இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலையை கண்டித்து இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் இணைந்து நீண்ட நாட்களாக உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றன.
உலக நாடுகளின் வலியுறுத்தல்களையும்,கொதிப்படைந்துள்ள உலகத் தமிழர்களின் ஆர்பாட்டங்களையும், கண்டிப்புகளையும் மீறி, ஏன் போரில் அழிந்து வரும் அப்பாவி தமிழர்களின் வாழ்விற்கான ஈனக் குரல்களையும் கூட கண்டுகொள்ளாது தமிழர்களை அழிப்பதையே முதல் குறிக்கோளாகக் கொண்டுசெயல்பட்டு வரும் சர்வாதிகாரி மகிந்தா ரஜபக்சவை செயல்களை கண்டிக்காது அவர் ஏதோ புனிதப் போரில் ஈடுபட்டிருப்பதாக வர்ணிக்கும் 'இந்திய தேசிய ஆங்கில நாளேடு', ராஜபக்சாவின் பிரதாபங்களையும் எழுதி வரும் இந்த சூழ்நிலையில், இன அழிப்பை தடுத்து நிறுத்தி போர் நிறுத்தம் கோரும் ஜனநாயகக் குரல்களும் பெரிதும் எழுந்து வருகின்றன.
webdunia photo
WD
இத்தகைய சூழலில்தான் தோழர் சி.மகேந்திரன் கடந்த ஓராண்டு காலத்தில் தினமணி, ஜனசக்தி நாளேடுகளில் எழுதிய 11 கட்டுரைகளின் தொகுப்பை பாவை வெளியீடு "இந்திய அரசே நியாயந்தானா" என்ற தலைப்பில் நூலாக பிரசுரம் செய்துள்ளது.
பொதுவாக இது போன்ற எழுத்துக்களில் உணர்ச்சித் தூண்டுதல் அதிகம் காணப்படும், அறிவார்த்த விசாரணைகளுக்கான தேவை இதுபோன்ற எழுத்துக்களில் காணப்படாது. ஆனால் தோழர் சி.மகேந்திரன் தரவுகளின் அடிப்படையில் அறிவுபூர்வமான வாதங்களுடன் தீவிர உணர்வு நிலையையும் கட்டமைக்கிறார்.
பொதுவாக தற்போதைய இலங்கை யுத்தத்தில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு விதமான அராஜக நிலைப்பாடுகளுக்கு எதிராக எழுதப்பட்டதே இந்த நூல். இந்த நூலின் அறிவார்த்த பகுதி என்று இதனை ஒருவாறாக குறிப்பிடலாம். சிங்கள ஏகாதிபத்திய இனப் படுகொலைகளை கண்டித்து எழுதிய பக்கங்களை நாம் உணர்வு எழுச்சி எழுத்தாக்கங்கள் என்று குறிப்பிடலாம். இந்த அறிவு/உணர்வு எதிர் நிலை ஒரு நூலை வாசிக்க வாசகன் ஒருவன் ஏற்படுத்திக் கொள்ளும் தற்காலிக கருத்தாக்கமே.
இருப்பினும் கேள்விகளையும் விமர்சங்களையும் எழுப்புவதே எந்த ஒரு எழுத்திற்கும் அதனை எழுதிய ஆசிரியருக்கும் ஒரு வாசகன் செய்யும் நற்கடமையாகும்.
அந்த விதத்தில் "இந்திய அரசே நியாயம்தானா" என்ற தலைப்பில் 17.9.2008அன்று தினமணியில் இவர் எழுதிய கட்டுரையை பார்ப்போம். அதாவது கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் விமானங்கள் குண்டுகளை வீசி விட்டுச் சென்ற சம்பவத்தை குறிப்பிட்டு மகேந்திரன் எழுதுகையில், இந்தத் தாக்குதலில் இலங்கை ராணுவம் அமைத்திருந்த விமான தளம் முழுதும் சேதமடைந்தது என்றும், இதில் 20 ராணுவத்தினர் பலியான செய்தியை குறிப்பிட்டுள்ளதோடு இரண்டு இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். தாக்குர், சிந்தாமணி ரௌத் என்ற இந்த இரண்டு இந்தியர்களுக்கு போர்ப்பகுதியில் என்ன வேலை? இதன் மூலம் இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்து வருவதை மிகச் சரியாக விமர்சித்துள்ளார் சி.மகேந்திரன். அதாவது நவீன ரேடார் கருவிகளை இந்தியா இலங்கை ராணுவத்திற்கு வழங்கியுள்ளது. இது மிகவும் அதிர்ச்சி தருவது, அதனை இந்திய மக்களிடம் மறைத்தது ஒற்றுமைக்கு நேர்ந்த ஆபத்தாகும்.
இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கும் போக்கை கண்டிக்கும் சி.மகேந்திரன் ஒரு இடத்தில் தவறான பார்வையில் விழுந்து விடுகிறார்.
அதாவது இராக் நாட்டிற்கு அனுப்பப்பட்டு வெறும் பிணங்களாக திரும்பிக் கொண்டிருக்கும் அமெரிக்க சிப்பாய்கள் இவரது நினைவுக்கு வருகிறது. மேலும், "ஒரு காலத்தில் இந்திய அமைதிப் படை இலங்கைக்கு சென்றது அப்போது இந்திய ராணுவம் சந்தித்தது இன்னமும் 'நம்' நெஞ்சத்தில் வேதனை தந்து கொண்டேயிருக்கின்றன" என்று கூறும் மகேந்திரன் 1,200 இந்திய ராணுவ வீரர்கள் மடிந்ததிலிருந்து இந்திய ராணுவம் படிப்பினை பெற்றுக் கொண்டது என்று அங்கலாய்க்கிறார்.
இந்திய ராணுவ வீரர்கள் மடிந்தது "நம்" நெஞ்சில் வேதனை தந்து கொண்டிருப்பதாய் எழுதும் சி.மகேந்திரன் இந்த "நம்" என்ற வார்த்தைக்கு என்ன பொருள் தருகிறார்? "நம்" என்பது எந்த நம்? யார் "நம்"? நம் என்பது தமிழர்களைக் குறிக்கிறதா, இந்தியர்களை குறிக்கிறதா?" இது போன்ற சொற்கள்தான் பொதுக் கருத்தை உருவாக்கும் சொற்களாகும். இவரின் இந்த சொந்த நிலைப்பாட்டை "நம்" நிலைப்பாடு என்று எவ்வாறு கூற இயலும்?
இது ஒரு மத்தியதர வர்க்க தேசியவாதப் பார்வை என்பதை மறுப்பதற்கில்லை. ஈராக்கில் அமெரிக்க ராணுவம் செய்யும் அட்டூழியங்களையும் ஐ.பி.கே.எஃப் ஈழத் தமிழர்களுக்கு செய்த அராஜகங்களையும் துரோகங்களையும் பலரும் கடுமையாக எதிர்த்து எழுதி வரும் நிலையில் மார்க்சிய சிந்தனையாளரான மகேந்திரன் இந்திய ராணுவ வீரர்கள் மடிகின்றனரே என்று மத்திய தர வர்க்க தேசிய வாதப் பார்வையில் வீழ்ந்து விடுகிறார். இது ஒரு சறுக்கலே.
இன்னொரு பார்வையும் நமக்கு புரிபடவில்லை. இந்தியா ரேடார் சாதனங்களை இலங்கைக்கு கொடுத்துள்ளது. சரி. அதனை என்ன இலங்கை விண்வெளி ஆராய்ச்சிக்காகவா பயன்படுத்தும்? போர் பயன்பாடு அல்லாது எந்த ராணுவக் கொள்முதல் இருந்துள்ளது? ஆனால் இலங்கை விமானப் படை வெறும் பெயரளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அதன் தொழில் நுட்ப குறைப்பாட்டை குறிப்பிடும் மகேந்திரன், புலிகளிடம் உயர் தொழில் நுட்ப விமானங்கள் இருப்பதை ஒரு வித வெற்றியுடன் குறுப்பிடுகிறார். இந்த போர்ச் சொல்லாடலுக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே இந்தியா அளித்துள்ள ரேடார் சாதனங்கள் போரற்ற இலங்கை என்ற நோக்கத்திற்காக பயன்படவில்லை என்று கூறுவது சுய விமர்சனமற்ற சுய முரண்பாடாகவே தோன்றுகிறது.
அப்போது போரற்ற இலங்கைக்கு ரேடார் சாதனங்கள் கொடுக்கலாம். போரற்ற எந்த ஒன்றுக்கும் ஆயுதங்கள் விற்கலாம். எந்த ஒரு நாட்டின் சூழலும் போரற்ற பயன்பாட்டிற்காக என்று தனியாக எந்த ஒரு பயன்பாட்டையும் வைத்துக் கொள்ள முடியாது. இப்போதுதான் 9/11-ற்கு பிறகான காலக் கட்டம், சமூகம், அரசியல் என்றெல்லாம் நாம் பேசத் துவங்கியுள்ளோம். "பயங்கரவாத எதிர்ப்புப் போர்" என்ற ஒரு அட்டை எந்த ஒரு போரையும், இன அழிப்பையும் நியாயம் செய்யும் ஒரு சொல்லாடலாக இருந்து வருகிறது. இலங்கையிலும் கூட தமிழினத்திற்கு எதிரான போர் 'பயங்கரவாத எதிர்ப்புப் போர்' என்றே கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் இலங்கையில் நடைபெறுவது உள் நாட்டுப் போர் அல்ல, அது பன்னாட்டுப் போர்தான் அதாவது ஒரு அமைப்பு பல நாடுகளை எதிர்த்துப் போரிடுகிறது. இதில் போர் பயன்பாடற்ற ஒரு ராணுவ அல்லது வணிக ஒப்பந்தம் என்ற ஒன்று உண்டா என்று தெரியவில்லை. இந்தியா ஏன் செய்தது? அதை ஏன் இப்போது செய்தது? என்ற கேள்வியே இன்று எழுப்பப்பட வேண்டியது.
இதே கட்டுரையில் மறைந்த தலைவர் இந்திரா காந்தி இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு முழு உரிமை பெற்றுத் தருவதில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். இது போன்ற கூற்றுக்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது. இந்திராகாந்தி செய்ததும் ஒரு போர்த்தந்திர, ராஜ தந்திர நடைமுறைதான் என்ற மாற்றுப்பார்வைகள் உள்ளன. அதேபோல் மத்தியில் ஆட்சி தொடர்ந்து ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சியின் தமிழர்கள் மீதான 'பற்றுதல்' மிகவும் கேலிக்குறியதாகும்.
தோழர் மகேந்திரனே கூட குறிப்பிட்டுள்ளார். லால்பகதூர் சாஸ்திரி-சிரிமாவோ உடன்படிக்கை 6 லட்சம் மலையகத் தமிழர்களை எப்படி இந்தியாவிற்கு அகதிகளாக வெளியேற்றியது என்பதை.
இன்னொரு இடத்திலும், மன்னார் வளைகுடாவை இலங்கை ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கான இடமாக பயன்படுத்தி வருகிறது என்ற தகவலைக் கூறியுள்ள தோழர் மகேந்திரன், இதனைத் தடுக்கவாவது இந்தியா, தற்போது தமிழர்கள் மீது நடட்த்தப்பட்டு வரும் போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
சீனா, இந்தியா, பாகிஸ்தான் இன்னமும் சரிவர வெளியில் தெரியாத ராணுவ விற்பனைகளையும் பல்வேறு நாடுகள் இலங்கைக்கு செய்து வருகின்றன. அனைவரும் தங்களது சொந்த நாட்டு எல்லைப் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல்தான் இதனை செய்து வருகின்றனர்.
இதில் பாகிஸ்தான் ஆயுதம் விற்பதை தடுக்கவாவது இந்தியா போர் நிறுத்தக் கோள்கையை இலங்கைக்கு வலியுறுத்த வேண்டும் என்று கூறுவது மீண்டும் ஒரு மத்திய தர வர்க்க தேசிய வாதப் பார்வையாகும். ஏற்கனவே இந்திய மத்திய தர வர்க்கத்திற்கும், மேட்டுக் குடி வர்க்கத்திற்கும், ஏன் இந்திய பொதுப் புத்தியிலும் நிண்ட நாட்களாக நிலை பெறச் செய்யப்பட்ட பாகிஸ்தான் துவேஷம் என்ற பார்வையைத்தான் இது வேறு மொழியில் பறை சாற்றுவதாய் அமைகிறது.
இந்த நூல் நெடுக நிறைய இடங்களில் இந்திய பாதுகாப்பு பிரச்சனை குறித்து மகேந்திரன் குறிப்பிட்டுச் செல்கிறார். இன்றைய காலக் கட்டத்தில் ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது அந்த நாடு மட்டுமே கையாளக் கூடிய விஷயம் என்பதிலிருந்து மாறியுள்ளது. இந்திய - சீன ராணுவ கூட்டு பயிற்சி, இந்திய அமெரிக்க, ரஷ்ய ராணுவங்களின் கூட்டுப் பயிற்சி என்று அனைத்துமே, தேசப் பாதுகாப்பும் கூட உலக மயமாகி விட்டன. இந்திய பாதுகாப்பு என்ற கற்பனையான காரணங்களைக் காட்டித்தானே இன்று விடுதலைப் புலிகளை அழிக்க ஆயுத உதவி செய்வதாய் தமிழர்கள் அழிப்பிற்கு மத்திய அரசு காரணம் கூறி வருகிறது? அதனால் இந்திய பாதுகாப்பு என்ற பிரச்சனையை தோழர் சி.மகேந்திரன் தனது பத்திகளில் கறார் விமர்சனங்களுக்கு உட்படுத்தவில்லை.
இந்த நூலில் "இந்த அவமானம் தேவைதானா" என்ற பத்தியும் நாம் மேற்கூறிய கோணத்திலிருந்து விமர்சனத்திற்குரியது.
இந்த நூலில் "இந்த அவமானம் தேவைதானா" என்ற பத்தியும் நாம் மேற்கூறிய கோணத்திலிருந்து விமர்சனத்திற்குரியது.
தலைமன்னார், கொழும்பு ஆகிய இடங்களில் விடுதலைப் புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றதற்கு இந்தியா இலங்கைக்கு அளித்த ரேடார் சாதனங்களின் கோளாறுகளே காரணம் என்று ஜனதா விமுக்தி பெரமூனா நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் கேரது குற்றம்சாட்டியுள்ளதை குறிப்பிட்டுள்ள தோழர் சி.மகேந்திரன் இந்தக் குற்றச்சாட்டை இந்திய அரசுக்கு நேர்ந்த அவமானமாக கருதுகிறார்: "ஆயுத உதவியையும் செய்து இத்தகைய கேவலமான அவப்பெயரையும் நாம் சூட்டிக் கொள்ளவேண்டுமா?" என்று கேள்வி எழுப்புகிறார். மேலும் 'தமிழர்களாகவும், இந்தியர்களாகவும் வாழும் நமக்கு ஒரு அவமான உணர்ச்சியை இது தோற்றுவிக்கிறது' என்றும் கூறுகிறார்.
ஒரு பொருளை வாங்கும் ஒரு நுகர்வோன் அது சரியாக வேலை செய்யவில்லை என்று கூறுவது இயல்புதான். இதனால் அதனை விற்பனை செய்த நிறுவனம்தான் அவமானப்படவேண்டும், இது போன்ற ஆயுத விற்பனைகளும் அந்த நுகர்வோரிய தர்க்கத்திற்கு உட்பட்டதுதான். இதில் விற்பனை செய்த இந்தியா என்ற நிறுவனத்திற்கு ஏற்பட்ட அவமானம் எப்படி 'நமக்கு' ஏற்பட்ட அவமானமாகும்?
இலங்கைக்கு போர் உதவிகளை செய்துவருவதை விட இந்த அவமானம் அவ்வளவு பெரிய அவமானமா என்ன? மத்தியில் ஆளும் அரசிற்கு ஏற்பட்ட அவமானம் எப்படி இந்தியாவிற்கு ஏற்பட்ட அவமானமாகவோ, 'தமிழர்களாகவும், இந்தியர்களாகவும் இருக்கும்' 'நம்' அவமானமாக மாறும். தேசப்பற்று வேறு, ஆளும் அரசு மீதான பற்றுதல் வேறு. நாம் எப்போதும் அரசு மீதான பற்றுதலை நாட்டின் மீதான பற்றுதலாக மயங்குவதன் விளைவுதான் இந்தக் கட்டுரையின் தலைப்பு.
இந்தியர்களாயும், தமிழர்களாயும், மனிதர்களாயும் அவமானப்பட ஏராளமான விவகாரங்கள் இந்தியாவில் நடைபெற்றுவருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான உழவர்களின் தற்கொலை, 2002ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் வன்முறை, சீக்கியர்களுக்கு எதிரான ரத்த வன்முறையில் பங்கு பெற்ற ஜக்தீஷ் டைட்லரை குற்றமற்றவர் என்று சி.பி.ஐ. தீர்ப்பளித்தது.
பாபர் மசூதி இடிப்பு, கந்தால்மாலில் கிறித்துவர்களுக்கு எதிராக இந்து வன்முறையாளர்கள் நடத்திய அராஜகம், மலேகான் குண்டுவெடிப்பில் இந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு இருக்கும் தொடர்பு, பாகிஸ்தானில் இந்திய உளவு அமைப்பன 'ரா' செயல்படும் விதம் என்று நாம் அவமானப்படுவதற்கு ஏராளமாக உள்ளன. இந்திய ரேடார் சாதனத்தின் தொழில் நுட்ப கோளாறுகளுக்காக நாம் அவமானப்படவேண்டிய அவசியமில்லை.
இந்தப் பார்வை மீண்டும் ஒரு மத்திய தர வர்க்க தேசிய வாதப்பார்வையின் எச்ச சொச்சமாக விளங்குகிறது.
கடைசியாக நாம் "ஈழத்தில் கொட்டும் கோடிகளும், ஏலம் போன மகாத்மாவின் பொருட்களும்" என்ற கட்டுரையின் மீது நம் கவனத்தை திருப்புவோம்.
மகாத்மா காந்தி இந்திய மக்களுக்கு மட்டுமின்றி உலக மக்களின் அமைதிக்காகவும், உலக நாடுகளிடையே அமைதிக்காகவும் உருவாக்கிய அகிம்சை, மத சகிப்புத் தன்மை, உலகளாவிய மனித நேயம் போன்ற லட்சியங்கள் இன்று காற்றில் கரைந்து காணாமல் போயுள்ள நிலையில். அவரது செருப்புகள், கைக்கெடிகாரம், மூக்குக் கண்ணாடி ஆகியவற்றை மட்டும் ஏலத்திலிருந்து பாதுகாத்து இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வருவதில் என்ன பயன்? உயரிய கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு அவரது பொருட்களை நினைவுச் சின்னமாக மீட்பதில் என்ன பெரிய தேசப்பற்று துளிர்விடும்?
ஆனால் தோழர் மகேந்திரனின் அக்கறை வேறு. வாழ் நாள் முழுதும் மனித நேயத்தை வலியுறுத்தி வந்து அதற்காக உயிரையும் துறந்த மகாத்மா காந்தி உருவான மண்ணில், அவர் கலைக்க வலியுறுத்திய ஒரு கட்சி இலங்கையில் நடக்கும் இன அழிப்புப் போருக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தேசத் தந்தையின் நினைவுச்சின்னங்களை மீட்க சில கோடிகளைக் கூட செலவு செய்யவில்லையே என்பதுதான் தோழர் மகேந்திரனின் கேள்வி.
அதுவும் காந்தியின் நினைவுச் சின்னங்களை சாராய வியாபாரி விஜய் மல்லையா இந்தியாவிற்கு திரும்பக் கொண்டுவந்தது, மதுப்பழக்கத்தை எதிர்த்து வந்த காந்தியின் கொள்கைக்கு நிகழ்ந்த நகைமுரணான நிகழ்வு என்று சரியாக குறிப்பிடுகிறார் மகேந்திரன்.
ஆனால் நம் கேள்வி என்னவெனில், இன்று காந்தியின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்ட காங்கிரஸ் கட்சி, அதற்கு எதிர் நிலையில் இஸ்லாமிய எதிர்ப்பை ஊட்டி வளர்த்த வீர சவர்க்கரின் படத்தை நாடாளு மன்றத்தில் மாட்டிய ஆர்.எஸ்.எஸ். சார்பு பாரதீய ஜனதா என்று காந்தி இந்திய அரசியல் மனங்களின் நனவிலிருந்து கூட விரட்டப்பட்டுள்ளார். இதில் காந்தி பயன்படுத்திய பொருட்கள் மீண்டும் இங்கு கொண்டு வரப்படுவதானால் என்ன இந்திய தேசியம் எழுச்சி பெற்று விடப்போகிறது?
மேலும் இந்த கட்டுரைத் தொகுப்பில் இலங்கை அராஜகம், அதற்கு இந்திய அரசு அப்பட்டமாக துணைபோவது பற்றிய நமது ஆங்கில ஊடகங்களின் இருட்டடிப்புகளை தோலுரிக்க தவறிவிட்டார் சி.மகேந்திரன். இலங்கை பற்றி இன்று எழுந்துள்ள பொதுப்புத்தி கருத்தாக்கங்களுக்கு இந்த ஆங்கில ஊடகங்களும் தமிழில் துக்ளக் போன்ற பத்திரிக்கைகளும் பெரிதும் காரணமாகின்றன. அது பற்றியெல்லாம் தோழர் விமர்சனம் செய்யவில்லை.
விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இந்த பிரச்சனை அணுகப்படுவதை தவிர்க்க தோழர் சி.மகேந்திர அந்த இயக்கம் பற்றி குறிப்பிடுவதை தவித்திருக்கலாம். ஆனால் இந்த 25 ஆண்டுகால போரில் விடுதலைப் புலிகளின் பங்கு பற்றி உடன்பாடாகவோ அல்லது முழுதும் விமர்சனப்பூர்வமாகவோ ஏதோ ஒன்றை எழுதியிருக்கலாம் அத்தகைய பார்வைகளும் இந்த நூலில் இல்லை என்பது மிகப் பெரிய குறை. ஒரு இடத்தில் ஆயுதப் போராட்டம் எழுந்ததற்கான வரலாற்றுச் சூழலை மட்டும் குறிப்பிட்டுச் செல்கிறார். ஆனால் இந்த 25 ஆண்டுகாலங்களில் இவர்களது பங்கு என்ன என்பதைப் பற்றிய ஆழமான பார்வைகள் இந்த நூலில் இல்லை என்பது வருந்துதற்குரியது.
இது போன்ற கேள்விகளுக்கு அப்பால் தோழர் சி.மகேந்திரனின் இந்த நூல் முக்கியமானது. இதில் மலையகத் தமிழர்கள் பற்றிய வரலாற்றுத் தரவுகளுடனான கட்டுரை முக்கியமானது. ஆனால் இதில் உள்ள தகவல்கள் கூட ஏற்கனவே பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டதே.
இலங்கைக்கு நேரடியாக சென்று அங்குள்ள நிலவரஙளை "தீக்குள் விரலை வைத்தேன்" என்ற நூலாக தோழர் சி.மகேந்திரன் எழுதி அது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் தோழர் சி.மகேந்திரனின் அர்ப்பணிப்பு உணர்வும், அது சார்ந்த களப்பணியும் இந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட சாதனைகளாகும்.
இந்த விதத்தில் இந்த நூலில் உள்ள கட்டுரைகளும் அவரது களப்பணி என்ற அத்தியாத்தின் ஓரு முக்கிய அங்கம் என்பதை மறுப்பதற்கில்லை.