ஹரிலாலின் குருதியும் படிந்திருக்கின்றன என்ற எண்ணத்தை அகற்றமுடியவில்லை.
ஹரிலால் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள், துரதிர்ஷ்டம் துரத்த இளைப்பாற இடமில்லாமல் அலைந்து கொண்டிருப்பவனின் காதலும், விரகமும் தகிக்க எழுதப்பட்டவை. ஓர் அளவில் புதுமைப்பித்தனின் 'கண்மணி கமலாவுக்கு' - கடிதங்களை ஞாபகமூட்டுபவை. புதுமைப் பித்தனும் தந்தையை மறுதலித்து இருட்டின் புதிர்ப்பாட்டையில் பயணித்தவர்தானே.
ஹரிலாலின் முடிவு காந்தி தன் மறதியில் ஒரு இருள் தருணத்தில் வேண்டிக் கொண்ட அந்தரங்கப் பிரார்த்தனையால் கூட விளைந்திருக்கலாம். காந்தியை பறிகொடுத்த துக்கத்தில் தவிக்கும் அன்னையாகக் கற்பனைச் செய்ய ஏதுள்ள கல்பற்றா நாராயணனின் கவிதை இது:
மகன் இறந்த ஓர் அன்னை யுதிஷ்ட்ரனை அணுகி ஏனிப்படி எனக்கு நிகழ்ந்தது என்றாள். பதிலுக்கு யுதிஷ்ட்ரன் சொன்னான் உற்றவரின் ஆசையின்படி அன்றி மண்ணில் ஒரு குழந்தையும் இறப்பதில்லை எந்தக் கொடுந்துயரும் நிராகரிக்க முடியாத விண்ணப்பத்தின் விளைவே நினைக்காதது நடக்குமளவுக்கு பெரிதல்ல இவ்வுலகம் நினைத்துப் பார் எப்போதும் நீயும் உள்ளெரிந்து பிரார்த்தனை செய்திருப்பாய்.
ஆனால் அது... அவள் நினைவு கூர்ந்து சொன்னாள் அப்படி நிகழவேண்டும் என்று எண்ணி அல்ல அடுத்த கணமே என்னை நானே கிழித்து ரணமாக்கியிருக்கிறேன்
தெய்வமே நான் சொன்னதென்ன என்று தீயிலிருந்து விரலெடுப்பது போல அச்சொல்லிலிருந்து என்னை இழுத்துக் கொண்டிருக்கிறேன் பெற்ற தாயின் சொல்லல்லவா பலிக்காதென்று சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் வேண்டிக்கொண்டிருந்த எதுவும் கேட்கப்படாமல் இது மட்டுமே கேட்கப்பட்டது என்கிறாயா? எத்தனை நெருக்கமானவர்களிடமும் கேட்க வழியில்லாத பிற எவரிடமும் வேண்டிக்கொள்ள முடியாத கலப்பற்ற அவசரமான ஒரு வேண்டுகோள் அதுவும் ஒரு பெற்ற தாயின் விண்ணப்பம் எப்படிக் கேட்கப்படாது போகும்? அந்த அன்னை சொல்லாததனால் போலும் இதுவரை வெளியே தெரியவில்லை இக்கதை.