அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில், அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகத் தெரிய வந்தது. இது தொடர்பாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூன்று கட்டிடத் தொழிலாளிகள் கொலை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நிர்பயா வழக்கைப் போன்று இந்த வழக்கும் பல நாட்களுக்கு பேசப்படலாம். இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில், சென்னையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்று ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் விவாதிக்கலாம். உமா மகேஸ்வரியின் மரணத்தால் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை எழுந்துள்ளது. அதனால் இன்னும் சில மாதங்களுக்கு பெண்களுக்கான பாதுகாப்பு முக்கிய பிரச்சனையாக விவாதிக்கப்படும். இதெல்லாம் தீர்வைத் தந்து விடுமா?
‘மற்ற நாடுகளில் நடப்பதை விட இது குறைவானதுதான். ஏன் கூக்குரல் எழுப்புகிறீர்கள்?’ என்று சில அறிவுஜீவிகள் கேட்கும் போது, அவர்கள் பாணியிலேயே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. எந்த நாட்டில் இப்படி கேட்கிறார்கள்? பெண்களைத் தாயாக, சகோதரியாக, இறை வடிவமாக, நதியாக, மொழியாக, நிலப்பரப்புகளாக பேசும் இந்த சமுதாயத்தில், ஒருவர் தவறு செய்தாலும் கூட பண்பாடு எங்கே போகிறது என்ற கேள்வி எழுவது தெரியவில்லையா?
இத்தகைய நேரங்களில் இரண்டு விதமாக கருத்துக்கள் எழுகின்றன. ஒன்று பெண்ணுரிமை பற்றியது. மற்றொன்று ‘அதனால்தான் சொல்கிறோம். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமென்று’ என்ற கூச்சல். கூச்சலிடுபவர்களுக்கு ஒரு கேள்வியை மட்டுமே பதிலாகத் தர முடியும். ‘உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அல்லது தோழிகளுக்கோ எழுந்தால் இப்படிதான் பேசுவீர்களா?’ என்று கேட்கத் தோன்றுகிறது.