Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேற்று கிரகம் மோதியதில் உருவான நிலா

வேற்று கிரகம் மோதியதில் உருவான நிலா
, சனி, 7 ஜூன் 2014 (11:17 IST)
பூமி உருவாகிவந்த சமயத்தில் அதன் மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.

நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் அப்போலோ விண்கலத்தில் நிலவுக்கு சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துவந்த நிலவுப் பாறைகளில் இரசாயன ஆய்வுகளை மேற்கொண்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் இதனைத் தெரிவிக்கின்றனர்.
 
நானூற்றைம்பது கோடி ஆண்டுகள் முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கிரகம் வந்து பூமியின் மீது பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள் தான் பூமியைச் சுற்றி ஒன்றுதிரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்துவருகிறது.
 
சூரிய குடும்பமும் உருவான விதம் தொடர்பான சாத்தியக்கூறுகளை கணினிகள் மூலமாக அனுமானித்தபோதும் நிலவு உருவானதற்கு பொருந்திவரக்கூடிய விளக்கமாக இதுதான் இருந்துவருகிறது.
 
தியா
 
ஆனால் இந்த கோட்பாட்டுக்கு தடய பூர்வ ஆதாரம் எதுவும் அதற்கு இதுவரை இல்லாமல் இருந்துவந்தது.
அப்படி வந்து மோதியதாக கருதப்படும் கிரகத்துக்கு கிரேக்க புரானத்திலிருந்து எடுத்து தியா என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்திருந்தார்கள்.
 
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுப் பயணம் சென்று அங்கிருந்து பாறைகளை எடுத்து வந்த பின்னர் அதில் செய்யப்பட்டிருந்த ஆய்வுகளை வைத்து, நிலவுப் பாறைகள் முழுக்க பூமியிலிருந்து சென்றவைதான் - அதாவது பூமிப் பாறைகளில் காணப்படும் இரசாயன மூலக்கூறுகளும் அடையாளங்களும்தான் அந்த பாறைகள் முழுமையிலும் தென்பட்டதாக கருதப்பட்டது.
 
ஆக்ஸிஜன் ஐசடோப்
 
ஆனால் மேலும் நூதனமான ஆய்வுகளை தற்போது நிலவுப் பாறைகளில் மேற்கொண்டபோது, பூமிப் பாறைகளின் இரசாயன கூற்றுக்கு சம்பந்தமில்லாத வெளிக்கிரக தோற்றத்துக்கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனியிலுள்ள கொயெடிங்கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
பூமிப் பாறைகளுக்கும் நிலவுப் பாறைகளுக்கும் இடையில் சிறு வித்தியாசம் இருப்பதை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், இரண்டு கிரகங்கள் மோதிக்கொண்ட கோட்பாட்டை ஆதரிப்பதாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளதென்றும் ஆய்வை வழிநடத்திய டாக்டர் டேனியல் ஹெர்வார்ட்ஸ் கூறினார்.
 
பாறைகளில் காணப்படும் ஆக்ஸிஜன் ஐசடோப்களுடைய கலவைகளுக்கிடையில் வித்தியாசங்களை அளந்து டாக்டர் ஹெர்வார்ட்ஸ் இந்த ஆய்வை செய்துள்ளார்.
 
பூமிப் பாறைகளில் ஆக்ஸிஜன் ஐசடோப்களுடைய கலவை ஒரு விதமாகவும், நிலவுப் பாறைகளில் அது வேறு விதமாகவும் இருப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
 
ஆனால் நிலவுப் பாறையில் வேற்று கிரக தோற்றத்தைக் குறிக்கக்கூடிய அந்த வித்தியாசம் மிகக் குறைவாகவே தென்படுகிறது.
 
எனவே வேற்று கிரகம் பூமியின் மீது மோதியதென்ற கோட்பாடு சரியாக இருக்குமா என்று சில விஞ்ஞானிகள் இப்போதும் ஐயம் எழுப்புகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil