திருமணமாகி தன் கணவருடன் நகரத்திற்கு குடி பெயர்ந்து இந்தப் போராட்ட வாழ்க்கையில் ஈடுபட்டாலும் தான் ஒரு கிராமத்து அத்யாயமே என்பதை தனது சொல்லாலும், எழுத்தாலும் நன்றாகவே பிரதிபலித்திருக்கின்றார் எழுத்தாளர் சந்திரா.
எழுத்தாளர்கள் மட்டுமின்றி, எல்லோருக்குமே இளமை என்பது கனவுகள் நிறைந்தது. ஆனால் எழுத்தாளர் சந்திராவிற்கு தனது இளமை காலத்தில் கதைகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை தான் எழுதிய பூனைகள் இல்லாத வீடு புத்தகத்தில் அற்புதமாக வடித்துள்ளார்.
கிராமத்து மனிதர்களின் எண்ணங்களை, கனவுகளை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதிவிட்டனர். எத்தனையோ படங்கள் வந்துவிட்டன. ஆயினும் கதையாக சொல்வதற்கும், புத்தகமாக வெளியிடுவதற்கும் இன்னும் ஏராளமாக இருக்கின்றது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது சந்திராவின் எழுத்துக்கள்.
கிராமத்து மனிதர்கள் மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது ஏதோ வாழ்க்கையை தள்ளிக் கொண்டு போகிறவர்கள் போல தெரிந்தாலும், அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு லட்சியக் கனவு உள்ளது. அந்தக் கனவுகளை நிறைவேற்ற அவர்கள் வாழ்கிறார்கள் என்பதை புளியம் பூ நன்றாகவே சித்தரித்துள்ளது.
தனது மகனின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த அவனுக்கு எந்த வகையிலும் உதவ முடியாத தந்தை, தான் பொத்திப் பொத்தி வளர்த்த புளியந் தோப்பை விற்றுவிட்டு திரும்பியபோது அவர் மீதிருந்து புளியம் பூ வாசம் வீசியது என்று கூறி சந்திரா தனது சிறுகதையை முடித்திருந்தாலும் அந்தக் கதையால் ஏற்பட்ட உணர்வு முடிவின்றி நம் மனதில் தொடர்கின்றது. பாராட்டத்தக்க எழுத்தோவியம்.
பூனைகள் இல்லாத வீடு சிறுகதையாய் கூறப்பட்ட சிறந்த கதை. ஒரு பாரம்பரிய வீட்டின் பெருமையையும், அங்கு வந்து சேர்ந்த பூனை, அந்த வீட்டு அம்மாவின் இதயத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்ததும், அந்த நினைவுகளில் அந்த அம்மா பூனையின் இறந்ததை அறியாமல் வாழ்வதும் எதார்த்தத்தின் சோகமான அழுத்தம். நன்றாக எழுதியுள்ளார்.
சந்திராவின் புளியம் பூ இலக்கிய பரிசு பெற்றுள்ளது என்று புத்தகத்தைப் படித்துப் புரிந்து கொண்ட நமக்கு, இன்றைக்கும் அவருடைய எழுத்துக்கள் அப்படிப்பட்ட பாராட்டிற்கும், பரிசிற்கும் உரிய கனத்தை தன்னகத்தே பெற்றுள்ளது நிறைவாய் உள்ளது.
பொழுதுபோக்கிற்காக ஊடகங்களும், இதழ்களும் என்றாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில் சந்திராவின் இந்த சிறுகதை தொகுப்பு படிப்பவர்களை அவர்கள் படிக்கும் இடத்தில் இருந்து பெயர்த்தெடுத்து எங்கோ ஓர் அழகிய கிராமத்து மூலைக்கு போக்குவரத்தின்றி தூக்கிச் செல்கிறது.
எல்லா விதத்திலும் பாராட்டத்தக்க அற்புதமான ஒரு இலக்கியப் படைப்பு அது. தமிழ் சிறுகதை வரலாற்றிற்கு புதுமைப்பித்தனில் இருந்து பேரறிஞர் அண்ணா, மு. வரதராசனார் என்று ஒரு மாபெரும் பாரம்பரிய தொடர்ச்சி உண்டு. அந்த பாரம்பரியத்தில் சந்திராவிற்கும் நிச்சயம் நிரந்தர இடம் உண்டு.
பூனைகள் இல்லாத வீடு வெளியிட்ட உயிர்மை பதிப்பகம் ஒரு நல்ல இலக்கிய சேவையை செய்துள்ளது என்று கட்டாயம் கூறலாம்.
எங்கே கிடைக்கும் இந்த புத்தகம் என்று நீங்கள் திணறக் கூடாது என்பதற்காகவே வெளியிடப்பட்ட மூன்று வாரத்திற்குப் பிறகு இன்று தருகின்றோம் மதிப்பீட்டை.
webdunia photo
WD
சென்னை புத்தக கண்காட்சியில் ஓடிச் சென்று வாங்கிக் கொள்ளுங்கள். பூனைகள் இல்லாத வீடாக உங்கள் புத்தக அலமாறி இருக்க வேண்டாம்.