Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் மொழிப் போலிகள்

- ஆர்.முத்துக்குமார்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2009 (17:20 IST)
For if Sexual emancipation is a claim, notably "feminist" these terms are sometimes often badly posed, badly evaluated, too little elaborated, giving rise to derision...
- Luce Irigary (Speculum. p.148)


Then we beheld her striding, there alone,
knew that there never was a world for her
except the one she sang and singing made...

- Wallace Steven s


வரலாறு நெடுகவும் சிறைச்சாலைகளின் தொடர்ச்சியைக் கண்டான் மிஷல் ஃபூக்கோ, வரலாறையே பரமார்த்திக ஆன்மாவின் உற்பாதங்களாக கட்டமைத்தான் ஹெகல். தத்துவ வரலாறு நெடுகவும் Solipsism என்று அழைக்கப்படும் சுய ஏக நிச்சயவாதத்தின் தொடர்ச்சியை இனம் கண்டான் தத்துவ ஞானி இம்மானுயேல் லெவினாஸ். பிற மறுப்பு, பிற அழிப்பு சுயமுக நிச்சயவாதம் எந்த ஒரு தத்துவ பாரம்பரியத்திலும் இருப்பதையே அவன் வசை பாடுகிறான்.தனி நபர்களுக்கிடையே, குழுக்களுக்கிடையே, தேசங்களுக்கிடையே ஒரு போதும் வெளிப்படையான பளிங்கு போன்ற உறவுகள் பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. பேரமைப்புகளின், சிற்றமைப்புகளின் ஊடுருவல் தலையீடுகள் இன்றி எந்த உறவுகளும் இல்லை. நாமும் அறிவார்த்த வரலாறு மட்டுமின்றி எந்த ஒன்றிலும் இந்த அமைப்பின் தொடர்ச்சியை காணமுடியும். பிறகு இந்த அமைப்பு இறுகி இறுகி நமது செல்கள் வரை ஊடுருவி நீக்கமற நம்மில் ஒன்றாக கலந்து விடுகின்றன. நாமும் அதில் கரைந்து விடுகிறோம். அல்லது கரைந்துவிட பணிக்கப்படுகிறோம். அதாவது நாம் அமைப்பையே உள்ளார்ந்த இயல்பாக்கம் செய்து விடுகிறோம். இதனாலேயே அமைப்பின் மீதான விமர்சனம் தனி நபர் மீதான தாக்குதலாகவோ, குழுக்கள், சாதிகள் மீதான தாக்குதலாகவோ திரிக்கப்படுகிறது. அதனைச் செய்யும் விமர்சகன் தாக்கப்படுகிறான். அல்லது அவதூறுகளுக்கு ஆளாகிறான். எனவே விமர்சனமும் தகர்ப்பும் அவசியமானது எனினும், டி.எஸ். எலியட் கூறியது மூச்சுக் காற்று போல் இன்றியமையதது எனினும் விமர்சனம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. பிராணவாயுவைப் புடுங்கினால் மரணம் சம்பவிக்கும் என்பது போல் எந்த ஒரு பண்பாடும், தேசமும், தனி நபர்களும், குழுக்களும் விமர்சனத்தை அறுத்தெறிந்தால், பண்பாட்டு உடலியக்கத்திற்கு முக்கியமான பிராண வாயுவை அடக்கி ஒடுக்கினால் மூச்சுத் திணறி மெல்லச் சாகும்.

எதை விமர்சிப்பது யாரை விமர்சிப்பது எப்படி விமர்சிப்பது? இன்று நம் முன் எழுந்து நிற்கும் முக்கியமான கேள்வி இது. எந்த ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான அல்லது விமர்சக வாசகனுக்குமான உறவுகளும் மேற்சொன்ன அமைப்புகளின் அடக்கு முறைகளுக்கு தப்பியதில்லை. இன்று விடுதலைக்கான சொல்லாடல்களாக பண்டமாக்கம் செய்யப்பட்டுள்ள பெண்ணியம், தலித்தியம், அல்லது எந்த ஒரு இயமும் அதன் எதிர் நிலைகளான அமைப்புகளின் பயங்கரவாத பெருக்கத்தை கட்டவிழ்த்துள்ள நிலையில் அமைப்புகளுக்கு இடையே உள்ள சிக்கல்கள், சேறு பூசுதல், கொச்சை சச்சரவுகளில் விமர்சனத்தை இனங்காணுவது பேராபத்தை விளைவிக்கும்.

இந்த கட்டுரையின் சூழலுக்கு ஏற்றவாறு இவ்வாறு கூறலாம். பெண் படைப்புகளை விமர்சனம் செய்தால், "பெண்ணியம்" என்ற அமைப்பு தலையிட்டு கூச்சல்களை சேறு வாரி முகத்தில் அடிக்கும். தலித் படைப்புகளை விமர்சனம் செய்வது பயங்கரத்திற்குள் செல்லும் ஒரு சாகசம். பார்ப்பணீயம், இந்துத்துவம், இஸ்லாமியம், மிஷனரி கிறித்தவம், ஸ்டாலினியம், திராவிடியம், தனித் தமிழீயம், தூய தமிழீயம் இன்னும் எவ்வளவு அமைப்புகள் உள்ளனவோ அத்தனை அமைப்புகளின் கசிவுகளை ஒருவன் கசிவுகளே என்று கூறினால் அவனது தலை துண்டிக்கப்படும். இன்றைய காலக்கட்டம் விமர்சனத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காலக்கட்டம்.

எந்த ஒரு நியாயமான மதிப்பீட்டுச் சூழலையும் கலங்கடித்து வருகிறது இத்தகைய அமைப்புகள். ஆனால் விமர்சனப் பிரக்ஞையோ எப்போதும் மகிழ்ச்சியற்ற, திருப்தியற்ற பிரக்ஞையாக ஓய்வு ஒழிச்சலின்றி தேடி அலைந்து கொண்டிருக்கிறது. எப்போதும் ஒரு கடுந்துயரத்தின் சலன நெரிசல்களிலேயே விமர்சகன் தன் இருத்தலியல் பிரக்ஞையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். இந்த கடுந்துயரமும் சலனங்களும் தன்னை விட்டு மறைந்து விடுமோ என்று பயமும் பதட்டமும் அடைந்த படியே இருக்கிறான். இந்த பயமும் பதட்டமும்தான் ஒருவனை செயல்பட வைக்கிறது என்கிறார் இருத்தலியல் தத்துவ ஞானி சோரன் கிர்க்ககார்ட். ஆழமுள்ள படைப்பாளனின் கதியும் இதுதான்.ஆனால் இன்றைய நிலவரம் இந்த பயத்தையும் பதட்டத்தையும் மழுங்கச்செய்யும் ஒரு பயங்கரமாக வளர்ந்து நிற்கிறது. டெரிடா கூறுவது போல் Wandering all alone... என்ற நிலைக்கு யாரும் தயாராயில்லை. அமைப்புகளின் குழுக்களின், இயக்கங்களின் அடியில் போய் ஒளிந்து கொள்கிறான். அங்கிருந்து தனது வீர முழக்கங்களை எக்களிக்கிறான். இங்கு நான் படைப்பு, விமர்சனம் என்ற இருமையை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை. அது குறித்த முடிவில்லாத முணுமுணுப்புகளை, தொணதொணப்புகளை நாம் அடைப்புக் குறிக்குள் இடுவதைத் தவிர வேறு வழியில்லை.


அமைப்புகளும், அதைச் சார்ந்த படைப்பாளர்களும் விமர்சனத்தை மறுக்கின்றன, விமர்சகன் நிராகரிக்கப்படுகிறான் அல்லது கடுமையாக குற்றம்சாட்டப்படுகிறான். படைப்பாளனுக்குள் ஏற்கனவே இருக்கும் விமர்சகனை மறுதலிக்க ஆசிரியன் பலிகடாவை தேடுகிறான். விமர்சகனக்குள் எப்போதும் இருந்து வரும், ஒரு போதும்,தீர்க்கமுடியாத துன்பம ், படைப்பாளன் என்ற ஒருவர் இல்லை, ஆசிரியன் மரணமடைந்து விட்டான் என்பதை இன்னமும் அறியாமல் அல்லது அறிய முடியாமல் இருப்பதனால் ஏற்படும் துன்பமே. விமர்சகன் பிம்பங்களை உடைக்க வேண்டும ்.

- பீடிகையை இத்துடன் முடித்து கொண்டு மேற்சொன்ன அந்த அக்கரைகளுடன் நேரடியாக விஷயத்துக்கு வருவோம். எனது கவனம ் இந்த கட்டுரையில் "பெண்ணிய"க் கவிதைகள், "உடல்மொழிக் கவிதைகள்" என்றெல்லாம் மதுக்கோப்பையை உயர்த்தி சியர்ஸ் கூறி கொண்டாடப்பட்டு வரும் சமீபத்திய பெண் கவிஞர்களின் கவிதைகள். இதில் பல்வேறு விஷயங்கள் கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.முதலில் அவை பெண்ணியக் கவிதைகளே பிறகு அவை உடல் மொழிக் கவிதைகளே என்பதெல்லாம் உத்தரவாதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை. முதலில் அவை கவிதைகள்தானா? என்ற கேள்வியை ஒருவரும் எழுப்பவில்லை. கனிமொழி ஒரு கவிஞராகவே சிறு பத்திரிக்கை தளத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார். மந்தைக் கலாச்சாரத்தில்தான் "கலைஞர்" "கவிஞர்" போன்ற முன் ஒட்டுக்கள் துதிபாடுவதற்காக தேவைப்படும். அறிவியக்க சிந்தனா விமர்சனக் கலாச்சாரத்தில் கவிஞர் கனிமொழி என்று குறிப்பிடுவதற்கான தேவை என்ன இருக்கிறது என்று புரியவில்லை.


பெண் விடுதலை, பெண்ணியம், சமத்துவம் ஆகியவற்றின் மீதான செயல் பாட்டுத் தள அக்கறைகள் மொழி, விமர்சனம் படைப்பு உள்ளிட்ட இலக்கிய வெளிப்பாட்டுத் தளங்களில் நுழைந்து மதிப்பீடுகளை உருவாக்கி, ஒரு விதமான கருத்தொற்றுமையை உருவாக்கி விமர்சன வாசிப்புக்கு கடும் முட்டுக்கட்டைகளை இட்டு வருகின்றன.

1970 களிலிருந்தே பெண் கவிஞர்கள் பலர் சிறு பத்திரிகை தளங்களில் புழங்கி வருகின்றனர். மீனாட்சி மற்றும் கிருஷாங்கினி ஆகியோர் பெயர்களும் ஒரு சில கவிதைகளும் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியாது.இவர்கள் பெண்ணியம், உடல் மொழி, மீறல் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்ளாமலேயே தங்கள் அனுபவத்திலிருந்து ஒரு பெண்ணாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஓரளவிற்கு எடுத்துரைக்கின்றனர் என்று கூறலாம்.

ஆனால் சமீபமாக குட்டி ரேவதி, சுகிரதராணி, மாலதி மைத்ரி, கனிமொழி, சல்மா ஆகியோர் பெயர்கள் பெரிய அளவுக்கு விளம்பரம் செய்யப்பட்டு விற்கப்பட்டன. இந்த பிராபல்யமும் பிராப்தமும் லதா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வேறு சில பெண் கவிஞர்களுக்கு கிடைக்காதது ஆச்சரியமே!

இந்த பரபரப்புக்கு முக்கிய காரணம் இவர்களில் ஒரு சிலர் பாலியல் மொழியை பயன்படுத்துகின்றனர் என்று போலித் தமிழ் பண்பாட்டுவாதக் குரல்கள் சில கண்டனக்குரல்களை எழுப்பியதே. இவர்களின் மேம்போக்கான ஒழுக்கவாத மலினவாத தாக்குதல்களால் இந்தக் கவிதைகள் "பாலியல் மொழி" "உடல்மொழி" "பெண் வித்தியாசம்" "பெண்ணியம்" என்றெல்லாம் பண்டமாக்கம் செய்யப்பட்டு போலிப் பண்டங்கள் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டன.

மலினவாத "தமிழ்ப் பண்பாட்டு" பேணிகாத்தலுக்கு எதிர் நிலையில் இந்த கவிதைகளை பேணிகாக்கவேண்டிய கட்டாயம் வெளியீட்டு நிறுவனங்களுக்கு இல்லை. மாறாக இந்த சூழலை பயன்படுத்தி ஏதாவது புத்தகத்தை விற்றால் சரி அவ்வளவே. அதனாலேயே இந்த சுயப்பிரஸ்தாப உடல்மொழி, பாலியல் மீறல் வெளிப்பாடுகள் புழக்கத்திற்கு வந்தன. சிறுபத்திரிகா வெளியீட்டு நிறுவனங்கள் உருவாக்கிய "சிறப்புப் பொருளாதார" மண்டலத்தில் சிலர் " Poster girls" தகுதிக்கு உயர்வு பெற்றனர். சிலர் பின்னுக்கு தள்ளப்பட்டனர். வெகுஜன அரங்கில் வெளியீட்டு சிறப்பு நிகழ்ச்சிகள், கவியரங்கங்கள் என்ற மார்க்கெட்டிங் உத்தி. சிறுபத்திரிக்கை வெளியீட்டு நிறுவனங்களுக்கோ முன்னுரை, மதிப்புரை என்ற மார்க்கெட்டிங் உத்தி.

குட்டி ரேவதிக்கோர் தேவதேவன், மாலதி மைத்ரிக்கோர் பிரம்மராஜன், சுகிர்தராணிக்கோர் ஞானக் கூத்தன் என்று முன்னுரை எழுதப்பட்டன. குட்டி ரேவதியின் முதல் தொகுப்பில் "உயர் ரக வாசனைத் திரவியமாய் இருக்கிறது இருப்பு" என்ற வரியை கண்டவுடன் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா... இறைவா..." என்று ரே-வதியை பா-ரதியாக கைவல்ய உணர்வு பெருக்கு கண்டார் தேவதேவன்.

சுகிர்த ராணியின் 'கைப்பற்றி என் கனவு கேள்' என்ற தொகுதிக்கு ஞானக் கூத்தன் முன்னுரை பகன்றுள்ளார். வழக்கம்போல் ந.பிச்சமூர்த்தியின் மரபில் வந்தவர் என்று கூறி தலித், பெண்ணியக் கவிதைகளும் இருப்பதாய் முரண்கொண்டு உருவகக் கலை கைப்பற்றியதாய் "அழகியல்" உருவேற்றினார்.


சல்மாவின் கவிதைகள் ஏற்கனவே விமர்சனம் செய்ய முடியாத நிலைக்கு உயர்த்தப்பட்டிருந்தது. இவர் மனுஷய்புத்திரன் என்கிற ஹமீதையே தனக்கு உந்துதலாக இயம்பினார். ராஜதுரை, ஞானி, சுந்தர ராமசாமி (நல்ல வேளையாக சி.சு.செ, க.நா.சு, அசோக மித்திரன் ஆகியோர் இல்லை) ஆகியோரோடு வ.கீதாவையும் உந்துதலாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் "னட்பிற்கான கதவுகளை"த் திறந்து விட்டதாய் கூறும் லல்லி என்ற பெண் உருவத்தை இறுதியாகவே குறிப்பிடுகிறார்.

பிரம்ம ராஜனோ மாலதி மைத்ரியின் எந்த வித சிக்கலுகளும், ஆழமுமற்ற வெறும் ஜோடனா ரக உரை நடைக் கூற்றுகளை மழைக்குரலாள் மாலதி என்று புகழ்கிறார்.

இவர்களில் அவ்வளவு பிரப்லமடையாத ஆனால் கொஞ்சம் உரத்தக் குரலில் பேசும் திலக பாமாவின் சூரியனுக்கு கிழக்கே தொகுதியின் மதிப்புரையில் பொன்னீலன் தான் சார்ந்த கருத்தியலுக்கேற்ப போதனா, பிரச்சாரா, முழக்கக் கூற்றுகளை தேர்ந்தெடுத்து மூச்சு முட்ட முட்ட புகழ்ந்து தள்ளுகிறார். திலக பாமாவின் இந்த தொகுதி குறித்து ஏற்கனவே நான் வெப் உலகம் இலக்கியம் பகுதியில் விமர்சனம் எழுதியிருந்தேன். வெறும் தேய்ந்த படிமங்களை வைத்துக் கொண்டு அசட்டு உணர்ச்சிப் பெருக்குகளை கவிதைகள் என்ற பெயரில் மடக்கி மடக்கி எழுதியுள்ளார் திலக பாமா.

சமீபத்தில் திராவிட பல்கலைக் கழகமும் காலச்சுவடும் இணைந்து நடத்திய பெண் கவிதைகள் குறித்த கருத்தரங்கில் தேவேந்திர பூபதி வாசித்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. மிகவும் எச்சரிக்கையாக விமர்சனத்தை மூடி மறைத்து, உப்புச்சப்பற்ற ஒரு கட்டுரையாக அது இருந்தது. ஒரு சில பெண் கவிஞர்களின் கவிதைகளை தேர்ந்தெடுத்து அதற்கு பொழிப்புரை கொடுத்திருந்தார் பூபதி அவ்வளவே. தமிழ்த்துறை பேராசிரியர் சீனிச்சாமி குட்டி ரேவதியின் கவிதைகள் சிலவற்றை புகழ்ந்து தள்ளியுள்ளார். Libidinal... என்று ஒரு அடையாள அட்டையையும் வழங்கியுள்ளார் சீனிச்சாமி. சீனிச்சாமி போன்றவர்களுக்கு தமிழ் இலக்கிய கோட்பாடுகளும், ஓரளவிற்கு மேற்கத்திய கோட்பாடுகளும் விமர்சனமும் பரிச்சயம்தான், ஆனால் ஆழமற்ற வெறும் விரகதாப, பொத்தாம் பொதுவான, உடலுறுப்புகளை எழுதுவதே உடல்மொழி பாலியல் மொழி என்று கதையடித்துக் கொண்டிருக்கும் குட்டி ரேவதியின் கவிதை வரிகளை புகழ்வதற்கு ஒரு அடிப்படையை கூட வழங்க முடியவில்லை என்பதுதான் அது போன்ற புகழுரைகள் மேல் நமக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

அறிவுமதி உள்ளிட்ட மலினவாத ஒழுக்க வாத போலி தமிழ் பண்பாட்டு பேணிகாத்தலுக்கும், சிறு பத்திரிக்கை அறிவியக்க அடைகாத்தலுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

இல்லையென்றால், எந்த வித தீவிர கேள்விகளையும்,மீறல்களையும் செய்யாத இந்த கவிதைகளை ஒரு கும்பல் பண்பாட்டை கெடுத்து விட்டதாய் அபாச கவிதைகள் என்று வெற்றுத் தாக்குதலுக்கு வினையாற்ற வேண்டிய கட்டாயமாய் இவையெல்லாம் அடைகாத்து பேணிகாக்க வேண்டிய பிரதிகள் என்ற மாயா முன்னுரைக் கவசங்களும் எதற்காக என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியதுதான்.

வெளிப்படையான பாலியல் வரிகள் ஒரு சிலருக்கு புறத்தே அருவருப்பை ஏற்படுத்தினாலும் ரகசியமாக அவற்றை படித்துப் பார்ப்பது ஒரு பாலியல் போலிப் பதிலீட்டு நடவடிக்கை. அடுத்தவர்களின் இன்பத் துய்ப்பை பார்த்து ரசிக்கும் ஒரு மனோ நிலையில் உள்ள வாசகர்களும் இந்த கவிதைகளுக்கு உண்டு. இது ஒரு ரகசிய நுகர்வுப் பொருளாகிறது.

தேவதேவனுக்கு குட்டி ரேவதியின் மனோ நிலை ஒரு துறவற மனோ நிலை. பிரம்ம ராஜனுக்கு மாலதி மைத்திரியின் மழைக்குரல் இயற்கை உலகின் ஆசுவாசம் மற்றும் பலருக்கு ரகசிய நுகர்வுக்கான பிரதிகள். ஆக எப்படிப் பார்த்தாலும் அவர்கள் விமர்சிக்கும் ஆணிய உலகிற்கு அவர்கள் கவிதைகள் உவப்பானதாய் இருக்கவில்லை. எந்த வித அதிர்ச்சியையும் ஏற்படுத்த வில்லை. அறிவார்த்த அதிர்ச்சியை ஏற்படுத்துவது வேறு, வெறும் பரபரப்பை உண்டாக்குவது வேறு. துறவு மனோ நிலை, இயற்கை உலகின் ஆசுவாசம், ரகசிய நுகர்வுக்கான ரசனை இந்த மூன்றுமே ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஆணியப் பார்வைகளே.

மாலதி மைத்ரி சங்கராபரணி என்ற கவிதை தொகுதிக்கு 'ஓரிரு வார்த்தைகள்' என்று முன்னுரை எழுதியுள்ளார். இதில் இவர் பெண்ணியமாக கூறும் கோட்பாடு காலாவதியான கோட்பாடே. தனது கவிதைகளில் வரும் நான்/நீ என்ற இருமை எதிர்வுகளை பால் அடையாளங்களாக பார்க்கவேண்டாம் என்று கோரிக்கை விடுகிறார். அது மிதக்கும்/திசைமாறும் என்பதாக பார்க்கப்படவேண்டுமாம். இப்படிப் பார்த்தால்தான் அவரது கவிதையின் எல்லை குறுகாதாம். கவிதையின் எல்லைகளை தீர்மானிக்கவேண்டியது வாசகன், ஆசிரியர் அல்ல. சரி மிதக்கும்/திசைமாறும் என்ற இருமை எவ்வாறு பாலின அடையாளங்களை இழக்கிறது என்பதையாவது விளக்கியிருக்க வேண்டாமா. 'வார்த்தையின் வாடை' கவிதையில் நான்/நீ அல்லது பாலியல் அடையாளங்கள் இல்லததற்கான அடையாளம் இல்லை. பாலியல் அடையாளங்களை துறந்து விட்டதாய் கூறிக்கொள்வது எவ்வளவு பெரிய சுய தம்பட்டம். பாலின பேதங்கள் மொழி உள்ளிட்ட பண்பாட்டின் அனைத்து சின்னங்களுமான பொதுவான குறியீட்டு ஒழுங்கிலேயே (Symbolic Order) இருப்பதாக பெண்ணிய வாதிகள் கூற, இவரோ பாலின அடையாளங்களை ஒரு சில தட்டையான கவிதைகளில் துறந்து விட்டதாய், கடந்து வந்து விட்டதாய் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். பெண் விடுதலை குறித்தும் இத்போன்ற சில அரிய முத்துக்களை உதித்துள்ளார் மாலதி மைத்ரி.

தொடரு‌ம்...

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!