Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டி கதைகளில் மறைவும் புதிய தீர்வும்

விழியன்

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2014 (13:00 IST)
சில தலைமுறைகள் முன்னர் வரையில் குழந்தைகளுக்குக் கதைகள் ஏராளமாக எளிதாகச் சென்றடைந்தன. தினம் தினம் கதைகள் கேட்பார்கள், சுவையான, சுவாரஸ்யமான கதைகள். விடுமுறை நாட்களின் மாலைகளும் இரவுகளும் பாட்டி சொல்லும் கதைகளால் நிரம்பி இருக்கும். பாட்டியின் வழியே கதை கேட்க அத்தனை ஆர்வமாக இருப்பார்கள் பேரன் பேத்திகள். உணவு உண்ணும் பொழுதில் இருந்து ஆரம்பித்துவிடும் இந்தக் கூற்று, நிலாவினைக்காட்டி தூங்க வைப்பது வரையில் தொடரும். கதை கேட்பது பெரும்பாலும் கூட்டாகவே நிகழும்.

கூட்டுக்குடும்ப வாழ்வின் மிக முக்கியமான அம்சம் பாட்டிமார்கள் வழியே கடத்தப்பட்ட கதைகள் தான். பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா மற்றும் மாமன் பிள்ளைகள், பக்கத்துவீட்டுப் பொடிசுகள் என்று பாட்டி அருகே அமர்ந்து கதைக் கேட்கும் காட்சியே ஒரு கவிதை தான். பெரும்பாலும் நீதிபோதனைக் கதைகள், ஆன்மீகக் கதைகள், கடவுள் பக்தி வளர்க்கும் சின்னக் சின்னக் கதைகள், இராமாயண மகாபாரதக் கதைகள், வீரபராக்கிரமக் கதைகள், பேய் கதைகள், நல்லதங்காள் கதை, இவர்கள் வசிக்கும் நிலப்பரப்பில் நிலவும் கதைகள், வரலாறு, நாடோடிக்கதைகள் மேலும் பாட்டிகளின் கற்பனைக்கு ஏற்றவாறு கதைகள் அமையும்.

குழந்தைகளுக்குப் பாட்டிகள் என்றால் கொள்ளப்பிரியம். தாயிடம் கூட சில சமயம் கண்டிப்புகள் நிகழும். ஆனால் பாட்டிகளிடம் கண்டிப்பு வெளிப்படுவது அபூர்வம். எதையும் மன்னித்துவிடுவார்கள், மிகப் பாசமாக இருப்பார்கள், பிடித்த பலகாரங்களை செய்துகொடுப்பார்கள் இதனால் பாட்டிகளிடம் எல்லா குழந்தைகளுக்கும் நெருக்கம் அதிகமாக இருக்கும். இவர்கள் வழியே கதைக் கேட்பது அவர்களுக்குப் பேரானாந்ததைக் கொடுத்து இருந்தது.

மாறிவிட்ட சமூகச் சூழ்நிலைகளால் கூட்டுக்குடும்பம் சிதைந்தது போலவே குழந்தைகளுக்கான கதைக் கேட்டாலும் சிதைந்து போய்விட்டது. மாற்றத்தை குறை சொன்னால் முன்னேற்றம் இருக்காது. தனிக் குடும்பம் - இந்தச் சூழலில் அவர்களுக்கு கதைகள் எப்படிச் சொல்வது என்று சிந்திக்க வேண்டும்.

இருக்கும் சிலபல கூட்டுக்குடும்பங்களில் நிலைமை என்ன? பாட்டிகளும் தாத்தாக்களும் என்ன செய்கிறார்கள்? தொலைக்காட்சிப் பெட்டி முன்னர் இருக்கிறார்கள், சீரியல்களில் முழுகிவிடுகின்றனர் என்று பொதுப்பேச்சு இருக்கிறது. அவர்கள் வாழ்க்கை அவர்களே தீர்மானிக்கின்றனர். அதில் தவறில்லை. அவர்களிடம் கதைச் சொல்ல கூறினாலும் அவர்களிடத்தில் கதைகள் இல்லை என்பதே நிதர்சனம்.

கதைகளுக்கு இருக்கும் சக்தி அபாரமானது. அது சிறுவர்களின் வாழ்க்கைப் போக்கினை மாற்றிய வரலாறுகளை நாம் கேட்டிருக்கிறோம். சத்ரபதி சிவாஜியின் தாயார் கதைகள் மூலம் ஊட்டிய வீரம் அவரை மிகச்சிறந்த வீரனாக மாற்றியது. காந்தியின் தாயார் சிறுவயதில் கூறிய ஹரிச்சந்திரன் கதைகள் அவரை வாழ்க்கை முழுவதும் உண்மையையும் அஹிம்சையையும் கடைபிடிக்க வைத்தது. உலகபிரசித்திப் பெற்றவர்கள் பலரும் தன் பாட்டி அல்லது தாயார் கூறிய கதைகளே பெரிய உந்திசக்தியாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். நமக்கும் இருக்கும் விழுமியங்களுக்கான காரணங்களை ஆராய்ந்தால், அவைக்கான வித்து நாம் கேட்ட கதைகளில் இருந்தே வந்திருக்கும் உண்மை புரியும்.

இன்னும் ஏராளம் ஏராளமான நன்மையும் அவசியமும் கொண்ட கதைகளைச் சொல்ல பாட்டிமார்கள் இல்லை என்று புலம்பல்கள் வேண்டாம். அப்ப கதைகளே வேண்டாமா? ஏன் பாட்டிகள் மட்டும் தான் கதைகளைச் சொல்ல வேண்டும்? குழந்தைகளைப் பெற்றோர்கள் எங்கே சென்றார்கள் ? இனி ஒவ்வொரு பெற்றோரும் கதைச் சொல்லிகளாக மாற வேண்டும்.

தற்காலக் குழந்தைகளை நாம் அதிகம் வதைப்பதாகவே தோன்றுகிறது. ஐந்து வயதில் இருந்து கல்வி பயில

ஆரம்பித்தாலே போதும். அந்தச் சமயத்தில் பென்சில், பேனா பிடித்து அவர்கள் எழுத ஆரம்பித்தாலே போதும். அது தான் சரி என்கின்றனர் கல்வியாளர்கள். அதற்கு முன்னர் வரையில் இனிமையாகக் காலத்தைக் கழிக்கலாம், விளையாடலாம் என்கின்றனர். முதல் வகுப்பிற்குத் தயார் செய்கிறோம் என்று எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி தோன்றின. பின்னர் இந்த வகுப்புகளுக்குத் தயாரிப்பு என்று ப்ரீ கேஜிக்கள் உருவாயின. இன்னும் ஒரு படி மேலே சென்று ‘ப்ளே ஸ்கூல்’ என்று ஒன்று உருவாக்கி இருக்கிறார்கள். பல இடங்களில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் எட்டு மாதம் முதலே கிரெச்களில் விட்டுச் செல்கின்றனர். வேறு வழி இல்லாமலும் தவிப்பது நிதர்சனம்.

குழந்தைகள் அவர்களுடைய குழந்தைத் தன்மையினை கொண்டாடாமல் இருப்பதற்கு ஏற்பாடுகள் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இதில் வாழ்ந்து தான் தீர வேண்டும். சமூக மாற்றங்களை நிகழ்த்தியாக வேண்டும். கல்வியானது வியாபாரிகள் கைகளில் இருந்து பறிக்கப்படவேண்டும். அதே சமயம் தற்காலக் குழந்தைகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியாக வேண்டும்.

அந்த மாற்றுகளில் ஒரு நல்ல தீர்வாக கதைக் கூறுவது அமையும். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் வேகமாக வாழ்க்கை ஓட்டத்திற்கு ஒரு நல்ல ப்ரேக் கதைகள். குழந்தைகளுக்குக் கதைச் சொல்லும் அனுபவம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல இதைச் சொல்லும் பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய ஆறுதல். அவர்கள் உலகிற்கு அருகே செல்ல ஒரு நல்ல வாய்ப்பு. நம் குழந்தைகளுக்கு நாம் கதை சொல்லாமல் யார் சொல்லப்போகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் கதைச் சொல்லல் ஏகப்பட்ட தேவைகளக் கொண்டுள்ளது. ஆமாம் நம் குழந்தைகளை நம்மைவிட அதிகமாக யார் நேசித்துவிடமுடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

Show comments